என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    புதுவை:

    புதுவையில் தேர்தல் சமயத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, கடந்த மே உச்சமடைந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா இல்லாத மாநிலமாக புதுவையை நிலைநிறுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும் என சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

    எனது அன்பிற்கும், மரியாதைக்குரிய புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    இந்த நாளில் விடுதலைக்காக போராடி இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். புதுவை மாநிலத்தில் மீண்டும் நேர்மையான வெளிப்படையான மக்களாட்சி மலர்ந்திட அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 4-வது முறையாக எனது தலைமையில் ஆட்சி பொறுப்பேற்க செய்துள்ளீர்கள்.

    எனது அரசு மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தை நன்கறிவேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அளித்த வாய்ப்பை தொடர்ந்து சேவை செய்ய பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நம் மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்து விவசாயிகளின் சவால்களுக்கு தீர்வு காணவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் நானோ யூரியாவை கடந்த ஜூலை 7-ந் தேதி அறிமுகப்படுத்தியுள்ளோம்.

    நெல், கரும்பு, காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதம். இதனால் அதிக மகசூல் ஈட்ட முடியும் என நம்புகிறேன். மக்கள் காய்கறி தோட்டம் அமைக்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விதை, தோட்டக்கலை உபகரணங்கள் அடங்கிய பைகள் 75 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்தினாளிகள், மீனவ முதியோருக்கு ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் புதிய பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    புதுவை யூனியன் பிரசேத்தை மத்திய நிதிக்குழுவிலோ, யூனியன் பிரதேச நிதிக்குழுவிலோ சேர்க்க உரிய வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கி வரும் 60:40 விகிதாச்சாரத்தை மாற்றி 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல 90:10 என்ற விகிதாச்சாரத்தை வழங்க வேண்டும் என நிதி அயோக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    மத்திய அரசின் நிதியுதவியும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். சாலை மற்றும் சேவை வரியை இலக்கு அடிப்படையிலான வரி விதிப்பு கொள்கையால் புதுவை யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. ஜூலை 2022-க்கு பிறகு இந்த வருவாய் இழப்பானது ரூ.140 கோடியாக இருக்கும். எனவே மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுக்கு மேல் நீட்டிக்க வேண்டும். அல்லது 1.7.2022 முதல் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடு செய்ய கூடுதல் மத்திய நிதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

    கோப்புப்படம்

    புதுவை மாநிலத்தில் இதுவரை 7.60 லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் விகிதமும், இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 1.15 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 88 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

    பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய வீடுகளுக்கே சென்று, பதிவு செய்யும் நடமாடும் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய அறுவை சிசிச்சை மீண்டும் மருத்துவமனையில் தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு எந்திரம் வேகமாக செயல்பட வேண்டும்.

    எனவே அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் 136 அங்கன்வாடி ஊழியர்களும், 143 உதவியாளர்களும் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளனர். ரோடியர் மில்லை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்கவும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நகரை கண்காணிக்கும் வகையில் ரூ.60 கோடியில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கல்வே காலேஜ் ரூ.4.80 கோடி, வ.உ.சி., பள்ளி ரூ.2.81 கோடியில் புனரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பழைய சிறை வளாகத்திலும், பழைய சாராய வடி ஆலை இடத்திலும் கட்டப்படும்.

    காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும். கொரோனா இல்லாத மாநிலமாக புதுவையை நிலைநிறுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி தாங்களாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்போடு கொரோனாவிலிருந்து பூரணமாக விடுபடுவோம் என திடமாக நம்புகிறேன். எங்கள் அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை தங்கள் முன் கொண்டுவந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் சிறப்பாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசுக்கு அளித்து வரும் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    புதுவை மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் அனுமதிகோரி கவர்னர் மூலமாக கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் குறித்தும் முடிவு செய்யப்படும்.

    புதுவை மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் அனுமதிகோரி கவர்னர் மூலமாக கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கு அனுமதி கிடைத்துவிடும்.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் வருகிற 23-ந்தேதி டெல்லி சென்று பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளோம். அப்போது ரோடியர், பாரதி, சுதேசி மில்களை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்குவது குறித்து கோரிக்கை விடுப்போம்.

    லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை திறந்து இயக்க ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மாநில வளர்ச்சிக்காக ரூ.500 கோடி மானியமாக கேட்க உள்ளோம்.

    மூடப்பட்ட ஆலைகளை திறக்க அரசு முழுமையாக செயல்படும். புதிய சட்டசபைக்கான அடிக்கல் நாட்டுவிழா செப்டம்பர் 9-ந்தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்காக உள்துறை மந்திரி, சபாநாயகரிடம் தேதி கேட்டுள்ளோம்.

    இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.
    புதுச்சேரியில் 3-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பாகூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் 3-வது நாளாக நேற்று இரவு 8 மணிக்கு மேல் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பின்னர் மழை விட்டு விட்டு நள்ளிரவு வரை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரக்கிளை முறிந்து விழுந்தது. பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    வில்லியனூரில் இருந்து கீவளூர் செல்லும் சாலையில் 6 மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வில்லியனூர் துணை கலெக்டர் ரஷிதா குப்தா உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
    வருகிற 26-ந்தேதி சட்டசபையை கூட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தன.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட்டை தயார் செய்தார். அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் விரைவில் பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைத்து சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் பட்ஜெட்டுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் வருகிற 20-ந் தேதி அல்லது அதற்குபின் முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் புதுவை பட்ஜெட்டுக்கும் அனுமதி பெற உள்ளார்.

    பிரதமர் மோடி

    இதையொட்டி புதுவை சட்டசபையை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 26-ந்தேதி சட்டசபையை கூட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால் அன்றைய தினம் கவர்னர் உரை இடம் பெறும். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுவார். அடுத்தநாள் 27-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


    புதுவையில் கொரோனா உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

    மாகியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. இதுவரை இந்த பிராந்தியத்தில் 4 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 194 பேர், வீடுகளில் 657 பேர் என 851 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 84 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை. கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 53 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 3 ஆயிரத்து 843 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 238 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.


    சென்னை திருப்போரூர் பகுதியில் பாஸ்கர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவகர்நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). வேன் டிரைவர். இவர், தனது மனைவி மஞ்சுளாவுடன் (46) சேர்ந்து அந்த பகுதியில் தீபாவளி பண்டு மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.100, ஆயிரம் என்று சீட்டுப்பணம் கட்டி வந்தனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் கணவன், மனைவி இருவரும் திடீரென்று வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர்.

    இந்தநிலையில் பணம் செலுத்தியவர்கள், அவர்களது வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பண்டு, சீட்டு என பிடித்து மோசடி செய்துவிட்டு தப்பியது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து பூமியான்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வசந்தி (40) சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாஸ்கர், மஞ்சுளா தம்பதி பண்டு, சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பாஸ்கர், மஞ்சுளாவை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சென்னை திருப்போரூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் பாஸ்கர், தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்து வீடு வாங்கி கொடுத்ததும், வில்லியனூரில் நிலம் வாங்கியதும் தெரியவந்தது.

    எனவே அந்த சொத்துகளை முடக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூலக்குளம்:

    மூலக்குளம் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் கருணாகரன்பிள்ளை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). பந்தல் அமைக்கும் தொழிலாளி. நேற்று மதியம் அவர் மூலக்குளம்- பெரம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தனியார் அச்சகம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 102 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஆஸ்பத்திரிகளில் 176 பேர், வீடுகளில் 706 பேர் என 882 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 91 பேர் குணமடைந்தனர்.

    ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த 35 வயது வாலிபர் பலியானார். இதன் மூலம் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 16 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 3 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 370 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்லூரி பேராசிரியரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.
    புதுச்சேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் செல்வக்குமார். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்லூரியில் பணிபுரிந்து வருவதுடன் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் வாரத்தில் 2 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை) தெருவோரங்களில் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்து பாலீஷ் போட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து சேவை செய்து வருகிறார்.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவு, மாற்றத்திறனாளிகள், தனித்து விடப்பட்ட முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரது நலனுக்காகவும் செல்வக்குமார் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.
    சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் புதுச்சேரி வந்த பேராசிரியர் செல்வக்குமார் பல இடங்களில் சாலையோரம் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்தும், பாலீஷ் போட்டும் நிதி திரட்டினார். செல்வக்குமாரின் இந்த சேவை குறித்து அவருக்கு தன்னார்வலர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அவரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார். 

    முதல்-அமைச்சர் ரங்கசாமி

    பொதுசேவை குறித்து பேராசிரியர் செல்வக்குமார் கூறும்போது, வாரத்தில் 5 நாட்கள் வீட்டுச் செலவுக்காக வேலைபார்க்கிறேன். 2 நாட்கள் இதுபோல் பொது இடங்களில் அமர்ந்து காலணிகளை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்வி, ஆதரவற்ற முதியோர், பெண்கள், மாற்றுத்திறாளிகளின் நலனுக்காக வேலை செய்கிறேன். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களுக்காக செலவிட்டு வருகிறேன். இதை சேவையாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 179 பேர், வீடுகளில் 693 பேர் என 872 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பம் திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த 58 வயது பெண் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.

    நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 20 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 502 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதுவரை 7 லட்சத்து 27 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    வில்லியனூர் மார்க்கெட் வீதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    புதுச்சேரி:

    புதுவையில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தடையை மீறி கேரள லாட்டரி சீட்டு என்ற பெயரில் 3 நம்பர் லாட்டரி விற்பனை பல இடங்களில் ரகசியமாக நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வில்லியனூர் மார்க்கெட் வீதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் பதில் கூறியதால் அவரது சட்டை பையில் சோதனையிட்டனர்.

    அப்போது, அவரது சட்டை பையில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி ரிசல்ட் பேப்பர், செல்போன், ரொக்க பணம் ரூ. 30 ஆயிரம் மற்றும் செல்போன் வைத்திருந்தார்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பதும், இவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு, விற்பனை பணம் ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×