என் மலர்tooltip icon

    வேலூர்

    பள்ளிகொண்டா அருகே விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு அஜித் (வயது 22), லோகேஷ் (20), மேகநாதன் (19) ஆகிய மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மாலை 3 பேரும் சின்னச்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசி வந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சின்னச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சாண்டி (49) அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் கையில் இருந்த கத்தியால் பிச்சாண்டியை பல்வேறு இடங்களில் வெட்டினர். இதில் மயங்கி விழுந்த பிச்சாண்டியை அந்த வழியாக சென்றவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது பாலத்தின் மீது அமர்ந்திருந்த அஜித் என்னை பிடித்தால் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

    போலீசார் தீவிர முயற்சி செய்தும் பாலத்தில் இருந்து அஜித் இறங்கவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று இரவு அஜித் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லோகேசை தேடி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்ஆவதம் காலனி, கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவருடன் பைக்கில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்றார்.

    மதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்கு சென்றார். நாகராஜ் பைக் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாகராஜிடம் எங்களை பைக்கில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டனர்.

    அதற்கு நாகராஜ் பைக் என்னுடையது கிடையாது. நானும், எனது அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். என்னுடைய அண்ணன் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். அப்போது தட்சிணாமூர்த்தி பைக் அருகே வந்தார்.

    அவரிடம் வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தினர்.

    பின்னர் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த உளியநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) என்பவரை தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    கத்தி குத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கீழ்ஆவதம் காலனியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

    இதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் கீழ்ஆவதம் காலனி பகுதியில் இருந்து அன்வர்திகான்பேட்டைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்சிணாமூர்த்தியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தட்சிணா மூர்த்திக்கு ரஞ்சிதா (26) என்ற மனைவியும், மோகன்அஜித் (4) என்ற மகனும், ரெஜினாரெக்ஸ் (2) என்ற மகளும் உள்ளனர்.

    தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சண்முகம். சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    நேற்று இரவு வெளியூர் சென்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், அவரது மனைவி வேலூர் வந்தனர். வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    இதனைக்கண்டதும் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    போலீஸ் குடியிருப்பில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளை நடந்த போலீஸ் குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வரும் இடங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் 3-வது கண்ணாக விளங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் போலீஸ் குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் குடும்பத்தினர் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது.

    அனைத்து போலீஸ் குடியிருப்புகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    வாலாஜா அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் பிடித்தனர். விடுதி மேலாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வாலாஜா பகுதிகளில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாலாஜா பைபாஸ் ரோட்டில் வன்னிவேடு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக திமிரி, பள்ளிப்பட்டு, காஞ்சீபுரம் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    இது தொடர்பாக வாலாஜா அடுத்த குடிமல்லூரை சேர்ந்த வினோத் (வயது 28), விடுதி மேலாளர் மணி (62) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிடிபட்ட 3 பெண்களையும் காப்பத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெடுஞ்சாலையோரம் விதிமுறைகளை மீறி வாகனங்ளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீசார் ரோந்து செல்ல வாகனங்கள் டார்ச்லைட், ரேடார்கள், கேன், உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இவற்றின் பராமரிப்பு குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது. ஆய்வு செய்த பின்னர் எஸ்.பி. பிரவேஷ் குமார் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கேதாண்டப்பட்டி, மோட்டூர், வன்னிவேடு, நாட்டறம் பள்ளி, ஆகிய 4 இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது.

    அந்த இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். விதிகளை மீறி நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை கண்காணிக்க 4 போலீஸ் ரோந்து குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
    நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெட்டபட்டு பகுதியை சேர்ந்தவர் அரிஷ் (வயது 23). இவரது நண்பர்கள் அன்பு (27). நவீன் (26). இவர்கள் 3 பேரும் நேற்று நாட்டறம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    எல்லபல்லி என்ற இடத்தில் பைக் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்டு 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரிஷ் இறந்தார். அன்பு, நவீன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தகவலறிந்த உறவினர்கள் கார் டிரைவரை கைது செய்ய கோரி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி முரளி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் கத்தாரி பகுதியை சேர்ந்த கரியன் என்பரை கைது செய்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

    மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
    வாலாஜா அருகே ஊர்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55) விவசாயி. இவருக்கும் ஊர்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சந்திரன் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை சந்திப்பு நடந்தது. ஆயுதப்படை டி.எஸ்.பி. ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நளினி, முருகன் சந்திப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வரும் சிறுத்தைகளை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனால் அபிகிரிப் பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்கள மூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    சில காலங்களுக்கு முன்பு வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றால் அவற்றை சிறுத்தைகள் வேட்டையாடின. ஆனால், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டுக் தொழுவங்களுக்கு வந்து சிறுத்தை கால்நடைகளை தூக்கி செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த 2 சிறுத்தைகள் இரு ஆடுகளை தூக்கி சென்றன. அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு அபிகிரிப்பட்டறை கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றது.

    சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் வனப்பகுதி எல்லையோரக் கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் ஆடுகளை வளர்ப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    எனவே, சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். அபிகிரிபட்டறை, அரவகல் துருகம் ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூண்டு வைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை.

    இந்த முறையாவது பிடிபடுமா என கண்காணித்து வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யபடுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

    மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.

    இதை ஆய்வு செய்த தேர்தல் கமி‌ஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.



    இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் மேற்கொள்ளும்.

    எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ×