என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஷோபியா. இவருக்கும், தேனியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஷோபியா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த ஷோபியாவிடம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கரூண் காரட் விசாரணை நடத்தினார். அப்போது புகார் கொடுக்க வந்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ரூ.1500 வாங்கியது தெரியவந்தது. இதன் அறிக்கையை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னியிடம் சமர்ப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியை டி.ஐ.ஜி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வைமா கல்வி நிறுவனங்களான கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைமா வித்யாலயா, பிரசார்தா பாடசாலா, வைமா கிட்ஸ் பள்ளிகளின் 27-வது ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும், சாத்தூர் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர் சீனிவாசன், தங்கமயில் ஜுவல்லரி முதன்மை செயல் அதிகாரி விஸ்வநாராயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். லட்சுமி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜாகுணசீலன், லட்சுமி என்ஜினீயரிங் மேனேஜிங் டைரக்டர் ரவிசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் வைமாதிருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பானுப்பிரியா, வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பக லட்சுமி, பிரசார்தா பாடசாலா பள்ளி முதல்வர் செண்பககனி, வைமா கிட்ஸ் பள்ளியின் ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேசா டி மிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மின் நூலகத்தை பயன்படுத்தும் முறை குறித்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை மின் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் முறை பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார். அவர் பேசுைகயில், மின் நூலகத்தின் நன்மைகளையும், அதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இணைய நூலகத்தில் உள்ள புத்தகங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யும் முறை? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார். இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப்பேராசிரியை சூர்யா நன்றி கூறினார்.

    உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

    • ராஜபாளையத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் தென்காசி நெடுஞ்சாலை யில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து தேனிக்கு நுங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு பிக்கப் வாகனம் சென்றது.

    அப்போது எதிரே டிராக்டர் வந்த தால் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மணிகண்டன் வாகனத்தை திருப்பி யுள்ளார். அப்போது வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி கண்டன், அவருடன் வந்த முருகன், மனோஜ் ஆகிய 3 பேரும் படுகாய மடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் புனலூர் நோக்கி ஒரு ஈச்சர் லாரி சென்றது. அந்த லாரி டிரைவர் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை பார்த்துக் கொண்டே சென்றதால் ஈச்சர் லாரி நிலைதடுமாறி அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் உயர்ரக மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை மீட்பு பணியில் இருந்த போலீசார் கண்டு விலகி சென்றதால் உயிர் தப்பினர். அடுத்தடுத்து வாகன விபத்து ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் தனேஷ்குமார்(வயது28). கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவர் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவரால் சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் விரக்தியில் இருந்த தினேஷ்குமார் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மேட்டமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் குணசேகரன் (23). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த குணசேகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் உள்தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்(66). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோர் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
    • முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூனங்குளம் புது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது60), கூலித்தொழிலாளி. இவருடன் அதே பகுதியை சேர்ந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர் (28) மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (42) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் 3 பேரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தங்களது செல்போன் தொலைந்து போனது தொடர்பாக கேட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவரை 2 பேரும் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரை கொன்ற கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இன்று காலை முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது.
    • காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் புலியூரான் (வயது 35). இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நூற்பாலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீபிகா (வயது27) என்ற மனைவியும், புவன்யாஸ்ரீ (வயது4) என்ற குழந்தையும் உள்ளனர்.

    இந்தநிலையில் புலியூரான் அவரது மகள் புவன்யாஸ்ரீக்கு மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்காக புலியூரான், தனது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் சொகுசு காரில் ராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில் அருகே மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.

    அந்த கார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதுரை ரோட்டில் மம்சாபுரம் விலக்கு அருகே சென்றபோது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் புலியூரான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான புலியூரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவிபத்தில் காயமடைந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

    ராஜபாளையம் அருகே விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் இந்த முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் திருச்சுழியைச் சேர்ந்த சோனைபாண்டி என்ற பெண் தனக்கு சுயதொழில் புரிய தையல் எந்திரம் வழங்ககோரி இந்த கூட்டத்தில் மனு அளித்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், கலெக்டரின்நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கலால்) அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் 12 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் ரேசனில் வழங்கப்படும் பருப்புகள், கோதுமை, எண்ணை போன்றவை வெளிமாநிலங்களுக்கு கடத்துவது சர்வசாதா ரணமாக நடந்து வருகிறது.

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜபாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் பின்புறம் கிட்டங்கியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரிஜிஸ்மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது32), லோடுமேன்கள் கவுரி சங்கர்(24), ரவீந்திரன்(24), சரவணன்(21) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.

    பதுக்கி வைக்க ப்பட்டிருந்த ரேசன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்க முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.

    • விருதுநகர் அருகே வீடு புகுந்து 19½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கிளி(52),விவசாயி. இவரது மனைவி சுப்புத்தாய் நேற்று இருவரும் வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 19½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய ராஜாக்கிளி நகை திருடுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
    • 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கோட்டைப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று காலை ஊழியர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெடி மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது. இதில் அறையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கரமாக வெடித்தது.

    இந்த விபத்தில் தொழிலாளர்கள் கட்ட நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (40) ஆகியோர் உடல் கருகினர். 80 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். வெடி விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ×