என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் காதலை ஏற்க மறுத்த ஆயுதப்படை பெண் போலீசை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கொண வட்டத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், வேலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (வயது 24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    திலீப்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலை, அந்த பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார். அவரின் காதலை, அவர் ஏற்க மறுத்துள்ளார். திலீப்குமார் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அணுகுச்சாலையில் அந்தப் பெண் போலீஸ் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குக் குடும்பத்துடன் வந்த திலீப்குமார் திடீரெனப் பெண் போலீசை வழிமறித்து மீண்டும் காதலிக்கும் படி கூறி உள்ளார். அப்போதும் அந்தப் பெண் போலீஸ், அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திலீப்குமார், அவரது தந்தை பாலசந்தர், தாய் ரஜிலா மற்றும் அவரது குடும்பத்தினர் பானுபிரியா, அபினயா, விக்கி ஆகியோர் சேர்ந்து பெண் போலீசை தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திலீப்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    வேலூர் ஜெயிலில் கருணாசை சந்திக்க சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. #Karunas
    வேலூர்:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசினார். நாடார் சமுதாயம் பற்றியும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    வேலூர் ஜெயிலில் நீதி மன்ற காவலில் அடைக்கப்படும் கைதிகளுக்கான பிரிவில் தனி அறையில் கருணாஸ் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கத்து அறைகளிலும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.அவரது மனைவி கிரேஸ் நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என்.பார்த்திபன், பாலசுப்பிரமணி, ஜெயந்திபத்மநாபன் ஆகியோர் இன்று காலை ஜெயிலுக்கு கருணாசை சந்திக்க சென்றனர்.

    திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி பெற்று கைதிகளை சந்திக்க முடியும். மற்ற நாட்களில் சந்திக்க அனுமதி கிடையாது எனக்கூறிய சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் அனுமதி மறுத்தனர்.

    ஆனால் அவர்கள் ஜெயில் சூப்பிரண்டை சந்திக்க வேண்டும். உடனே பார்க்க வேண்டுமென கூறியதாக தெரிகிறது. அங்கு சூப்பிரண்டு இல்லை எனக் கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில்:-

    சிறைவிதிகள் படி இன்று யாரையும் பார்க்க முடியாது என கூறினர். ஜெயில் சூப்பிரண்டை பார்க்க முயற்சி செய்தோம். அவர் அங்கு இல்லை. நாங்கள் வக்கீல் என்பதால் முறைப்படி கருணாசை சந்தித்து பேசுவோம் என்றனர். #karunas
    மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று உயிரிழந்தது.

    இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து, இறந்த குரங்கின் உடலை மீட்டனர்.

    இதனையடுத்து தென்னை ஓலையில் பாடைக்கட்டி இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடத்தி, குரங்கின் உடலை அடக்கம் செய்தனர்.

    மனிதர்கள் இறந்து போனாலே அனாதை பிணமாக விட்டு செல்லும் நிலையில் இறந்த குரங்குக்கு முறையாக இறுதி சடங்கு செய்து, அடக்கம் செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு வரும் பாலாற்று பாதையில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கிறது. கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கும் திகிலூட்டும் பகுதியாக சமீப காலமாக பாலாற்று பகுதி மாறியுள்ளது.

    இன்று காலையில் காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு வரும் பாலாற்று பாதையில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையானவர் உடலை பார்வையிட்டனர். கொலையாளிகள் வெறிப்பிடித்ததைப் போல், அந்த வாலிபரை முதலில் கொடூரமாக வாழை மட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.

    இதில் 2 வாழை மட்டைகள் நார் நாராக பிய்ந்து பிணம் அருகில் கிடந்தது. மேலும், கத்தியால் சரமாரியாக நெஞ்சில் குத்தியுள்ளனர். இதில் வாலிபர் இறந்துள்ளார். பிறகு, கொல்லப்பட்டவரின் யார் என்பதை மறைக்க, பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்துள்ளனர்.

    முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர் யார்? என அடையாளம் காண முடியவில்லை. அவருடைய கையில் ‘சரவணன்’ மற்றும் ‘சரண்யா’ என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது.

    கொலையானவர் தன்னுடைய பெயர் மற்றும் மனைவியின் பெயரை பச்சை குத்தியிருந்தாரா? அல்லது குழந்தைகளின் பெயர்களை பச்சை குத்தி வைத்திருந்தாரா? என்பதும் கண்டறிய முடியவில்லை. உடலமைப்பை பார்க்கும்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்கவராக தெரிந்தார்.

    பாலாற்றில் சட்டவிரோத செயல்கள் அதிகமாக நடப்பதால் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை நிகழ்ந்திருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தி வரப்பட்டு தீர்த்து கட்டப்பட்டிருக்கலாம் என 2 கோணங்களில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து, வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளிக்கு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில், பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். பாறைகளை பிளக்க டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி அடங்கிய வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைக்கிறார்கள்.

