என் மலர்
வேலூர்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 44), இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வீராங்குப்பம். இவருக்கு சுமதி, சித்ரா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
சுமதி வீராங்குப்பத்தில் வசித்து வருகிறார். சித்ரா பாங்கி ஷாப்பில் கணவருடன் வசித்து வந்தார். பார்த்தீபன் - சித்ரா தம்பதிக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
பார்த்தீபனின் அண்ணன் தீனதயாளன். இவர் வீராங்குப்பத்தில் வசித்து வருகிறார். தீனதயாளனின் மகள் வரலட்சுமியை திருத்தணியை சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
காளிதாஸ் - வரலட்சுமிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. அப்போது பார்த்தீபன் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைப்பது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வரலட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக திருத்தணியில் இருந்து தனது சித்தப்பா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. காளிதாஸ் தனது மனைவியை தேடி சின்னமாமனாரான பார்த்தீபன் வீட்டிற்கு வந்து தனது மனைவியை எங்கே என்று கேட்டு உள்ளார்.
அப்போது பார்த்தீபனுக்கும் காளிதாசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது காளிதாஸ், தனது சின்னமாமனாரை அடித்து உதைத்து கீழே தள்ளி, அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ், ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிதாசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 31). மாட்டு வியாபாரி. இவரது மனைவி ரிகானாபேகம் (27). இவர்களுக்கு அப்துல்வாஹித் (3) என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 7-ந் தேதி அக்பர் ராணிப்பேட்டை வாரச்சந்தைக்கு வீட்டில் இருந்து பைக்கில் சென்றார்.
அப்போது அவர், வன்னிவேடு அருகே கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அக்பரின் மனைவி ரிகான பேகத் தனது கள்ளக்காதலன் காலித் அகமதுடன் சேர்ந்து திட்டமிட்டு கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
கொலையில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரிகானா பேகம் மற்றும் கூலிப்படை கும்பல் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகிய 5 பேரை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் காலித்அகமது, சின்ன குட்டி, ராஜூ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கோர்ட்டில் கள்ளக்காதலன் காலித்அகமது சரணடைந்தார். பின்னர் அவர், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும், சின்ன குட்டி, ராஜூ ஆகிய 2 குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி கோவில் மாணியம் தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சிவகாமி (வயது 90). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சிவகாமி தன்னுடைய மகள் வள்ளி வீட்டில் வசித்து வந்தார்.
இன்று காலை வீட்டின் அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது கிணற்றின் சுவர் மீது உட்கார்ந்திருந்தார்.
அப்போது திடீரென தவறி கிணற்றில் விழுந்து விட்டார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டியை கிணற்றில் இருந்து மீட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய சிவகாமி இறந்து விட்டார். பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மூதாட்டி உடலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலையிலும் நீடித்து பெய்தது.
ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வேலூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
தொடர்ந்து வேலூரில் மழை பெய்து கொண்டே இருந்தது. கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் பலத்த மழை கொட்டியது. திருவண்ணாமலை, போளூர், தண்டராம்பட்டு பகுதியில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.
திருவண்ணாமலை மகா தீப மலை முழுவதும் மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. இந்த காட்சி ரம்மியமாக உள்ளது. இதேபோல ஜவ்வாது மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் நீருற்றுகள் ஏற்பட்டுள்ளன.
வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர்- 12.1
ஆம்பூர்- 22.4
வாணிய ம்பாடி-10.6
ஆலங் காயம்- 9.2
காவேரிப்பாக்கம்- 15.6
திருப்பத்தூர்-18.3
மேல் ஆலத்தூர்- 1.2
திருவண்ணாமலை- 21.2
ஆரணி- 15.2
செங்கம்- 4.6
சாத்தனூர் அணை-17.7
போளூர்- 20.8
தண்டராம்பட்டு- 18.6
கலசப்பாக்கம்- 31.
