என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் முகம் சிதைக்கப்பட்டு வாலிபர் கொடூர கொலை
    X

    காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் முகம் சிதைக்கப்பட்டு வாலிபர் கொடூர கொலை

    காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு வரும் பாலாற்று பாதையில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கிறது. கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கும் திகிலூட்டும் பகுதியாக சமீப காலமாக பாலாற்று பகுதி மாறியுள்ளது.

    இன்று காலையில் காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு வரும் பாலாற்று பாதையில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையானவர் உடலை பார்வையிட்டனர். கொலையாளிகள் வெறிப்பிடித்ததைப் போல், அந்த வாலிபரை முதலில் கொடூரமாக வாழை மட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.

    இதில் 2 வாழை மட்டைகள் நார் நாராக பிய்ந்து பிணம் அருகில் கிடந்தது. மேலும், கத்தியால் சரமாரியாக நெஞ்சில் குத்தியுள்ளனர். இதில் வாலிபர் இறந்துள்ளார். பிறகு, கொல்லப்பட்டவரின் யார் என்பதை மறைக்க, பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு முகத்தை சிதைத்துள்ளனர்.

    முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர் யார்? என அடையாளம் காண முடியவில்லை. அவருடைய கையில் ‘சரவணன்’ மற்றும் ‘சரண்யா’ என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது.

    கொலையானவர் தன்னுடைய பெயர் மற்றும் மனைவியின் பெயரை பச்சை குத்தியிருந்தாரா? அல்லது குழந்தைகளின் பெயர்களை பச்சை குத்தி வைத்திருந்தாரா? என்பதும் கண்டறிய முடியவில்லை. உடலமைப்பை பார்க்கும்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்கவராக தெரிந்தார்.

    பாலாற்றில் சட்டவிரோத செயல்கள் அதிகமாக நடப்பதால் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை நிகழ்ந்திருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தி வரப்பட்டு தீர்த்து கட்டப்பட்டிருக்கலாம் என 2 கோணங்களில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து, வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×