என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர், திருண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    உலகத்தை ஆட்டுவிக்கும் கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசியை தயார் செய்து வருகின்றன. இந்திய நாடும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.

    இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட 500 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நபருக்கு 2 தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 28 நாட்களுக்கு பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு உத்தரவு வழங்கிய உடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என வேலூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பள்ளிகொண்டா அருகே வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசுமாட்டை கட்டிவிட்டு, மாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த வேன் மகேஸ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் மர்மநபர்கள் புதைத்துள்ளனர். பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர், தோட்டப்பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 50). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி ரேஷன் கடையில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேலுவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங்கரை சுடுகாட்டில் எரியூட்டும் தகன மேடை அருகே பாதி உடல் புதைந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பது வேலூர் வடக்கு போலீசாருக்கு தெரியவந்தது.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் உடலை தோண்டி எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் வேலூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், புதைக்கப்பட்டிருந்த நபர் மாயமான வேலு என்பது தெரியவந்தது. மேலும் அவரது கை உடல் ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

    வீட்டில் இருந்து வெளியே வந்த வேலுவை பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று மர்மநபர்கள் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்ததால் வேலுவின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலுக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா?, கடைசியாக அவர் யாருடன் வெளியே சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பேரணாம்பட்டு அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பேர்ணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 24) மேளம் அடிக்கும் தொழிலாளி.

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த். ஹேமந்துக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் ஹேமந்த் பிறந்தநாளை அஜித் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    அப்போது எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வில்சன் சுதாகர் என்பவரது மகன் ராபின் (27) மற்றும் ரீகன் ராஜ் (40) சின்னா என்கிற சதீஷ்குமார் (23) ஆகியோர் பைக்கில் வந்தனர்.

    பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த அஜித் தரப்பினரிடம் அவர்கள் இங்கே ஏன் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள் என கேட்டுள்ளனர்.

    இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராபின், ரீகன் ராஜ், சின்னா ஆகியோர் அஜித்தை பேனா கத்தியால் வயிற்றில் குத்தினர்.

    இதனை தடுக்க முயன்ற அஜித்தின் சித்தப்பா வேலு என்பவரையும் கத்தியால் குத்தினர். இதில் அவரது குடல் சரிந்தது. இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பொதுமக்கள் படுகாயமடைந்த அஜித் மற்றும் வேலு ஆகியோரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அஜித் பரிதாபமாக இறந்தார்.

    வேலு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து ராபின், ரிகன் ராஜ், சின்னா என்கிற சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அருகே சாரயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வேலூரை அடுத்த மேல்பள்ளிப்பட்டு, வெட்டுவாணம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்த ஆறுமுகம் மனைவி பவானி (வயது 40) மற்றும் வெட்டுவாணம் அருகே உள்ள கோவில் பின்புறம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி கிருஷ்ணவேணி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 209 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலூரில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர் தீக்குளித்தார். அவர், எரியும் தீயுடன் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரின் மனைவி தனலட்சுமி (வயது 28). இவர் வேலூர் மாநகராட்சியில் தற்காலிகமாக டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தனலட்சுமிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வேலை முடிந்ததும் மாலை 6 மணி அளவில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள போக்குவரத்துப் பணிமனை எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்றார். திடீரென அவர் தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீ உடல் முழுவதும் பரவியது. அவர் வலி தாங்க முடியாமல் எரியும் தீயுடன் கூச்சலிட்டு அலறியபடி நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்குப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை என்பது தெரியவந்துள்ளது. அது உண்மையா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
    திருவலம் அருகே டிரான்ஸ்பார்மரில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    திருவலம்:

    வேலூர் மாவட்டம், குகையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48). திருவலம் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம், திருவலம் அருகே உள்ள மேல்மாந்தாங்கல் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. 

    அவர் உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் ரைஸ்மில் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    நள்ளிரவில் மர்மநபர்கள் இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்தனர். பல மணி நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது தானியங்கி மூலம் வங்கிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் சென்று பார்த்த போது எந்திரத்தின் ஒரு சில பகுதியில் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் எடுக்கவில்லை.

    அந்த இயந்திரத்தில் ரூ.4 லட்சம் பணம் அப்படியே இருந்தது. கொள்ளையர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பி உள்ளது. இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மையத்திலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
    குடியாத்தம்:

    மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஆம்பூரில் இருந்து பேச்சை முடித்துக்கொண்டு மாதனூர் வழியாக குடியாத்தம் நேதாஜிசவுக் வந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக குடியாத்தம் பழைய பஸ் நிலையம் வந்தார்.

    இந்த குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் தரைப்பாலம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே உள்ளது. குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்யமகாநதி ஓடுகிறது. இந்த வழியாக வந்த நடிகர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு காரிலிருந்து இறங்கி பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தார்.

    அப்போது நடிகர் கமல்ஹாசன் நகரின் நடுவே ஓடும் ஒரு ஆற்றில் கழிவுநீரும் குப்பைகளும் இருப்பதை மனதை இறுக்கம் அடைய செய்வதாக கூறினார்.




    அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
    வேலூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை திறந்தவேனில் கொட்டும் மழையில் பேசினார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூரின் சிறப்பு சிப்பாய் புரட்சி. எழுச்சி கொண்ட மண்ணாகும்.

    வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அதில் சிப்பாய் புரட்சி தோற்க காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே.

    தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்காக வைத்துவிட்டேன்.

    நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நாம் நாற்காலியை பிடிப்பது உட்கார அல்ல, உட்காராமல் மக்கள் சேவை செய்ய.

    நீங்கள் எல்லோருமே தலைவர்கள். நான் உங்களை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.

    மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். அது மற்ற எந்த கட்சியிலும் கிடையாது.

    வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக் கொண்டுள்ளோம். அனைத்தும் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது.

    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்பதை தற்போது ஏளனம் செய்கின்றனர். நாளை இதனை அமல்படுத்தும்போது உலகம் நம்மை பாராட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல. மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதனை கருத வேண்டும்.

    அரசுக்கும், மக்களுக்கும் இடையே அது தொடர்பை ஏற்படுத்தும். அரசின் சேவைகளும் எளிதில் கிடைத்து விடும். அரசின் சேவையை மக்கள் பெறுவது உரிமை. அதை அரசு தேடி வந்து தர வேண்டும். அதற்கான இடர்பாடுகளைக் களைந்திடவே வீட்டுக்கு ஒரு கணினி திட்டமாகும்.

    விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.

    சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஒரே கட்சி நாம் தான். பேசுவது மட்டும் அல்ல அதற்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம்.

    சரித்திரம் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பு அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் நேர்மைக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர் இதில் பங்கேற்று கொள்ளுங்கள். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    ஆரணி சுற்றியுள்ள கோட்டை மைதானங்கள் சரியாக பராமரிக்கப்பட்டால் உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக ஆரணி மாற வாய்ப்புள்ளது.

    அதனை செய்யும் திட்டம் எல்லாம் எங்களிடம் உள்ளன. சிறிய நகரங்களை பெரிய நகரங்களுக்கு நிகராக மாற்றி காட்டுவோம். எங்களால் நிறைவேற்றி காட்ட முடியும். எங்களின் கனவு இதற்காக மக்கள் நீதி மய்யத்தின் கரத்தை வலுப்படுத்துங்கள்.

    இங்கு கூடி இருக்கும் கூட்டம் பேச்சு கேட்டு கலைகின்ற கூட்டமாக இல்லாமல் பரப்புரை செய்யும் கூட்டமாக மாற வேண்டும்.

    தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை மாற்ற முடியும். அதை நிரூபித்து காட்ட மக்கள் நீதி மையத்தால் முடியும். ஏன் மக்கள் நீதி மய்யத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இங்கே வந்திருக்கும் இளைஞர்கள் மக்கள் மத்தியில் கூற வேண்டும். ஒவ்வொருவரும் பரப்புரையாளர்களாக மாற வேண்டும்.

    நாங்கள் மக்களுக்காக அறிவார்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தகளுடன் கேட்டு தெரிந்து ஆராய்ந்து பல திட்டங்களை வைத்திருக்கிறோம். அந்த திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும். அப்போது நாங்கள் இருக்க வேண்டும். அது சீக்கிரத்தில் நடக்க வேண்டும்.

    நாங்கள் தாமதமாக வந்தாலும் வேகம் எடுத்து விட்டோம். நாங்கள் எங்கு சென்றாலும் வெயில் மழை பாராமல் மக்கள் ஏராளமாக கூடுகிறார்கள். புதிய தமிழகத்தை உருவாக்க ஒரு கருவி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த கருவியாக நான் இருப்பேன். ஊர் கூடி தேர் இழுத்தால் வெற்றி நிச்சயம் நாளை நமதே.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆற்காடு அருகே காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி புதிய காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா (26). டிப்ளமோ படித்துவிட்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் சூர்யாவை எச்சரித்துள்ளனர். ஆனால் சூர்யா தொடர்ந்து அந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. முப்பதுவெட்டி ஏரிக்கரை அம்மன் நகர் அருகே உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சூர்யா இறந்து கிடந்தார். அவரை கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் சூர்யா இறந்து கிடப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    லத்தேரி அருகே சொத்து தகராறில் முன்னாள் ராணுவவீரரை கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காட்பாடி:

    லத்தேரியை அடுத்த கிழ்முட்டுக்கூர் எல்.என்.புரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாமோதரன் (வயது 70), கிருஷ்ணன் (65). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தாமோதரனும் அவருடைய மகன்களும், பேரன்களும், பொது இடத்தில் கிருஷ்ணன் கட்டிய தண்ணீர் ஏற்றும் அறையை இடித்த போது கிருஷ்ணன் தட்டிக்கேட்டுள்ளார்.

    ஆத்திரமடைந்த தாமோதரன் கும்பல் கிருஷ்ணனை தடியாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவருடைய மனைவி சின்னம்மாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கிருஷ்ணன் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனின் அண்ணன் தாமோதரன், அவருடைய மகன்கள் முருகன் (50), காந்தி (45), பாஸ்கர் (39) ஆகியோரை கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த முருகனின் மகன்கள் மோகன்ராஜ் (26), சரண்ராஜ் (22), நவீன்ராஜ் (20) ஆகிய 3 பேர் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
    ×