    வெடி சிதறும் பாறைகளை சிறு, சிறு கற்களாக உடைத்து ஜல்லி தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இப்படி, அதே பகுதியை சேர்ந்த தசரதன் (வயது 27) என்கிற தொழிலாளி, கல் கம்பம் நடுவதற்காக பாறைகளை நீளமாக பிளக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    பெரிய பாறைகளாக இருந்தால், அவற்றில் சிறு சிறு துளையிட்டு கொஞ்சம் வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைத்துபிளந்துள்ளார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த தசரதன் தன் பக்கத்தில் வெடி மருந்துகளை வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கூலித்தொழிலாளி தசரதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் சற்று தொலைவில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தசரதனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வாலாஜாவில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வாலாஜா:

    வாலாஜா குடிமல்லூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 56). குடிமல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவரான இவர், தண்ணீர் கேன் கம்பெனியும் வைத்துள்ளார். இவருக்கும், குடிமல்லூர் வேளாளர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (43) மற்றும் இவருடைய கூட்டாளியான குடிமல்லூர் குட்டி முதலி தெருவை சேர்ந்த சதீஷ் (28) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.

    கடந்த மாதம் காரில் வந்த மீனாட்சி சுந்தரத்தை 2 பேரும் வழிமறித்து தாக்கினர். இதுதொடர்பாக, வாலாஜா போலீசில் அவர் புகார் அளித்தார். தாக்குதல் நடத்திய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இந்த நிலையில், நேற்றிரவு பைக்கில் வாட்டர் கம்பெனியில் இருந்து அணைக்கட்டு ரோடு வழியாக மீனாட்சி சுந்தரம் பழக்கடைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அங்கு வந்த கார்த்திகேயனும், சதீசும் உருட்டுக்கட்டையால் மீனாட்சி சுந்தரத்தை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதில் இடது கையில் பலத்த காயத்துடன் மீனாட்சி சுந்தரம் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வாலாஜா போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயன் மற்றும் சதீஷை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அரக்கோணம் அருகே பூ வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ராஜபாதர் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 34). பூ வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் குதிரை சுரேஷ் (32). விக்னேஷ் (30). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர்.

    அப்போது வேலாயுதத்திற்கும் குதிரை சுரேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குதிரை சுரேஷ் மற்றும் விக்னேஷ், வேலாயுதத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த வேலாயுதத்தை மீட்ட பொதுமக்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை சிப்காட்டில் லோடு ஆட்டோ லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 32). லோடு ஆட்டோ டிரைவர். இவர், நேற்றிரவு ராணிப்பேட்டையில் இருந்து சிப்காட் நோக்கி லோடு ஆட்டோவை ஓட்டிச்சென்றார். இவருடன், கிளீனர் வேலுவும் (31) சென்றார்.

    பேரி கிரவுண்டு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி, லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் தணிகாச்சலம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    கிளீனர் வேலுவுக்கு தலை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தணிகாச்சலத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், படுகாயமடைந்த கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேலூர் அருகே தந்தையே தனது 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). டெய்லர். இவரது மனைவி கமலா (32). இவர்களுக்கு மேகலா (9). திவ்யகலா (7) என்ற 2 மகள்கள் இருந்தனர். அங்குள்ள அரசு பள்ளியில் மேகலா 4-ம் வகுப்பும், திவ்யகலா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாகவே வெங்கடேசன் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் குடும்ப நடத்துவதற்காக கமலா கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் என்னால் குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாது.

    நீ வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கமலா தனது 2 மகள்களையும் தாய் வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.

    மனைவியின் இந்த முடிவு வெங்கடேசனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை வழக்கம் போல் கமலா கீரை வியாபாரத்துக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த வெங்கடேசன், தனது 2 மகள்களையும் கழுத்தை நெரித்து கொன்று கட்டிலில் படுக்க வைத்தார். உடனே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மாலை வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த கமலா அங்கு கணவன் மற்றும் 2 மகள்களும் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் இதுகுறித்த விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த வெங்கடேசன் மற்றும் அவரது 2 மகள்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    வேலூர் அருகே நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைக்குமார். இவருடைய மனைவி சசிரேகா (வயது 30), தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியை. இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அரியூரில் உள்ள புதுமை நகர் அருகே சசிரேகா சென்றபோது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வந்தனர். ‘ஹெல்மெட்’ அணிந்த மர்ம நபர்கள் சசிரேகாவின் மொபட் மீது மோதுவது போன்று வேகமாக வந்துள்ளனர்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ‘ஹெல்மெட்’ கொள்ளையன் ஒருவர் சசிரேகாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சசிரேகா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு விரைந்து வந்து ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து சசிரேகா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் கடந்த 19-ந் தேதி இரவு காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த துணி வியாபாரி மனைவியின் 3 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியூரில் நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 
    காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு மாணவரை கடத்திய வழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் டிஜோரமேஷ் (வயது 22). கல்லூரி மாணவரான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ஒரு கும்பல் ரூ.1 கோடி கேட்டு கடத்தியது. பின்னர் மாணவரை அந்த கும்பல் விடுவித்தது.

    இந்த நிலையில் டிஜோரமேஷின் வீட்டில் கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர்.

    அதில், 4 மோட்டார் சைக்கிள்கள், வீட்டில் இருந்த ஏ.சி.எந்திரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த இரு சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த பாலா (23), கஞ்சாலூரைச் சேர்ந்த ரகீம் (21), காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாணவர் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான மன்சூரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், காட்பாடி பகுதியில் பதுங்கியிருந்த மன்சூரை (34) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் கடத்தலில் பிரபல ரவுடி ஜானிக்கு தொடர்பு உள்ளதா? அவர் எங்கு உள்ளார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×