என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓணம் பண்டிகையானது புதுச்சேரி மாநில மக்கள் அனைவரது இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மாகி பகுதி மக்களுக்கும், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    சாதி, மத வேறுபாடின்றி மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அறுவடை திருநாளாவும், வளமை மற்றும் செழுமையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையானது புதுச்சேரி மாநில மக்கள் அனைவரது இல்லங்களிலும் எல்லா வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

    அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலமிட்டு தோரணம் கட்டி மகிழ்ச்சி பொங்க மகாபலி மன்னன் வரவேற்கும் ஓணம் பண்டிகை இன்றளவும் மலையாள மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். மகாபலி மன்னனை வரவேற்கும், அதேவேளையில் இயற்கை அன்னையையும் வணங்கி வரவேற்பது ஓணம் பண்டிகைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். அதன்படி ஓணம் பண்டிகை திருநாளில் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓணம் பண்டிகை அனைவருக்கும் தேவையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தரட்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள துன்பங்களை இத்திருநாள் நீக்கட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வில்லியனூர் அருகே பெயிண்டர் மயங்கி விழுந்து இறந்து போனார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி பெரியார் வீதியில் வசித்து வந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 35). பெயிண்டர். இவரது மனைவி பூவரசி இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் தட்சணாமூர்த்திக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அதுபோல் நேற்று முன்தினம் காலை தட்சணாமூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் வீட்டுக்கு வந்த தட்சணாமூர்த்தி நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி பூவரசி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தட்சணாமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தட்சணாமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி பூவரசி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வம்பா கீரப்பாளையத்தில் மீனவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பா கீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கவுரி. இவர்களது மகன் செல்வம் (வயது 22).

    செல்வத்தின் பெற்றோர் இறந்து விட்டதால் அவர் தனது சித்தப்பா கண்ணதாசன் பராமரிப்பில் இருந்து வந்தார். செல்வம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென செல்வம் வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனே உறவினர்கள் செல்வத்தை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை மாநிலம் முழுவதும் 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,22,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 5024 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 97 பேருக்கு தொற்று உறுதியானது. புதுவையில் 59 பேரும், காரைக்காலில் 17 பேரும் ஏனாமில் 4 பேரும், மாகியில் 17 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் ஜிப்மர் மருத்துவமனை, 22 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனை, 18 பேர் கோவிட் கேர் சென்டர் என மொத்தம் 179 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 784 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலம் முழுவதும் 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் இதுவரை 1,22,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று 105 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை 1,20,004 பேர் குணமடைந்துள்னர். இன்று புதுவையின் 4 பிராந்தியங்களிலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கை 1806 ஆக உள்ளது.

    இந்த தகவல்களை சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

    முகரம் என்றால் மன்னித்தல் என்பது பொருளாகும். முகரம் மாதத்தின் 10-ம் நாள் தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    புதுச்சேரி:

    முகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த முகரம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முகரம் என்றால் மன்னித்தல் என்பது பொருளாகும். எனவே இதை புனித மாதமாக கொண்டாடுகின்றனர். முகரம் மாதத்தின் 10-ம் நாள் தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னித்தல் மற்றும் தியாகம் ஆகிய 2 உயர்ந்த பண்புகளை அடிப்படையாக கொண்ட முகரம் பண்டிகை நன்னாளில் 2 பண்புகளை நம் வாழ்வின் கொள்கைகளாக கொள்ள உறுதியேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை சட்டசபை கூடும் 26-ம் தேதியில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்  கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம்  அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று  வெளியானது.

    இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    15-வது புதுச்சேரி சட்டசபை வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை அலுவலகத்தில் மீண்டும் கூடுகிறது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்துகிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 151 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் 169 பேர், வீடுகளில் 764 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 74 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை.

    புதுவையில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 2 பேர், பொதுமக்கள் 2 ஆயிரத்து 194 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரத்து 322 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 151 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரள மாநில பகுதியில் இருக்கும் மாகியில் மட்டும் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
    ஐதராபாத்:

    புதுவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை பகிர்ந்துள்ள இரங்கல் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்துசென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாழ்க்கையில் நீ எந்த அளவுக்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் என் தாயார்.

