என் மலர்tooltip icon

    வேலூர்

    தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர்:

    தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் போன்றவை கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பணம் பட்டுவாடா செய்வது பற்றியோ, பரிசுப் பொருட்கள் கொடுப்பது பற்றியோ புகார் தெரிவிக்கும்போது பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்கிறார்களா?, முறையாக சோதனை நடத்துகிறார்களா? என்பதை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு (ஜி.பி.எஸ்.) கண்காணிப்பு கருவிகள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அதில் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்தக் கருவிகள் மூலம் பறக்கும் படையினரின் செயல்பாட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணிக்கலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகன தணிக்கை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.
    வேலூர்:

    கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான முன்கள பணியாளர்கள் அச்சம் காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதற்காக 14 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பூசி போடாத அனைத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    முகாமில் 4 டாக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் போலீசாரின் பெயர், பணிபுரியும் இடம் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு வரிசையாக தடுப்பூசி செலுத்தினர்.

    இதில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாமில் 695 பேருக்கும், அதைத்தொடர்ந்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த முகாமில் 30 போலீசாருக்கும் என்று ஒரே நாளில் 725 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று வேலூர் மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.

    இதே போல் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் நேற்று வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
    வேலூர் சத்துவாச்சாரியில் திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    பெங்களூரு ஜெயநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (வயது 24), அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சண்முகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவி கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இளம்பெண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்த (ஏப்ரல்) மாதம் திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

    இதற்கிடையே பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பரிமளாவை அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சமாதானம் செய்து, திருமணத்துக்கு சம்மதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கல்யாணி குடும்பத்துடன் வேலூர் சத்துவாச்சாரி வசந்தம்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பரிமளாவின் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்ய தொடங்கினர்.

    ஆனால் பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் எந்த ஏற்பாடுகளும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தவில்லை. விரக்தியடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை, குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிமளாவை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் கல்யாணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்துக்கு விருப்பம் இல்லாமல் பரிமளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது54). இவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உண்டு. 2-வது மகன் திருமலை (18). இவர் வேலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு ராமு வசித்துவந்த மற்றொரு வீடான வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு திருமலை சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் நேற்று குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருமலை தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்றனர்.
    ஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த ஓ.ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ், கட்டிட தொழிலாளி. இவரது மகன் யுவராஜ் (வயது 14). ஒடுகத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று யுவராஜ் தனது நண்பர்களுடன் ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றான்.

    தடுப்பணை மீது நடந்து செல்லும்போது யுவராஜ் உள்பட 2 மாணவர்கள் தண்ணீரில் வழுக்கி விழுந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், 2 மாணவர்களையும் தேடினர். இதில் ஒரு மாணவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.

    யுவராஜை மீட்க முடியாததால் அருகிலுள்ள ஒடுகத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் இறங்கி தேடினர்.

    சுமார் 3 மணி நேரம் தேடியும் யுவராஜ் கிடைக்காததால் தடுப்பணையை சிறிய அளவில் உடைத்து சிறிதளவு தண்ணீரை வெளியேற்றி யுவராஜை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யுவராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பெயிண்டரிடம் நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபா (வயது 40), பெயிண்டர். இவர் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையில் கிரீன்சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பிரபா சட்டை பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் கையில் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த புஜ்ஜிபாபு என்கிற விஜய் (28), பூபாலன் (27), காட்பாடியை சேர்ந்த பிரதாப் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து புஜ்ஜிபாபு, பூபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரதாப்பை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அலமேலுமங்காபுரம் பஜனை கோவில்தெருவை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் எஸ்.வி.சி. காந்திநகரில் சென்றபோது ஆட்டோவை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வடிவேலன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார்.

    இதுகுறித்து வடிவேலன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது எஸ்.வி.சி. காந்திநகரை சேர்ந்த பிரபு (26) என்பது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இரும்புக்கடை உரிமையாளர் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 15 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. பறக்கும்படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 12 மணியளவில் வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், ரூ.3½ லட்சம் இருந்தது. இதுகுறித்து நிலை கண்காணிப்புக்குழுவினர் விசாரித்தனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் வேலூர் சத்துவாச்சாரி பேங்க் மேன் நகரை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், வேலூரில் இரும்புக் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர் சத்துவாச்சாரியில் உள்ள வங்கியில் ரூ.3½ லட்சத்தை செலுத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர், வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வேலூர் உதவி கலெக்டருமான கணேசிடம் ஒப்படைத்தனர். அப்போது வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குடியாத்தம் அருகே வீடு கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி கட்டிட தொழிலாளி பலியானார். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44). கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    குடியாத்தம்-காட்பாடி ரோடு காந்தி நகர் சிங்காரம் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் மாடியில் பில்லர் அமைக்க நேற்று மாலையில் குணசேகரன் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பில்லருக்கு கட்டியிருந்த கம்பி சாய்ந்தது. உடனே குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் அந்த கம்பி பட்டது. அதிலிருந்த மின்சாரம் குணசேகரன் மீது பாய்ந்ததால் அவர் கீழே தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தி குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர்:

    வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் திவ்யா கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திவ்யா திருமணமாகி 3 ஆண்டுகளில் உயிரிழந்ததால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார்.
    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.கே.கோபிநாத் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், விவசாய அணி துணைச்செயலாளருமான ஆர்.என்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் கே.புருஷோத்தமன் வரவேற்றார்.

    இதில், சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது, கிராமங்கள்தோறும் சென்று வாக்குகள் சேகரிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசுக்கு வரவேற்பு அளித்த தே.மு.தி.க.வினர் மோட்டார் சைக்கிள், கார்களில் ஊர்வலமாக சென்றனர். இதைக்கண்ட வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தே.மு.தி.க.வினர் ஊர்வலம் செல்ல அனுமதி வாங்கி உள்ளார்களா என்று விசாரித்தார். அப்போது தே.மு.தி.க.வினர் அனுமதி பெறாமல் தேர்தல் விதியை மீறி ஊர்வலம் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தே.மு.தி.க. வேலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    ×