என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.

‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே, கமல்ஹாசனின் பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #TNAssemblyElection #KamalHassan



புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும்.
இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டால் இந்தியாவில் சீரழிந்த பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் மாறும். என்ஜினுக்கு பெட்ரோல் எரிசக்தியாக பயன்படுவது போல் இந்த திட்டம் ஏழைகளுக்கு சக்தியாக செயல்படும்.
பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தை சம்பாதித்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை மோசமான நிலையை எட்டி உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் எங்களது திட்டங்கள் இருக்கும்.
நாங்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
எங்கு வேதனை இருந்தாலும் அதை தீர்ப்பது தான் எங்களது பணி. இயற்கையாகவே இவற்றை நாங்கள் செய்வோம். இவற்றை ஓட்டு வங்கி அரசியல் என்று கூறினால் அது அவர்கள் சிந்தனை. ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் இருப்பதையும் கண்ணாடியாக பிரதிபலிப்பதுதான் காங்கிரசின் கொள்கை.
விவசாயிகள் பிரச்சினையில் இருக்கும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சிதான்.

காங்கிரஸ் கட்சி இத் தேர்தலில் பல மாநிலங்களில் மிக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எங்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
உத்தரபிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகளை கைப்பற்றுவோம். இதற்காகத்தான் பிரியங்காவையும், ஜோதி ஆதித்ய சிந்தியாவையும் அங்கு பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம்.
ரபேல் விமானத்தை நாங்கள் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தோம். ஆனால், பாரதீய ஜனதா ஆட்சியில் அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள், ஏழை தொழிலாளர்கள் என யாரை பற்றியும் மோடி அரசு கவலைப்படவில்லை. இப்போது பிரசாரம் செய்யும் இடங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார். #RahulGandhi #congress #pmmodi

சென்னை:
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி உள்பட 8 வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வந்தவர்களுக்கு கைவிரலில் ‘மை’ வைத்த பிறகு ஓட்டு போட விடாமல் விரட்டி விட்டு அங்குள்ளவர்களே கள்ள ஓட்டு போட்டனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் சமூக வலை தளங்களில் வெளி வந்தது.
இதேபோல் பூந்தமல்லி தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்கு சாவடியிலும் கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், பொது பார்வையாளர்களும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நேற்று அறிக்கை அனுப்பி இருந்தனர்.

இந்த 10 தொகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த அறிக்கையை ஆதாரமாக வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மத்திய தேர்தல் கமிஷனுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அதில் 10 தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி உள்ளார்.
இதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் இந்த 10 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது. #Electioncommissioner
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுரை மக்களவை தொகுதிக்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, இப்படி அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தொடங்கியதிலிருந்து பிரசாரம், வாக்குப் பதிவு அனைத்திலும் ஆளும் கட்சியினரின் அடாவடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் துணை நின்ற தேர்தல் அதிகாரிகள் இப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்ளும் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தேர்தல் ஜனநாயகம் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் கீழும் அந்தக் கட்சியின் அத்துமீறல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியிலும் காப்பாற்றப்படுவதற்கு வழியே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
தேர்தல் நடைமுறைகளுக்கும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கும் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் இந்தியத் தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் மூச்சுத் திணறி நிற்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகிறது.
தேர்தல் ஆணையத்தால், ஆளும் கட்சியின் பணப்பட்டு வாடாவைத் தடுக்க முடியவில்லை. துணை முதல்-அமைச்சரே நேரடியாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும் அதை நிறுத்த முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வாக்களித்த போது அதையும் அங்குள்ள காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் தடுக்க முன் வரவில்லை.
சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மீது கடும் தாக்குதல் நடத்தியதையும், பொன்பரப்பியில் வாக்குப் பதிவில் செய்த தில்லு முல்லுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இப்போது துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஒட்டுமொத்தமாக மாறி இருப்பது தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து நேர்மையான தேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
ஆகவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.
அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு- பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #MaduraiConstituency
பெங்களூரு:
கர்நாடகாவில் தேவாங்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சப்பாவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை மே 23-ந்தேதி கவிழ்க்க புதிய முகூர்த்த நேரம் குறித்துள்ளனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ந்தேதி அன்று மோடி ஆட்சி இருக்காது. கூட்டணி அரசு அமையாது. அது முடிவுக்கு வந்துவிடும்.
இதுபோன்று நேரம் குறிப்பது பா.ஜனதா தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டது. மீண்டும் முதல்- மந்திரியாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடியூரப்பா இருக்கிறார். ஏற்கனவே அவர் முதல்- மந்திரியாக பதவி ஏற்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 2 நாளில் வீழ்ந்துவிட்டார்.

