search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    100 சதவீதம் தடுப்பூசி போட்டால் கொரோனா நம்மை நெருங்க முடியாது- புதுச்சேரி கவர்னர்

    வருகிற அக்டோபர் மாத மத்தியில் 3-வது அலை வரும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதை எதிர்கொள்ள புதுவை சுகாதாரத்துறை தயாராக உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்.

    பின்னர் பொதுமக்களிடம், கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இதுவரை முதல் தவணையாக 6 லட்சத்து 18 ஆயிரத்து 118 பேரும், 2-வது தவணையாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 539 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் 10 லட்சம் பேர். இதில் 60 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    கடந்த மாதத்துக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டோம். சில காரணங்களால் இந்த இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை. இதற்கு மக்களின் தயக்கம் தான் காரணம். நமது மாநிலத்தை பொறுத்தவரை தங்குதடையின்றி தடுப்பூசி கிடைத்து வருகிறது. வருகிற அக்டோபர் மாத மத்தியில் 3-வது அலை வரும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதை எதிர்கொள்ள புதுவை சுகாதாரத்துறை தயாராக உள்ளது.

    3-வது அலை வரக்கூடாது என்பதே நம் எண்ணம். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 3-வது அலையை நாம் தடுக்க முடியும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக இருந்தால் கொரோனா நம்மை நெருங்க முடியாது.

    பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இணை நோய் உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தான் தடுப்பூசி போடவில்லை. இதேபோல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக அங்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழக பாடத்திட்டத்தை நாம் பின்பற்றுவதால் புதுவையிலும் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

    எந்த விதத்திலும் மக்கள் சேவை தடைபடக்கூடாது என என் தாயார் அடிக்கடி என்னிடம் கூறுவார். அதனால் பணிக்கு திரும்பியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×