வேலூர்:
குடியாத்தம் தாலுகா நல்லாகவணியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 22 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று அங்குள்ள மலையடிவாரத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி தொடர்ந்து 5 மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தபெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 28.8.2013 அன்று இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய மோகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், இந்த தொகை போதாது என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் ராணி (வயது 40). இவர் இன்று காலையில், வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்ல சில தொழிலாளர்களுடன் அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள ஜானி என்பவரின் டீக்கடை முன்பு நின்றிருந்தார்.
அப்போது, திருத்தணி நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென நிலைதடுமாறி டீக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் பலரின் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
மேலும் அரக்கோணம் சிறுணமல்லியை சேர்ந்த சந்திரன், காந்தி நகரை ஜீவ ரத்தினம், நெமிலியை சேர்ந்த ராஜவேலு மற்றும் மங்கம்மாபேட்டையை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடிய அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சேகரை தவிர மற்ற 3 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசனை (48) கைது செய்தனர்.
காருக்குள் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, குழந்தை உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள், அரக்கோணம் நேதாஜி நகரில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆம்பூர்:
ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பார்த்திபன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது உறவினர் திருத்தணியை சேர்ந்த காணிக்கைராஜ். இன்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காணிக்கைராஜ் கல்லால் பார்த்திபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பார்த்திபன் இறந்தார்.
உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காணிக்கைராஜ் தாக்கியதில் பார்த்திபன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பார்த்திபன் கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பார்த்திபனை தாக்கிய காணிக்கைராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
பெங்களூரு பென்சன் டவுன்பார்க் சின்னப்பகார்டனை சேர்ந்தவர் கலிமுல்லா (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் கலிமுல்லா குடும்பத்துடன் சென்னையில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் வாராந்திர ரெயிலில் பெங்களூரு நோக்கி சென்றார். எஸ்.12-ம் பெட்டி முதலாவது இருக்கையில் கலிமுல்லாவின் மகள் அஸ்ராபி (25) படுத்து தூங்கினார்.
ரெயில் நள்ளிரவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் அஸ்ராபி எழுந்து கழிவறைக்கு நடந்து சென்றார்.
அப்போது, கழிவறையின் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென அஸ்ராபி அணிந்திருந்த 8 பவுன் எடையுடைய 2 தங்கசங்கிலி மற்றும் அவர் கையில் வைத்திருந்த மணிப்பர்சு ஆகியவற்றை பறித்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றார். மணிப்பர்சில் ரூ.3 ஆயிரமும், விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் இருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அஸ்ராபி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் கூறினார். நள்ளிரவு என்பதாலும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் சிறிது தொலைவு சென்றதாலும் உடனடியாக அஸ்ராபியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.
ரெயில் மறுநாள் அதிகாலையில் பெங்களூரு சென்றடைந்ததும் கலிமுல்லா ரெயில்வே போலீசில் தங்க சங்கிலி பறிப்பு குறித்து புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை அருகே என்பதால் பெங்களூரு ரெயில்வே போலீசார் புகார் மனுவை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை பெல் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் இவரது மகன் அருண்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பொன்னாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளன. மர்மநபர்கள் அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அருண்குமாருக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யப்பட்டார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட வனஅலுவலர் முருகன் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் பிச்சாண்டி, வெங்கடேசன், பூபதி மற்றும் வனத்துறையினர் பரதராமியை அடுத்த வீரிசெட்டிபல்லி காப்புக்காடுகள் கன்னிங்பாறை பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது பரதராமியை அடுத்த பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த மணி (வயது 40), கோபி (32) என்பதும், அவர்கள் கம்பிவலை மூலம் பெண் மானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து மான் தலை மற்றும் தோலை கைப்பற்றினர். மேலும் மணி, கோபி ஆகியோரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் தென்றல் நகரை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 45). திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று மாலை வீடு திரும்பிய விசுவநாதன் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் செல்லும் பொதுமக்கள் விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்க வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு அவ்வைநகரில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டது. இன்று வழக்கமாக வழங்கப்படும் லாரி குடிநீரும் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு உடனே லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