அவருக்கு சுயமரியாதை இருந்தால் மே 23-ந்தேதி நள்ளிரவில் முதல்-மந்திரி ஆவேன் என அறிக்கைகள் விடக்கூடாது.
அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்- மந்திரி ஆவேன். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவேன். இதில் என்ன தவறு உள்ளது. கர்நாடகாவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019
மதுரை:
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.
அதன் பிறகு துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு மருத்துவக்கல்லூரிக்கு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மேலும் சில பணியாளர்களுடன் சென்றதாக தகவல் பரவியது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அவர் அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார்? என வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் மற்றும் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தகவல் கிடைத்து அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன்பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.
இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் துணை கமிஷனர் சசிமோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது யார் அனுமதியுடன் பெண் அதிகாரி இங்கு வந்தார்? அவர் எந்த அறைக்கு சென்றார்? என்பது குறித்து வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அதில் குறிப்பிட்ட பெண் அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்லவில்லை என்பதும், அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் பெண் அதிகாரி குறிப்பிட்ட அறையில் எடுத்து சென்ற ஆவணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறை ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெண் அதிகாரி ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குதான் சென்றுள்ளார். தற்போது அந்த அறையும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநில தலைமை தேர்தல் ஆணையர்தான் இறுதி முடிவை அறிவிப்பார்.
வாக்குப்பதிவு நாளில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றதை கருத்தில் கொண்டு இங்கு மட்டும் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மருத்துவக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டு தனி அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இந்த பணிகள் முடிந்த பிறகு உதவி தேர்தல் அலுவலர் சம்பூரணம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என தெரியவந்துள்ளது. எனவே ஆவணங்கள் அறைக்கு சென்று அதில் கையெழுத்திட அதிகாரி சம்பூரணம் சென்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் யார்? அனுமதி பெற்று சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் கூறுகையில், பெண் அதிகாரி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு வந்து சென்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் விரைந்து வந்தோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சில போராட்டங்களுக்கு பின்னர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன.
அதில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையின் ‘சீல்’ அப்படியே இருந்தது. அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குதான் பெண் அதிகாரி சென்று வந்துள்ளார். அங்கும் தற்போது பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் யார் தூண்டுத லின்பேரில் பெண் அதி காரி இங்கு வந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். #MaduraiConstituency
பாட்னா:
பீகாரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் வடக்கு பீகாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்கள்.
அராரியாவில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தியது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு தேச பக்தியைவிட ஓட்டு பக்தியே அதிகம் என தாக்கி பேசினார்.
ராகுல்காந்தி கபாயுல் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
ரபேல் விமான பேரம் குறித்து சரியான முறையில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியுடன் இந்த காவலாளியும் (மோடியும்) சிறையில் இருந்திருக்க வேண்டும். தான் ஒரு காவலாளியாக இருப்பேன் என வாக்குறுதி அளித்து பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

ஆனால் அவர் அனில் அம்பானி போன்றவர்களுக்கு தான் காவலாளியாக இருக்கிறார். எனவே அவரை காவலாளி பணியில் இருந்து நீக்க மக்கள் எண்ணி விட்டனர். மே 23-ந்தேதிக்கு பிறகு அனில் அம்பானியை கட்டித்தழுவ டெல்லியை விட்டு செல்லுங்கள் என அவரை மக்கள் கேட்டுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.
ஏனெனில் காங்கிரஸ் வேட்பாளர் ரஞ்சிதா ரஞ்சனின் கணவர் பப்புயாதவ் மாதேபுரா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிடும் சரத்யாதவுக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அந்த எரிச்சலின் காரணமாக அவர் ராகுல்காந்தி பேசிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது ‘நியாய்’ திட்டம் வறுமைக்கு எதிரான நுண்ணிய தாக்குதல் (‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’). இது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவும். என்ஜின் இயங்க உதவும் பெட்ரோலை போன்றது.
‘நியாய்’ திட்டம் மூலம் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பணம் செலுத்தப்படும். இது ஏழை குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றார். #PMModi #LokSabhaElections2019 #RahulGandhi






