search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை
    X

    அரக்கோணம் பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை

    அரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்ஆவதம் காலனி, கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவருடன் பைக்கில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்றார்.

    மதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்கு சென்றார். நாகராஜ் பைக் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாகராஜிடம் எங்களை பைக்கில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டனர்.

    அதற்கு நாகராஜ் பைக் என்னுடையது கிடையாது. நானும், எனது அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். என்னுடைய அண்ணன் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். அப்போது தட்சிணாமூர்த்தி பைக் அருகே வந்தார்.

    அவரிடம் வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தினர்.

    பின்னர் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த உளியநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) என்பவரை தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    கத்தி குத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கீழ்ஆவதம் காலனியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

    இதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் கீழ்ஆவதம் காலனி பகுதியில் இருந்து அன்வர்திகான்பேட்டைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்சிணாமூர்த்தியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தட்சிணா மூர்த்திக்கு ரஞ்சிதா (26) என்ற மனைவியும், மோகன்அஜித் (4) என்ற மகனும், ரெஜினாரெக்ஸ் (2) என்ற மகளும் உள்ளனர்.

    தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×