என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வருகிற அக்டோபர் மாத மத்தியில் 3-வது அலை வரும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதை எதிர்கொள்ள புதுவை சுகாதாரத்துறை தயாராக உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்.

    பின்னர் பொதுமக்களிடம், கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இதுவரை முதல் தவணையாக 6 லட்சத்து 18 ஆயிரத்து 118 பேரும், 2-வது தவணையாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 539 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் 10 லட்சம் பேர். இதில் 60 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    கடந்த மாதத்துக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டோம். சில காரணங்களால் இந்த இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை. இதற்கு மக்களின் தயக்கம் தான் காரணம். நமது மாநிலத்தை பொறுத்தவரை தங்குதடையின்றி தடுப்பூசி கிடைத்து வருகிறது. வருகிற அக்டோபர் மாத மத்தியில் 3-வது அலை வரும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதை எதிர்கொள்ள புதுவை சுகாதாரத்துறை தயாராக உள்ளது.

    3-வது அலை வரக்கூடாது என்பதே நம் எண்ணம். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 3-வது அலையை நாம் தடுக்க முடியும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக இருந்தால் கொரோனா நம்மை நெருங்க முடியாது.

    பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இணை நோய் உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தான் தடுப்பூசி போடவில்லை. இதேபோல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக அங்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழக பாடத்திட்டத்தை நாம் பின்பற்றுவதால் புதுவையிலும் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

    எந்த விதத்திலும் மக்கள் சேவை தடைபடக்கூடாது என என் தாயார் அடிக்கடி என்னிடம் கூறுவார். அதனால் பணிக்கு திரும்பியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வில்லியனூர் அருகே கத்தியால் கழுத்து-கையை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரம்மேடக் அசோக்நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவரது மகள் ஸ்பண்டனா (வயது30). இவர் வில்லியனூர் அருகே அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை மருத்துவம் (எம்.டி). 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்பண்டனா சொந்த ஊருக்கு சென்ற போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு திரும்பினார். அதுமுதல் ஸ்பண்டனா சோர்வாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்பண்டனா பக்கத்து அறையில் தங்கியிருக்கும் தனது தோழி தரணியாவை சந்தித்து பேசி விட்டு விடுதி அறைக்கு சென்றார். நேற்று மதியம் 3.30 மணி வரை ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை. அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அறை கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் துப்பட்டாவால் ஸ்பண்டனா தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு விடுதி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    ஸ்பண்டனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி இருந்தது.

    இதுகுறித்து விடுதி வார்டன் டாக்டர் லதா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மாணவி ஸ்பண்டனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவி ஸ்பண்டனா தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் புதுவை விரைந்துள்ளனர்.
    விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் ஊர்வலத்தின் அவசியம், இந்து சமுதாய ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பத்து ஏழை மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார், ஊர்வலத்தின் அவசியம், இந்து சமுதாய ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து, கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக, இந்த ஆண்டு, காரைக்காலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் கரைப்பது, விழாக்குழு பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிர மணியன், செந்தில்குமார், ராமகலிய மூர்த்தி, நெல்லை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி  மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின், பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்ட வரையறை தயார் செய்து மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    இந்நிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்று காலை கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். மாலையில் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.260 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. சில பணிகளுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. நகர பகுதிகளில் மின் விளக்கு மாற்றி அமைத்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கல்வே காலேஜ், வ.உ.சி. பள்ளிகளை பழமை மாறாமல் புனரமைக்க உள்ளோம்.

    கடற்கரை சாலையை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளிலும் நீட்டிக்கும் திட்டம் உள்ளது. இந்த சாலையானது வடக்கு பகுதியில் கோட்டக்குப்பம் எல்லை வரை நீட்டிக்கப்படும். இதேபோல் பார்க்கிங் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர் விடப்படவுள்ளது. அண்ணா திடலை அழகான திடலாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணிகளை செயல்படுத்தும்போது அது வெளியே தெரிய 6, 7 மாதங்கள் ஆகும். புதுச்சேரி நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல பணிகளை தொடங்கியுள்ளோம் என கூறினார்.
    புதுச்சேரியில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

    கர்நாடக மாநிலத்தில் இன்று 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து வருகிற 1-ந்தேதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுச்சேரியில் டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். எனவே அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது சென்னையில் உள்ளார்.

    இந்த நிலையில் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. எனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை பார்த்த அவர் சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பெண்ணுக்கு வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47). தனியார் கல்லூரி பேராசிரியர். இவருக்கு வனிதா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளின் படிப்புக்காக உதயகுமார் நைனியப்பப்பிள்ளை வீதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி உதயகுமார் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் கடந்த 19-ந்தேதி அதிகாலை வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி முதல் மந்திரியாக என்.ரங்கசாமி கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர் (கோவிஷீல்ட்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

    சுகாதாரத் துறை ஏற்பாட்டின் பேரில் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதார குழுவினர் முதல் மந்திரி ரங்கசாமி  வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தினர்.

    முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் அருண் முதல் மந்திரியின் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
    நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 3 பேர் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள், நெட்டப்பாக்கம் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்ற பிரகாஷ் (வயது 24), ஏரிப்பாக்கம் புதுகாலனி விஜயபிரபாகரன் (25), ராமரெட்டிகுளம் சிவா (24) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    ஆனால் புதுவையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆங்காங்கே லேசான மழை மட்டுமே பதிவானது. ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை.

    இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதன்படி புதுவையில் இன்று அதிகாலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. காலை 6 மணியவில் பயங்கர இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து 6.15 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கியது.

    நகர பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை, அஜந்தா சிக்னல், புஸ்சி வீதி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மேகம் இருண்டு வானம் மூடி காணப்படுவதால் இருள் சூழ்ந்துள்ளது.
    சிறை கைதிகள் 7 பேர் திடீரென உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி கைதிகள் அறைகளிலிருந்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கடந்த 12-ந் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    அப்போது சிறை கைதிகள் 7 பேர் திடீரென உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    உடனே அவர்களை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக காலாப்பட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை , ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மயங்கி விழுந்த அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காலாப்பட்டு ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகத்தை சீர் செய்து கூட்ட அரங்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டார்.

    புதிய அரசின் முதல் கூட்டமாக இது அமைகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.

    வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. வருகிற 23-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது.

    சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகத்தை சீர் செய்து கூட்ட அரங்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இருக்கைகளை தூய்மைப்படுத்துவது, ஒலிபெருக்கிகளை சரிசெய்வது, குளிர்சாதனங்கள் சரிவர இயங்குகிறதா? என்பன போன்ற பணிகளை சட்டசபை ஊழியர்கள் நேற்று மேற்கொண்டனர்.


    ×