search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காட்சி
    X
    கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காட்சி

    ஒரே நாளில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு உள்பட 725 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

    கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.
    வேலூர்:

    கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான முன்கள பணியாளர்கள் அச்சம் காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதற்காக 14 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பூசி போடாத அனைத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    முகாமில் 4 டாக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் போலீசாரின் பெயர், பணிபுரியும் இடம் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு வரிசையாக தடுப்பூசி செலுத்தினர்.

    இதில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாமில் 695 பேருக்கும், அதைத்தொடர்ந்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த முகாமில் 30 போலீசாருக்கும் என்று ஒரே நாளில் 725 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று வேலூர் மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.

    இதே போல் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் நேற்று வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×