search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த டிரைவர் கைது

    சென்னை திருப்போரூர் பகுதியில் பாஸ்கர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவகர்நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). வேன் டிரைவர். இவர், தனது மனைவி மஞ்சுளாவுடன் (46) சேர்ந்து அந்த பகுதியில் தீபாவளி பண்டு மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.100, ஆயிரம் என்று சீட்டுப்பணம் கட்டி வந்தனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் கணவன், மனைவி இருவரும் திடீரென்று வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர்.

    இந்தநிலையில் பணம் செலுத்தியவர்கள், அவர்களது வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பண்டு, சீட்டு என பிடித்து மோசடி செய்துவிட்டு தப்பியது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து பூமியான்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வசந்தி (40) சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாஸ்கர், மஞ்சுளா தம்பதி பண்டு, சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பாஸ்கர், மஞ்சுளாவை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சென்னை திருப்போரூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் பாஸ்கர், தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்து வீடு வாங்கி கொடுத்ததும், வில்லியனூரில் நிலம் வாங்கியதும் தெரியவந்தது.

    எனவே அந்த சொத்துகளை முடக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×