என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் முதியவர் அடித்துக்கொலை குடிபோதையில் வாலிபர்கள் வெறிச்செயல்
- ஆத்திரமடைந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோர் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
- முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூனங்குளம் புது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது60), கூலித்தொழிலாளி. இவருடன் அதே பகுதியை சேர்ந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர் (28) மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (42) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தங்களது செல்போன் தொலைந்து போனது தொடர்பாக கேட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவரை 2 பேரும் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரை கொன்ற கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இன்று காலை முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






