என் மலர்
வேலூர்
பனப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த குப்பத்துமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34), விவசாயி. இவருடைய மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு ஹேமலா (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை காமாட்சி விவசாய நிலத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது தனது மகன் விக்னேசையும் அழைத்து சென்றார். அங்கு ஆடு மேய்த்தபோது விக்னேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனை காணவில்லை. அவனை தேடியபோது அருகில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி மகனை காப்பாற்றுவதற்காக அலறியடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடினார்.
கிணற்றின் அருகில் சென்றபோது திடீரென கால் தடுக்கி காமாட்சி, கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். உடனே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று காமாட்சியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து காமாட்சி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சமேதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆற்காடு:
ஆற்காடு பஜாரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்றிரவு பஜாரில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.
மொத்த வியாபாரம் செய்து வரும் 3 மளிகை கடைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பலவகை போதை பாக்குகள் பார்சல், பார்சல்களாக சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான ஆற்காடு எம்பெருமான் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (64), ராணிப்பேட்டை புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (33) மற்றும் அவருடைய தம்பி ஜெயக்குமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். #Gutkha #Gutkhaseized
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கருணாசை அவரது மனைவி கிரேஸ் இன்று ஜெயிலில் சந்தித்தார்.
ஒருமணி நேர சந்திப்பை தொடர்ந்து கிரேஸ் புறப்பட்டு சென்றார். #Karunas
வேலூர்:
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இது குறித்து திருமுருகன் காந்தியின் ஆதரவாளர்கள் கூறியதாவது:-
கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் அடைக்கபட்ட திருமுருகன் காந்தியை வாரத்துக்கு 3 நாட்கள் சென்னை கோர்ட்டுக்கு அழைத்து செல்கின்றனர். மேலும் சீர்காழி தூத்துக்குடி கோர்ட்டுக்கும் அழைத்து செல்லப்படுகிறார். தொடர்ந்து அவரை அலைக்கழித்து வருவதால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றனர். #ThirumuruganGandhi
திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.
போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.
கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.
அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.
அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.
இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 60). ரியல் எஸ்டேட் தரகராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். மகள் சரண்யா பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மனைவி இறந்தபின் மகள் சரண்யாவுடன் அசோக் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி சரண்யா வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டார்.
அசோக் வீட்டை பூட்டிவிட்டு பனப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்றார். மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்து சரண்யா வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தனது தந்தை அசோக்கிற்கு போனில் தெரிவித்தார். அவரும் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அசோக் புகார் அளித்தார். அதன்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமேதா திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
‘‘பாலாற்றை பாதுகாப்போம், கரம் கோர்ப்போம்’’ என்ற முழக்கத்துடன் பா.ம.க. சார்பில் 2 நாள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நேற்று தொடங்கினார்.
தொடர்ந்து திம்மாம்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பால் போன்று ஓடிய ஆறு தற்போது பாழாய் போகி விட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தான் இதற்கு முக்கிய காரணமாகும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
கடந்த 22 ஆண்டுகளாக பாலாற்றை காப்பாற்ற பா.ம.க. கட்சி போராடி வருகிறது. பாலாற்றில் நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, காவிரி, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
பா.ம.க.வினர் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவர்கள். நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால், பீர் அபிஷேகம், கற்பூரம் ஏற்றுவது போன்ற கலாசாரம் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.
தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும். கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் 110 டிகிரி வெயில் பதிவாகும். வருங்காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும். இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் மரங்களை நட்டு பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் மலைகளில் 10 லட்சம் புங்கை, வேம்பு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதில், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
பாலாற்றை பாதுகாக்க ஆந்திராவில் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. இந்த ஆட்சி முடிந்தவுடன் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலில் கம்பி எண்ணுவார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை வராது. 8 வழிச்சாலை திட்டம் கொள்ளை அடிக்கவே போடப்பட்டது. அதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை வைத்து தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம்.
