search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    இப்படி ஆகிவிட்டதே... அ.தி.மு.க.வின் உற்சாகத்தை தவிடுபொடியாக்கிய தேர்தல் நிலவரம்

    வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றதால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், பின்னர் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    ஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த அவர்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சாலையில் செல்வோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த உற்சாகம் சிறிது நேரம்கூட நிலைக்கவில்லை.

    கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம்

    ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் அடுத்த சுற்றில் சரியத் தொடங்கி, கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றதால், அவரது வெற்றி உறுதி ஆனது. 

    இதனால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடம் உற்சாகம் குறைந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தை நிறுத்தினர். ‘இப்படி ஆகிவிட்டதே’ என கலக்கம் அடைந்த தொண்டர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    Next Story
    ×