என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் கடன் பணம் திருடு போனது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 62). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு வங்கியில் வேளாண் கடன் கிடைத்தது. இந்த பணத்தை எடுப்பதற்காக கருப்பசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார்.
வங்கி கொடுத்த கடன் பணத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்தார். மார்க்கெட் அருகே சென்ற போது கருப்பசாமி அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு நகைக்கடைக்கு சென்றார்.
அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்கள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கருப்பசாமி கொடுத்தபுகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கருப்பசாமி நகைக்கடையில் இருந்தபோது மர்மநபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
- பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கிபல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 லட்சத்து 97 ஆயிரத்து 901 மதிப்பில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
ஏழை-எளிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்கிட வேண்டும். கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து.
பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முத்திரையிடாத எடை அளவுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
- நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பு கூட்டாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டாய்வின் போது மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தராசுகள் பறிமுதல் செய்யப்படும்.
அன்றைய தினத்தில் வியாபார பணிகள் ஏதும் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்படும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சியை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரை இடப்பட்டாமல் பயன்பாட்டில் வைத்துள்ள எடை அளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று முத்திரையிட வேண்டும்.
எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு 2000 வருட சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது குற்றச்சாட்டு மற்றும் அதற்கு மேலும் குற்றம் செய்பவருக்கு 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
எனவே எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறினார்.
- மக்களை பற்றி சிந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மேற்கு மாவட்ட வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட மைய நூலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது;-
தி.மு.க. ஆட்சியில் மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகாரதுஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களில் விலைவாசி கள் தாறுமாறாக உயர்ந்து விட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார். மக்களை பற்றி சிந்திக்க அவருக்கு நேரமில்லை. தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அப்பநாயக்கன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் சங்கிலி(35). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்ற சங்கிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்த முருகன் (65). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் ஸ்ரீதேவி கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப் -இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (25). இவருக்கு பொன்னமராவதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் கயல்விழி என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பொன்னமராவதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அவரது சகோதரி கோயம்புத்தூரை சேர்ந்த சங்கீதா ராஜ பாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்டெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகாசி தட்டாவூரணி யை சேர்ந்தவர் பாண்டிய ராஜ். இவரது மனைவி சங்கரேஸ்வரி கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர் சிறுகுளத்தை சேர்ந்தவர் சுப்பாராஜ் (56). நோய் கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்பநாயக்கன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
- முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தூத்துக்குடியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் செழியனின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும் இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார். மாணவர் செழியனை லயன்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர். முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
- சாத்தூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது.
இங்கு சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.
இதுகுறித்து ஊமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் விபூதி, கோவில் ரசீதுகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில அடி தூரத்தில் டி.என்.37, ஏ.க்யூ. 1333 என்ற எண் கொண்ட மொபட்டும் கேட்பாரற்றுக கிடந்தது.
மேற்கண்டவற்றை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலையான வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
- www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள்
16-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் விவசாயி வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 51). விவசாயியான இவருக்கு ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.
தினமும் காலையில் அந்த வீட்டுக்கு சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று இவர் தங்கை பிரிய தர்ஷினி, வேலைக்கார பெண்ணுடன் அங்கு சென்று சுத்தப்படுத்திவிட்டு வீட்டு கதவை பூட்டி திரும்பி விட்டனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி செம்பு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ரகுநாதன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டது.
- சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை வங்கி கணக்கிலேயே வழங்க இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்தில், வங்கி களின் பங்கு குறித்தும், வங்கிகள் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையாக கடனை செலுத்து வதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றுவது பற்றியும், கடன் திரும்ப கிடைப்பதில் உள்ள நம்பகத் தன்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி விதிமுறை கள் குறித்தும், வங்கியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே வழங்குவதற்கான இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.650 கோடி கடன் உதவிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. வங்கியாளர்கள் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டு அதிக கடன் உதவி வழங்கிய 8 மாவட்ட அளவிலான வங்கிகளுக்கும், 10 மாவட்ட அளவிலான வங்கி கிளைகளுக்கும் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.






