என் மலர்tooltip icon

    வேலூர்

    அரக்கோணம் ரெயிலில் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. அரக்கோணம் தாலுகா வினியோக அதிகாரி குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது இருக்கைக்கு அடியில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே தன்னை கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பல்லலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புனிதா (வயது 39). இவர், இன்று காலை சமையல் செய்வதற்காக தனது வீட்டு முற்றத்தில் உள்ள அடுப்பில் தீ மூட்டினார்.

    அடுப்பில் வைப்பதற்காக அருகில் கிடந்த தென்னை மட்டைகளை எடுத்தார். அப்போது, அதில் இருந்த ஒரு கண்ணாடி விரியன் குட்டிப்பாம்பு புனிதாவின் கையில் கடித்தது. அந்த பாம்பை புனிதா அடித்துக் கொன்றுவிட்டார்.

    பிறகு, கொன்ற பாம்பை எடுத்துக் கொண்டு புனிதா குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். டாக்டர்களிடம் இந்த பாம்பு தான் என்னை கடித்து விட்டு என்று தூக்கி காண்பித்தார்.

    பாம்பை பார்த்தவுடன் டாக்டர்கள், நோயாளிகள் திடுக்கிட்டனர். உடனடியாக புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக உள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு காணப்பட்டது.

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதி பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். நகர் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் ஆரணி- வாழப்பந்தல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆம்பூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் 2-வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதா 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரபு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 குழந்தைகளின் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடி தாசில்தார் வீட்டில் புகுந்து 70 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் ஆராக்கியசாமி (வயது 45). ஓசூரில் நெடுஞ்சாலைதுறை தனிதாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆக்சிலியம் கல்லூரியில் ஆசிரியையாக உள்ளார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். இதனை பயன்படுத்தி கொண்ட மர்மகும்பல் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வந்த ஆரோக்கியசாமி குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு அருகே விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆரணி கொசப்பாளையம் நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார்.ஆற்காடு-ஆரணி சாலையில் உள்ள வணக்கம்பாடி அருகே சென்றபோது, எதிரே 3 பேர் ஒரே பைக்கில் தாறுமாறாக அதிவேகமாக வந்தனர்.

    அவர்களது பைக் பூபாலன் வந்த பைக் மீது உரசியது. இதில் நிலைத் தடுமாறிய அவர் எதிரே வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பூபாலன் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பலியானார்.

    ஆற்காடு அடுத்த திமிரி துர்கம் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). ஓட்டலில் வேலை செய்துவந்தார். நேற்று இரவு திமிரி பஜாருக்கு பைக்கில் வந்துவிட்டு வீடு திரும்பினார். திமிரி பாலமுருகன் மலைக் கோவில் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மவின்குமார் (வயது 24). பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது குடித்தனர்.

    போதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடினர். மவின்குமாருக்கு அதிகளவிலான போதை தலைக்கேறியது. இதனால் அவரை அங்குள்ள கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டனர்.

    மேலும் அவர்களும் கிணற்றுக்குள் குதித்து குளித்தனர். மவின்குமார் தண்ணீரில் தத்தளித்தார். நீச்சல் தெரியாத அவர் கிணற்றுக்குள் மூழ்கினார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை மவின்குமாரின் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது கிணற்றின் அருகே அவரது செல்போன் கிடந்தது. அதில் நண்பர்கள் சேர்ந்து அவரை கிணற்றில் தூக்கி வீசிய வீடியோ காட்சிகளை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுத அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.


    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மவின்குமாரை பிணமாக மீட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மவின்குமாரின் நண்பர்கள் சுதர்சன், அருண், அஜித், பாவித் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThirumuruganGandhi
    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi
    வாணியம்பாடி தொழிலாளி பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 48). தொழிலாளி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் மர்ம காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜமாலுதீன் ரத்தத்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜமாலுதீன் நேற்று இரவு உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு அவர் உயிரிழந்தார் என ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது.

    மற்ற நோயாளிகளுக்கும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆஸ்பத்திரியில் இருந்து இன்று காலை ஜமாலுதீன் உடல் வாணியம்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, வாணியம்பாடி நகராட்சி சுகாதார குழுவினர், சென்னாம்பேட்டையில் மருத்துவ முகாம் அமைத்து சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், சுகாதார பணி மற்றும் துப்புரவு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் தகவல் பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #thirumurugangandhi #thoothukudisterlite

    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சினை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் புண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, திருமுருகன் காந்தி உடல்நிலையை மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #thirumurugangandhi #thoothukudisterlite

    கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது குற்றமில்லை என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #adultery

    வாணியம்பாடி:

    கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் திடீரென கூச்சலிட்டார்.

    அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #adultery 

    அரக்கோணம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீதான புகார் குறித்து துணைவேந்தர் முருகன் விசாரணை நடத்தினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    இக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ‘வாட்ஸ் அப்’ மூலமும், நேரிலும் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த மாணவி அதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் புகார் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பேராசிரியர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், ஆட்டுப்பாக்கம் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து துணைவேந்தர் முருகன் கூறியதாவது:-

    பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்றார்.

    ×