search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும் கதிர் ஆனந்த்தின் தந்தையும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கையூட்டுவதாக இந்த வெற்றியை பார்க்கிறேன். இஸ்லாமியர்களின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு உண்டு. அது இந்த தேர்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது என்றார்.

    கதிர் ஆனந்த்

    வெற்றி குறித்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறுகையில்:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிவு மூலம் ஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் குறையவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றன.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தனித்தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில் வாக்குப்பதிவை அ.தி.மு.க. எதிர்கொண்டது என்பது பற்றியும், நன்கு அறிந்த அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும், வேலூர் தொகுதியில் 46.51 சதவீத வாக்குகளை கழக வேட்பாளர் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும்.

    அ.தி.மு.க.வின் தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய வெற்றிக்கனியை பறிக்கும் என்பதைத்தான் வேலூர் தொகுதியில் கழகம் பெற்றிருக்கும் வாக்குகள் உணர்த்துகின்றன.

    புரட்சித்தலைவி அம்மா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான் வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன.

    இத்தகயை மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல். ஏ.க்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும், எல்லாவற்றுக்கும் மகுடமாய் விளங்கும் வேலூர் தொகுதியில் “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்களித்த பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம், ஓங்குக புரட்சித்தலைவர் தந்த வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னம்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.
    வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேலூர் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பணத்தை நம்பி வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. பெற்றது மோசமான, மோசடியான வெற்றி. கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2 அல்லது 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் வாங்கினார்கள்.

    அப்பாவி மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை பெற்றனர். ஆனால் இந்த முறை ஏமாற்ற முடியவில்லை. கிளுகிளுப்பு காட்டி மக்களை ஏமாற்றும் செயல் எடுபடவில்லை.

    இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேறாது என்ற நிலைதான் உள்ளது. 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துக்கு ரூ.125 கோடி செலவு செய்தது ஒரு வெற்றியா?. மக்கள் மனதில் அ.தி.மு.க. முழுமையாக வெற்றி பெற்று உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்றால் தி.மு.க. தேய் பிறையாக போய்க்கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. வளர்பிறையாக உள்ளது. 2021-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலருவதற்கான நல்ல அறிகுறியைத்தான் வேலூர் மக்கள் அளித்து உள்ளனர்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது. கூட்டணி தர்மத்தின்படி எல்லா கட்சியினரும் வந்து உழைத்தார்கள். எல்லோருடைய உழைப்பால்தான் அ.தி.மு.வுக்கு மகத்தான வாக்குகள் கிடைத்தது.

    வேலூர் தொகுதியில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாக பழம் பாலில் விழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த 5-ம் தேதி வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர்.  முடிவில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது:-

    வேலூர் தொகுதி


    வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. தாமதப்படுத்த முயற்சிக்கலாம் தடுக்க முடியாது என்பது போல் தி.மு.க.வின் வெற்றி உள்ளது. இந்தியா எதிர்பார்த்த வேலூர் தொகுதியின் முடிவு தி.மு.க.விற்கு சாதகமாகியுள்ளது.

    வாக்காளர்களின் ஆதரவால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூர் தி.மு.க.வின் கோட்டையாகியுள்ளது. ஜனநாயக வழியில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்கும் பணியில் முன்னேறிச் செல்வோம்.

    மிட்டாய் கொடுத்து  பெற்ற வெற்றி என்ற அ.தி.மு.க.வின் பிரசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றதால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், பின்னர் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த அவர்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சாலையில் செல்வோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த உற்சாகம் சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை.

    கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம்

    ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் அடுத்த சுற்றில் சரியத் தொடங்கி, கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றதால், அவரது வெற்றி உறுதி ஆனது. 

    இதனால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடம் உற்சாகம் குறைந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தை நிறுத்தினர். ‘இப்படி ஆகிவிட்டதே’ என கலக்கம் அடைந்த தொண்டர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. 

    வாக்கு எண்ணும் பணி

    11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். படிப்படியாக அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. 

    மதியம் 1.30 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 11 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தது. 
    வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறி வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முந்தினார். காலை 10 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 85200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3950 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஏ.சி.சண்முகம் 7733  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். நோட்டாவுக்கு 1461 வாக்குகள் கிடைத்திருந்தன. 

    அடுத்த சுற்றிலும் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது. குறிப்பாக திமுக வேட்பாளரின் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தது.

    கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம்

    11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377  வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். 12 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

    இவ்வாறு முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறியதால் வாக்கு எண்ணும் இடத்தில் பரப்பான சூழல் காணப்பட்டது. 
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

    ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முந்தினார். தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி அவர் 49 87 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    ஏ.சி.சண்முகம் 85200 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 3950 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஏ.சி.சண்முகம் 7733  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். நோட்டாவுக்கு 1461 வாக்குகள் கிடைத்திருந்தன. 

    அடுத்த சுற்றிலும் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரத்தை பார்ப்போம்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
     
    மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். குறிப்பாக ஆம்பூர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றிருந்தார். 

    முதல் சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 25544 வாக்குகளும்,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24064 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 400 வாக்குகள் பெற்றிருந்தார். இதன்மூலம் ஏ.சி.சண்முகம் 1480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

    அடுத்த சுற்றிலும் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் தொடங்கினார். 
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
     
    மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. அங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

    மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

    ஓட்டு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை

    இங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 320 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாக்குகள் மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருக்கும். அதில் கியூஆர் கோடு இருக்கும். அந்த கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும்.

    இதற்கான ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்கு எண்ணும் அறையில் 14 டேபிள்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றுவார்கள். மொத்தம் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது.

    ஒரு அறையில் தேர்தல் நடத்து அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் இல்லாமல் மொத்தம் 55 பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள்.

    கடைசி 2 சுற்றுக்கு முன்பு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும். அப்போது தபால் வாக்கு பதிவுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

    அதன்பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அனைத்தும் முடிந்த பிறகு ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

    பின்னர் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும்.

    இதில் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படும். அதில் மாறுபாடு இருந்தால் விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலை 9 மணியில் இருந்தே முன்னணி நிலவரம் தெரியவரும். 11 மணியளவில் ஓரளவுக்கு வெற்றி வேட்பாளர் விவரம் தெரிந்து விடும்.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவாரா? அல்லது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும்.

    வேலூர் தொகுதியில் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 18,591 ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேர்தலில் பதிவான வாக்கு பதிவு மின்னணு எந்திரங்கள் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 350 போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலையொட்டி 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத வாக்குப்பதிவாகும். அதிகபட்சமாக பெண் வாக்காளர்கள் 5,21,452 பேரும், ஆண்கள் 5,02,861 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர். ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 18,591 ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள்

    சட்டசபை தொகுதி வாரியாக வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), அணைக்கட்டு தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), கே.வி.குப்பம் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்), குடியாத்தம் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாணியம்பாடி தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), ஆம்பூர் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வாக்குகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்த 21 சுற்றுகள் எண்ணப்படுகிறது.


    ×