என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் அருேக அழகாபுரி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிப்பதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பண்டல் பண்டலாக பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சாயல்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 59), இரவார்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • ராஜபாளையம் அருகே மினி சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிலாபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மனைவி நாகஜோதியுடன் முறம்பு பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள மெயின் ரோட்டை இருவரும் கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து கணவன்-மனைவி மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரியப்பனின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்ைச பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். நாகஜோதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

    இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி சரக்கு லாரி டிரைவர் தென்காசி கடையநல்லூரை சேர்ந்த யோவானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் சக்கரராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அட்டைமில் முக்கு ரோட்டில் சென்ற போது எதிரே வந்த மொபட் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    மொபட்டில் வந்த அய்யனார்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சுடுகாட்டில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். நேற்று இவர் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது.அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற பாலமுருகன் சுடுகாட்டுக்கு செல்லும் வழி நெடுகிலும் பூக்களை தூவியபடி சென்றார்.

    அப்ேபாது பால முருகனுக்கும், இறுதி சடங்கிற்கு வந்திருந்த சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். அதன்பின் காளவாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உறவினர் உடலை தகனம் செய்யும் பணி நடந்தது.

    அப்போது முத்து கிருஷ்ணன் தனது தந்தை சுந்தர்ராஜன், சகோதரர் முத்து செல்வம் ஆகியோருடன் அங்கு வந்தார். சுடுகாட்டில் நின்றிருந்த பாலமுருகனிடம் மீண்டும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். திடீரென தந்தை மற்றும் 2 மகன்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தை-2 மகன்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னவன் வழக்குப்பதிவு செய்து வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    • ஓய்வூதியம்: 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஒய்வூதிய இயக்கு நரக இணை இயக்குநர் தி கமலநாதன் முன்னிலையில், கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 78 மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு உரிய பதி லும், தீர்வும் காணப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஒய்வூதிய இயக்குநரக துணை இயக்குநர் மதிவாணன், மாவட்டக் கருவூல அலுவலர் சண்முகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜலட்சுமி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்; 7 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரது மனைவி மணி மேகலை(வயது29). சம்பவத்தன்று இவர்களது மகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றிருக்கிறார்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த அனுஷியா (28) மற்றும் மல்லிகா (62) ஆகிய இருவரும் சிறுமியை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தனது மகளை செல்போனில் படம் எடுத்தது குறித்து அனுஷியா வீட்டிற்கு சென்று மணி மேகலை கேட்டார்.

    அப்போது இரு தரப்பின ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் மல்லிகா மற்றும் அனுசியா மீதும், மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி அம்மாள், பழனி, நந்தினி, மணிமேகலை, தீபாஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் அநாதையாக நின்ற வாகனத்தில் 1,200 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
    • கடத்தி வந்த வாகனத்தை கைப்பற்றி யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே கிருஷ்ணமநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு வேன் சாலையில் அநாதையாக நின்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் ரிஸ்ட்மேரி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 30 கிலோ கொண்ட 40 மூட்டைகளில் 1,200 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த நபர்கள் போலீசாருக்கு பயந்து வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வாகனம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி மற்றும் அதனை கடத்தி வந்த வாகனத்தை கைப்பற்றி யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவகாசியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளா நடக்கிறது.
    • இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2வது தளத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (17-ந் தேதி) முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய- மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 லட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

    கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுபாட்டில் பதுக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சுதந்திர தினத்தன்று அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள்பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரிடம் இருந்து 41 மது பாட்டில்களும், ரூ.7ஆயிரத்து 20-ம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த உத்தமராஜா என்பவரிடம் 7 மதுபாட்டில்களும், ரூ.3 ஆயிரத்து 930-ம், மங்காபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் 223 பாட்டில்களும் ரூ.1930-ம், மாதா நகரை சேர்ந்த வில்லியம் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், மானகசேரியை சேர்ந்த வைரவன் என்பவரிடம் 10 மது பாட்டில்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த கோபி என்பவரிடம் 30 மது பாட்டில்களும், வைத்தியலிங்கபுரம் சேர்ந்த அய்யனார் என்பவரிடம் 11 மதுபாட்டிலும், ரூ.2,110-ம், கட்டயத் தேவன் பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரிடம் 48 மது பாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் சார்ந்த பணிகள், சமுதாயம் சார்ந்த கட்டிடப் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான குறைபாடுகள், பணித்தளங்களில் வேலை தொடர்பான புகார்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்களை பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இலவச அழைப்பு எண்: 04562-252910 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×