என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ThirumuruganGandhi
    வேலூர்:

    மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இதில் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

    இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து இன்று காலை திருமுருகன் காந்தியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக வார்டில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருமுருகன் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  #ThirumuruganGandhi

    வருகிற சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு என்று வேலூரில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMK #DuraiMurugan
    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    வேலூர் மேற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க. பின்தங்கிய நிலையில் உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.

    இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு இங்குள்ள 4 தொகுதிகளையும் மீட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணா, கருணாநிதி போல ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பார்கள், தோல்வியடைந்தால் தி.மு.க. கதை முடிந்துவிட்டது என பேசுவார்கள்.

    இது வாழ்வா? சாவா? பிரச்சினை வரும் தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு கட்சிக்கு உழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.

    குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஸ்டாலினை பார்த்து பயப்படுகின்றனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆகிய 3 பேரின் முகங்களை ஸ்டாலின் வடிவில் பார்க்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆடிக்காற்றில் வந்தவர் காற்று நின்றதும் தானாக கவிழ்ந்து விடுவார் என்றார்.  #DMK #DuraiMurugan


    இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று காலை கருணாஸ் எம்எல்ஏ வெளியே வந்தார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    வேலூர்:

    நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.



    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த ஜாமீன் உத்தரவு நகல் வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, கருணாஸ் எம்எல்ஏ இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான வழக்குகளில் உண்மை நின்றது, நீதி வென்றது என்றார்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    வேலூர் கோட்டையில், இலங்கை கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரமராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹால் பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் ராமன் நேற்று திறந்து வைத்தார்.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் திப்பு மஹால், ஐதர்மஹால், பாஷா (ராஜா) மஹால், பேகம் (ராணி) மஹால், மற்றும் கண்டிமஹால் என 5 மஹால்கள் (சிறிய அரண்மனைகள்) உள்ளன.

    பாஷா மஹால், பேகம் மஹால் ஆகிய 2 கட்டிடங்களும் 1991-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கண்டி மஹாலில் இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கன் 17 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலேயே மரணமடைந்தார்.



    இந்த கண்டி மஹாலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கக்கோரி கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா துறையின் மூலம் வேலூர் கோட்டையில் நேற்று மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணிகளில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பொதுமக்கள் பார்வைக்காக கண்டி மஹாலையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் உள்ளே சென்று அங்குள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் இருந்த தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர்கள் கண்டி மஹாலில் தூய்மை பணி முடித்து மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அருங்காட்சியகம், மாநகராட்சி மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கலெக்டர் ராமன் சுற்றுலா துறையின் மூலம் குப்பை தொட்டிகள் வழங்கினார். இதையடுத்து என்.சி.சி. மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர், டி.கே.எம். கல்லூரி, முத்துரங்கம் கலைக்கல்லூரி மற்றும் ஊரீசு கல்லூரிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான் பிரிட்டோ, தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் ஈஸ்வர், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்விகள்) வளர்மதி, ஜலகண்டேஸ்வரர் கோவில் செயலாளர் சுரேஷ், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அமிர்தியில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அடுக்கம்பாறை:

    வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே அமிர்தியில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதலை, மான், முள்ளம்பன்றி, நரி, பாம்பு வகைகள், மயில், வெள்ளை மயில் உள்ளிட்டவைகள் உள்ளன.

    இந்த பூங்காவை உரசியபடி பீமன் நீர்வீழ்ச்சி எனும் கொட்டாறு செல்கிறது. ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் இந்த மழைநீர் ஓடைக்கால்வாய்கள் மூலமாக அமிர்தி நீர்வீழ்ச்சி வழியாக நாகநதி ஆற்றுக்கு செல்கிறது. இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்த அமிர்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.



    குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து வன உயிரின பூங்காவை பார்வையிடுவதுடன், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பசுமையுடன் அமைந்துள்ள அமிர்திக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் அமிர்தி காட்டில் அரியவகை பறவைகள் இடம் பெயர்ந்ததுடன், கூடும் கட்டியுள்ளது. இந்த கூடுகளில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது.

    இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக அமிர்திக்கு வரத்தொடங்கியுள்ளனர். உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த அமிர்தி வனக்காட்டில் பறவைகளை பார்வையிட்டு, ஆராய்ச்சி கட்டுரைகளும் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அமிர்திக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கவும், மேளம் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா தெரிவித்தார். 
    ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு தோப்புக்கானா மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சோழன். இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர், மளிகை பொருட்கள் வாங்க வீட்டின் எதிரே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஒரு வாலிபர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.

