என் மலர்
விருதுநகர்
- இதுவரை 1,13,84,300 பேருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
- அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி துவங்கி வைத்தார். அப்போது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கிற்கு மாதம் ரூ. 1000 அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் விடுபட்டவர்களுக்கு கடந்த 10-ம் தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது. இதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு கட்டங்களை சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதற்காக கடந்த அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பம் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருக்கிறார். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
- தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார்.
சிவகாசி:
தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இயங்கும் பட்டாசு ஆலைகள் தொடங்கியுள்ளன.
நடந்து முடிந்த தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. அதனை இந்தாண்டு மிஞ்சும் வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தீபாவளிக்காக கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி பட்டாசு தயாரிப்பு பணியை ஆலைகள் மீண்டும் தொடங்கின.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டும் பட்டாசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பணிகள் பூஜைகளுடன் தொடங்கும்போதே அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனாலும் இன்று முதல் விபத்து நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது மாவட்ட வெடிபொருள் கண்காணிப்பு துறை உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பனையடிப்பட்டி அருகேயுள்ள உட்கடை கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொம்மு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (வயது 36) என்பவர் முதல் நபராக பணிக்கு வந்தார்.
தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் பற்றிய தீயானது அந்த கட்டிடம் முழுவதும் பரவியது.
இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய சண்முகராஜ் உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வந்த வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த சண்முகராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு ஆலை விபத்தில் பலியான சண்முகராஜூக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலை திறந்த சில நிமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதால் அப்பகுதி மக்களிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
- 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.
- குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னகட்டங்குடி கிராமத்தில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருப்பதாக கூறிய இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர்.
அப்போது ஆள்நடமாட்டம் குறைந்தபோது திடீரென அந்த மர்ம நபர்கள் 7, 3 வயதுடைய 2 குழந்தைகளையும் இறுக்கி பிடித்து கொண்டு, தங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க ஸ்பிரேயை எடுத்து குழந்தைகள் முகத்தில் அடித்தனர். இதனால் பீதியடைந்த குழந்தைகள் கூச்சலிட்டனர். பின்னர் 2 பெண்களும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாக்கு மூட்டைக்குள் திணிக்க முயன்றனர்.
இதற்கிடையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்த மர்ம நபர்கள் இருவரும் குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகளை கடத்த வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பள்ளி முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை சாக்கு மூட்டையில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவில் உள்ளது. சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி பகுதியில் மழை பெய்யும் சூழல் இருந்தது. இதன் காரணமாக கார்த்திகை மாத அமாவாசைக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை பகுதியில் எலும்போடை, மாங்கனியோடை, சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் சில இடங்களில் திடீர் காட்டாற்று வெள்ளமும் உருவானது. தடையை அறியாத வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் அமாவாசையான இன்று அதிகாலை அடிவாரத்தில் குவிந்தனர்.
அப்போது அங்கிருந்த வனத்துறை போலீசார் மழை பெய்வதால் மலையேற அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர். சிலர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதையும் காண முடிந்தது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மது விருந்து முடிந்து நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் அதிக அளவு தண்ணீர் வர தொடங்கியது.
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என எண்ணி ஓடைக்குள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி உள்ளனர்.
ஆனால் அதிக நீர்வரத்து காரணமாகவும், போதையில் இருந்ததாலும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து சிக்கிக் கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் தனி நபராக அவர் நண்பர்களை மீட்க முயன்றார். ஆனால் இயலவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அவர்கள் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர்.
அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார் (வயது 25), பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு மது விருந்து நடந்ததா? நடத்தியவர்கள் யார்? அதில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?, ஓடையில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து விட்டு வந்தவர்களா?, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
- இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
- தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார்.
விருதுநகர்:
விருதுநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது57). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே விருதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.
இதற்கிடையே விரைந்து வந்த அவர்கள் குடோன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குடோனில் 75 சதவீத பகுதி முழுவதும் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருந்தது.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் பழைய பஸ் நிலையப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செந்தில் மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
- செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயியான செந்தில் இசலி பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான சில ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் பயிர்களின் நீர் பாசனத்திற்காக தனது நிலத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து மோட்டார் பம்பு செட்டும் அமைத்திருந்தார். இதனால் அவர் கடுமையான கடன் சுமைக்கு ஆளானார். அடிக்கடி மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காகவும் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய செந்தில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் செந்திலிடம் கேட்டபோது தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக செந்திலை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மீண்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமையால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இசலி, சுற்று பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
- மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பொருளாதாரத்துறை ஆசிரியர் கண்டிப்புடன் இருப்பார் எனத் தகவல்.
- கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அம்மா, அப்பாவிற்கு பிறகு குருவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என குழந்தைகளை சொல்லி வளர்ப்பார்கள். 20-ம் நூற்றாண்டு வரை இது கடைபிடிக்கப்பட்டது எனலாம். 2000-த்திற்கு முன்பு வரை ஆசிரியருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். பிரம்பு அடி, வெயிலில் நிற்க வைப்பது. முழங்கால் போட வைப்பது, பெஞ்ச் மீது நிற்க வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது என தண்டனை வழங்குவார்கள். இது எல்லாம் தங்களை திருத்துவதற்குதான் என மாணவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்துள்ளது. ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொருளாதாரத் துறை ஆசிரியர் கடற்கரை (வயது 12). இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுவதி பெற்றுள்ளார். இந்த நிலையில் தப்பி ஓடிய மாணவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
- வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.
சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமி சிலைகள் ஊர்வலமாக கேரளா செண்டை மேளதாளத்துடன் காளியம்மன் கோவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு காளியம்மன் கோவில் வந்தடைந்தது. சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை ஆச்சாரி யர் வர்ணம் கணபதி பூஜை யுடன் தொடங்கியது. 2 நாள் யாகசாலை பூஜையை அடுத்து கிருஷ்ணன் கோவி லில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனை வழிபாடு நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது
சங்கரன்கோவில் சக்தி பிரியா தெம்மாங்கு குழு வினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரளா ராஜ்மகாதேவன் நம்பூதிரி நடத்தி வைத்தார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை பொருளாளரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரு மான குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.