    என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.


    இதையும் படியுங்கள்...எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
    கோட்டக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்பவருடன் சேர்ந்து தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை நேருவில் நகர் சுவாமி விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் புஷ்பலதா (வயது 56). இவரது மகள் பிரேமா (வயது 32). இவர் மடுகரைபேட் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    பிரேமாவுக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திருமணத்துக்காக 35 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு இருவரும், திருமண வேலைகள் சம்பந்தமாக வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். நள்ளிரவு வரை தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். அப்போது வீட்டுக்கு புகுந்த மர்மநபர்கள் 2 பேர், தாய், மகளை மடக்கி கீழே தள்ளி வாயை பொத்தினர். அதில் ஒருவன் கத்தியை எடுத்து சத்தம்போட்டால் குத்திக்கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தாயையும், மகளையும் கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

    இதற்கிடையே ஒரு வழியாக பிரேமா கட்டுக்களை அவிழ்த்தார். பின்னர் அவர், செல்போன் மூலம் தனது சித்தி மகன் குமரன் மற்றும் உறவினர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் வீட்டுக்கு வந்து 2 பேரையும் மீட்டனர்.

    இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது அறை இருட்டாக இருந்ததால் கொள்ளையடிக்க வந்தவர்களின் முகம் தெரியவில்லை. ஆனால் அவர்களில் ஒருவன் தங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லும் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (22) என்பவரது பேச்சு போல் இருந்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அய்யனாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், கோட்டக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (22) என்பவருடன் சேர்ந்து தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    படித்த இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை தாவரவியல் பூங்காவில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. அனில்பால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தியாகிகளை கவுரவித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, இனிப்பு வழங்கினார்.

    விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் வினயராஜ், வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தியாகிகளால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. அவர்களை கவுரவிப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது நமது கடமை. புதிதாக தொழிற்சாலைகளை கொண்டுவருவதும் நமது கடமை. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். படித்த இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    தற்போது விவசாயம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே விவசாயிகளை உற்சாகப்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும். விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதியோர், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியத்திற்கு மேலும் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 49 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 86 பேர் குணமடைந்தனர். தற்போது 192 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 700 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 484 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரத்து 138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக பரிசோதனை எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைந்ததால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை 5 ஆயிரத்துக்கும் மேல் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பள்ளிகளை பொறுத்தமட்டில் அவசரமாக திறக்க முடியாது. சில மாநிலங்களில் திறந்துவிட்டு மூடியுள்ளனர். சில மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க இருக்கிறார்கள்.
    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. பக்தர்கள் அரவிந்தர், அன்னையின் சமாதியில் தரிசனம் செய்தனர்.

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை அஜாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயாில் ஒரு உற்சவமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது.

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி மத்திய கலாசாரத்துறை ஒரு குழுவை அமைத்து ஆண்டு முழுவதும் இது விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியிருக்கிறது. முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து அதேபோல ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன்.

    ஆகஸ்டு 15-க்குள் 100 சதவீத தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு செயல்பட்டோம். தற்போது 60 சதவீத தடுப்பூசி செலுத்தியுள்ளோம். மக்கள் இன்னும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தால் 100 சதவீதத்தை எட்டியிருக்க முடியும். நம்முடைய நடவடிக்கைகளால் 38 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கிராமங்களாக மாறியுள்ளன. இரவில் சென்று தடுப்பூசி போடும் முறையையும் புதுச்சேரியில்தான் நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

    புதுவையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வி நிறுவனங்கள், துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர் அனைவரையும் கலந்தாலோசித்து 20-ந்தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க கல்வித்துறையை கேட்டுள்ளேன். அதன்பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

    பள்ளிகளை பொறுத்தமட்டில் அவசரமாக திறக்க முடியாது. சில மாநிலங்களில் திறந்துவிட்டு மூடியுள்ளனர். சில மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பாகவே நாம் வாட் வரியில் 2 சதவீத்தை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.80 குறைத்தோம்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்ற சாமி கும்பிட்டார். அப்போது கோவில் யானை லட்சுமிக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார்.



    ×