என் மலர்
விருதுநகர்
- பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது
- போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.எஸ். பாய்ஸ் வாலிபால் கிளப் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.
இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் செயலர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கு பெற்றனர். இறுதிப் போட்டியில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாடினர். இதில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் 3-க்கு 2 என்ற கணக்கில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராண்டாமிடம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.
- எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் 10 குழந்தைகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது
- காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரியாபட்டி ,
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி முடியனூர் கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் 2022 -ஆம் ஆண்டு பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு முடியனூர் வார்டு செயலாளர் பிரகலாதன் சார்பில் அவரது மனைவி உஷாராணி 10 பெண் குழந்தைகளுக்கு 2 கிராம் வீதம் 20 கிராம் தங்கம் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு ரூ.5ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்பட்டது.
விழாவில் மல்லாந்து நகர் நகரச் செயலாளர் அழகர்சாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணிராஜ், காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது
- அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்,
ராம்கோ குரூப் பஞ்சாலை பிரிவை சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ், ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் (பெரு மாள்பட்டி), ராஜபாளையம் மில்ஸ் -பேப்ரிக் டிவிசன், ஸ்ரீவிஷ்ணு சங்கர் மில், ஸ்ரீராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில், ராஜபாளையம் டெக்ஸ்டைல் (சுப்பிர மணியபுரம்) ஆகிய நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் நடந்தன.
ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ, இயக்குநர்கள் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறு வனங்களின் இயக்குநர்கள் மற்றும் ராம்கோ குரூப் நூற்பாலைகளின் தலைவர் என்.மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் 15 வருடம் முதல் 40 வருடம் வரை சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் மற்றும் அதிக வருடம் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1226 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 41.93 லட்சம் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 2176 தொழிலாளர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராம்கோ குரூப் நூற்பாலைகளின் துணை தலைவர் (மனிதவளம்) என்.நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்கத் தலைவர்கள் என்.கண்ணன் (எச்.எம்.எஸ்.), ஆர்.கண்ணன் (ஐ.என்.டியூ.சி.), பி.கே.விஜயன் (ஏ.ஐ.டி.யூ.சி.), எஸ்.கிருஷ்ணசாமி (எஸ்.வி.எஸ்.எம். மில் யூனியன்) ஆகியோர் பேசினர்.
உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டப்படுத்துதல் ஆகி யவற்றின் அடிப்படையில் எக்செல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், நூற்பாலைகள் தற்போது மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் ராம்கோ நிறுவனத்திற்கு என்று மதிப்பு உள்ளது. கடந்த முறை ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஜெர்மன் நாட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்தபோது, நல்ல தரம், குறித்த காலத்தில் டெலிவரி மற்றும் தொடர்ச்சியான சேவைகளை நாம் செய்து வருவதால்தான் நம்மிடம் வணிகம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளை யம் மில்ஸ் துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன் மற்றும் அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.
- விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
- பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை (20-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
- வெடி விபத்தில் அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி (வயது 58), சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த கட்டிடம் 80 சதவீதம் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. விபத்தில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர் நல்லமருது (வயது 37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மாணவி தனியாக இருக்கும்போது நல்லமருது வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.
நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நல்லமருதுவை கைது செய்தனர்.
- கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளில் தீ பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீப்பற்றியது.
அந்த தொழிற்சாலையில் 10-கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தீ பரவியதை உணர்ந்த தொழிலாளிகள் அலறி அடித்து ஓடி வந்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிக்க தொடங்கியதும் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
- இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது26). இவர் புல்ல நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றது.
இதையடுத்து அருகில் விசாரித்து ரவி என்பவரி டம் சென்று பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு அவர் இங்கு பெட்ரோல் கிடைக்கும் என யார் சொன்னது என விசாரித்த தாகவும், இதுகுறித்து இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு வரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.
இவர்களின் வாக்கு வாதத்தை கேட்டு இருவருக்கும் தெரிந்த நபர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கலைந்து செல்லும் போது ஒரு தரப்பினர் மேலையூர் கிராமத்தில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரவணகுமார் அளித்துள்ள புகாரில், ரவி தரப்பினர் தங்களிடம் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தரப்பில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் சரவண குமார் தரப்பினர் வீட்டுக்குள் புகுந்து பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு களை கூறி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பரளச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் நிலையில் 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பாலிடெக்னிக் ஊழியர் பலியானார்.
- மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த மலைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த பெரியராஜ் மகன் அஜய் கண்ணன் (வயது21). இவர் சாத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் ஊழிய ராக பணியாற்றினார்.
நேற்று இரவு இவர் மலைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாலவநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலவநத்தை தாண்டி பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் அஜய் கண்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கடம்பகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன்கள் பொன்னு, காளிராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்பு லன்சில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் விபத்தில் காயமடைந்த நாகராஜ், காளிராஜ் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் 20-ந்தேதி முதல் மூடப்படும்.
- அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 20-ந்தேதி முதல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்துவதற்காக தமிழக அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்குவதால் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்காமல் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு பஸ் மேனேஜர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் புதிய பஸ் நிலையம் சென்று ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் வெளிப்புறம் மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்லவும், அதேபோல் மதுரை, தேனியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் டி.பி மில்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ெரயில்வே பீடர் சாலை வழியாக செல்லவும், சத்திரப்பட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதியிடம் கேட்டபோது, இன்று பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. வருகிற 20-ந்தேதி முதல் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல அனுமதிக்க மாட்டாது. அன்று முதல் மேற்குறிப்பட்ட முறையில் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றார்.
- ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்விழா நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்விழா நடந்தது. பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துடன் நகர் வடக்கு செயலாளர் வக்கீல் துரை முருகேசன், நகர் தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ் தலைமையில் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் ஊர்வலமாக சென்று பி.ஏ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினர்.
இதில் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வனராஜ், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி எம்.பி.கே.புதுப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மகளிர் அணி கந்த லீலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது.
- கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (19-ந் தேதி) முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நாளை (19-ந்தேதி) பிர தோஷ வழிபாடும், 21-ந் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது.
இதையொட்டி காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மலையேற அனுமதி கிடையாது. கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலுக்கு வருவோர்கள் மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ, அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
தை அமாவாசை நாளில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நீரோடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தை அமாவாசையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






