search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்வு- கவர்னர் ஒப்புதல்

    மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் தொகையை அதிகரிப்பதற்காக, மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்கான விதிகளில் திருத்தம் செய்யும் சமூகநலத்துறையின் வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

    40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,200-ல் இருந்து ரூ.2,700 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது. 80 வயதை கடந்த நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.3,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி நுகர்வோர் பாதுகாப்பு (மாநில மற்றும் மாவட்ட ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் நிபந்தனைகள்) விதிகள், 2021 அறிவிப்பு வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு, தலைமைச் செயலரைத் தலைவராகவும், கல்வித்துறைச் செயலர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அட்டவணை இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, அட்டவணை இனத்தவர் சிறப்புக்கூறு நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 573 அட்டவணை இனப் பயனாளிகள் வீடுகள் கட்ட (திருத்தப்பட்ட இலக்கு 530 வீடுகள்) இரண்டாவது தவணையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
    Next Story
    ×