அண்டை மாநிலங்கள் நீர்நிலைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. அதனை வைத்து பல அணைகள் கட்டியிருக்கலாம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #anbumani #pmk
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு, வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை காமராஜ் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. அதிர்ச்சியடைந்து பீரோவை பார்த்தார் அப்போது அதில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து காமராஜ் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். #Robbery
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், குட்கா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தியில் உள்ள டோல்கேட்டில் தாலுகா போலீசார் நள்ளிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
லாரியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள், வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் பாபு (வயது 45), சுமேந்தர் (42), ரங்காராவ் (48) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடத்தி வந்த குட்கா பெங்களூருவில் உள்ள குடோனில் இருந்து வேலூருக்கு கொண்டு வரப்பட்டது.
இது முதல் முறையில்லை. பலமுறை பெங்களூரு குடோனில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்துள்ளனர். வேலூரில் போலீஸ் தொந்தரவு இல்லாத ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி விடுவார்கள்.
அங்கிருந்து, மாவட்டம் முழுவதும் குட்காவை பிரித்து விற்பனைக்காக அனுப்புவார்கள். இவர்களை பின்னால் நின்று இயக்குவது மிகப்பெரிய கும்பல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
டி.எஸ்.பி. முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், லாரியுடன் சிக்கிய குட்கா விவகாரத்தில் பின்னணியில் உள்ள கும்பல் யார் யார்? என பட்டியல் தயாரித்து அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். #GutkhaSeized
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
சாலை விபத்துகளை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று நடந்தது. எஸ்.பி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, டி.எஸ்.பி.க்கள் ஸ்ரீதரன், அலெக்ஸ், பெண்கள் வன் கொடுமை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ஜெயசுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன் மற்றும் அசோகன் (தனிப்பிரிவு), மணி (வேலூர் போக்குவரத்து), சுந்தர மூர்த்தி (சத்துவாச்சாரி போக்குவரத்து) மற்றும் பள்ளி வாகன டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசியதாவது:- சாலைகளை அனைவரும் பயன்படுத்துகிறோம். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 370 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விபத்தில் உயிர் இழப்புகள் குறைவு தான்.
இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் இறக்கின்றனர். சாலை விதிகளை மதித்து நடந்தாலே விபத்துகளை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். குடித்து விட்டும், செல்போன் பேசிய படியும் வாகனங்களை ஓட்ட கூடாது.
வாகனங்களை ஓட்டுபவர் தங்கள் குடும்ப நலனையும், எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளன் குடும்ப நலனையும் மனதில் வைத்து ஓட்ட வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அதி வீரபாண்டியன் பேசுகையில், பள்ளி வாகனங்களில் டிரைவர்களும், உதவியாளர்களும் மாணவ, மாணவிகளிடம் பாதுகாப்போடு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘குட் டச்... பேட் டச்’ தொடுதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஊனமுற்ற மாணவ, மாணவிகளை வாகனங்களில் ஏற்றும் போது மட்டுமே உதவி செய்ய வேண்டும். அதுவும் சரியாக பிடித்து தவறான தொடுதல் இல்லாமல் உதவ வேண்டும்.
தவறான தொடுதல் உள்ளிட்ட பாலியல் புகார் வந்தால், போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு போக்சோ சட்டப்பிரிவுகள் வழி வகுக்குகின்றன. கைதாகும் நபர்களின் குடும்பமே பாதிக்கப்படும் என்றார். #accident
வேலூர்:
காட்பாடியில் கல்புதூர், பர்னீஷ்புரம், ஆசிரியர் காலனி விரிவு பகுதி, செங்குட்டை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன.
இதனால் பொதுமக்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்லும் போது நாய்கள் விரட்டி செல்வதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறகின்றனர்.
எனவே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிகளில் கொண்டு விடும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்பார்வையாளர்கள் ஊதிய குழு அறிக்கை வெளியிட்டதை கண்டித்தும் எஸ் 1, எஸ் 3 மேலாளர்கள் ஊதிய மாற்றம் டி.பி.இ., டி.எச்.ஐ.ஜி. வழிகாட்டுதல் படி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எஸ் 1, எஸ் 3 பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.
எஸ் 9, எஸ் 10 பதவிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொதுச் செயலாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ரதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #Bhelworkerstruggle