    இதுப்பற்றி ஆற்காடு டவுன் போலீசில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்புடன் வீதியில் நடக்க முடியவில்லை. கொள்ளையர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 35). வாடகை வேன் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சிலரை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வேனில் அழைத்து கொண்டு சென்றார்.

    வேலூர்-ஆரணி சாலையில் கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு என்ற பகுதியில் சென்றபோது வேன் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பழனியை பிடித்து விசாரித்தனர். அப்போது, பழனியிடம் லைசென்ஸ் இல்லை. தொலைந்து போய் விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் பழனியை மிரட்டியுள்ளார்.

    ‘என்ன செய்வியோ... லைசென்ஸ் கொண்டு வா’ என்று இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். டிரைவர் பழனி, வேலூரில் உள்ள வீட்டிற்கு வந்து லைசென்சை சல்லடை போட்டு தேடி உள்ளார். பிறகு லைசென்ஸ் கிடைக்காததால் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டார்.

    மீண்டும் எப்படி போலீஸ் நிலையம் செல்வது என்று அச்சப்பட்டு டிரைவர் பழனி நேற்றிரவு வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழனியின் தற்கொலைக்கு காரணமான கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    அரியூர் ரெயில்வே மேம்பால பணி தாமதம் ஏற்பட்டதால் இதனை கண்டித்து திமுகவினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். #dmkprotest

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் ரெயில்வே மேம்பால பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கால வரையறைக்குள் முடிக்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் தங்க கோவில், ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், அரசு ஊழியர்கள், தங்கக் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு மாற்று வழியாக உள்ள சித்தேரி ரெயில்வே மேம்பால தரைச்சாலையும் முறையாக பராமரிக்காமல் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

    மேலும் வேலூர் கஸ்பா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கஸ்பா ரெயில்வே மேம்பாலம் பணியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து அரியூர் ரெயில்வே கேட் அருகே இன்று வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் விழுப்புரம், காட்பாடி பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

    கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல செயலாளர் அய்யப்பன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    அரியூர் ரெயில்வே மேம்பால கட்டுமான பணியை நிறைவேற்ற வேண்டும்.

    தற்போது அணைக்கட்டு பஸ்கள் செல்லும் சித்தேரி சாலையை சீரமைக்க வேண்டும், கஸ்பா ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரியூர் போலீசார் மறியல் செய்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். #dmkprotest

    அணைக்கட்டு அருகே மகள்களுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த மகள் இறந்தார்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது35). இவருக்கு சுதா (28) என்ற மனைவியும். கஸ்தூரி (9), காயதிரி (7) என 2 மகள்களும் உள்ளனர். முருகேசன் மைசூரில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா, கணவர் முருகேசனை ஊருக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முருகேசன் 2 பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதனால் மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த சுதா கடந்த 25-ந்தேதி 2 மகள்களுக்கும் வி‌ஷத்தை கொடுத்துவிட்டு தானும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். கஸ்தூரி, காயத்திரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கஸ்தூரி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே இன்று அதிகாலை லாரி-பஸ் மோதிய விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து நேற்றிரவு அரசு பஸ் 40 பயணிகளுடன் தருமபுரிக்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளக்குட்டை பகுயை சேர்ந்த கெங்காதரன் (வயது 35) டிரைவர் ஓட்டிச் சென்றார்.ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.

    விபத்தில் பஸ் டிரைவர் கெங்காதரன். கண்டக்டர் சந்திர சேகர். பயணிகள் ராமசாமி (55). மாதையன் (44). கோவிந்தராஜன் ( 40). காவேரி (65). சிவகாமி (37). தங்கராஜ் (50). வெண்ணிலா (20). காந்தி (30). புஷ்பா (50). கவிதா (45). பிடல்கோஸ் (32). சந்திரா (50). உள்பட 26 பேர் கடுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    மேல்பாடி அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 67), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குருநாதனின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

    அதில், அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குருநாதன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் குருநாதனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து குருநாதன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் மகன் சுகுமார் (வயது 28), ராமாலை அடுத்த காந்திகணவாய் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் யுவராஜ் (வயது 30), புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மோகன் என்கிற காடை மோகன் (வயது 30) ஆகிய 3 பேர் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் திருட்டிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இவர்களை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.

    சுகுமார், யுவராஜ், மோகன் ஆகியோர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரைத்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். 
    ×