என் மலர்
வேலூர்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர் மசிகம் பரிதா என்பவரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் வேட்பாளரை மாற்றக்கோரி நேற்று பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கோஷமிட்டனர். நகர துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திருமால், தேசமுத்து, இன்பரசன், பொருளாளர் ஆனந்தன், இலக்கிய அணி செயலாளர் அறிவுடை நம்பி, வார்டு செயலாளர் பாரத், வழக்கறிஞர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 16 வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து இறங்கினார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். மேலும் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மொத்தமாக 80 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர்.
இதில் நேரில் அனுமதிக்கப்பட்ட 217 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும், 35 இளங்கலை மற்றும் 31 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சயதுசபி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாலையில் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளால் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மக்கானை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது25), சத்துவாச்சாரியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சின்ன அப்பு (29) உள்பட 5 பேரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகமாக உள்ளதாக வந்த புகாரை அடுத்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ரங்காபுரம் பகுதியில் ரவுடி பாஸ்கரன் என்ற சுக்ரி (24) என்பவரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சத்துவாச்சாரி போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நாட்டுப்புற நடனம் ஆடி 100 சதவீத வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குடுகுடுப்பைக்காரர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குடுகுடுப்பைக்காரர் ஒருவர் ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா... நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது... ஏப்ரல் 6-ந்தேதி எல்லாரும் ஓட்டு போடுங்க.
முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார்.
இந்த நிகழ்ச்சி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் கல்லூரி வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்கு என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


வேலூர்:
குடியாத்தம் அடுத்த பரதராமி வி.டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் மாப்பிள்ளை வீடு பார்க்க நேற்று உறவினர்கள் மினி வேனில் புறப்பட்டனர்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் மினி வேனில் ஊருக்கு திரும்பினர். காட்பாடி அருகே திருவலம் இ.பி கூட்ரோட்டில் வந்தபோது திடீரென மினிவேன் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் உட்பட 31 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குடியாத்தம் வி.டி.பாளையத்தை சேர்ந்த வெண்ணிலா (வயது35) பிச்சனூர் கே.எஸ். நகரை சேர்ந்த வசந்தா (45) ஆகியோர் இறந்தனர். மேலும் இரவில் வி.டி.பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதம் (55) என்பவரும் பலியானார்.
இதன்மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருமணம் பேசி முடிக்க மகிழ்ச்சியாக சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுக்கிறார். 10-ந்தேதி (புதன்கிழமை) காலை சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் வருகிறார்.
முதல் நிகழ்ச்சியாக சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.
பின்னர் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் உலக மக்கள் அமைதி, நலம், வளத்திற்காக சக்தி அம்மா தலைமையில் மகாலட்சுமியின் மகா மந்திரத்தை ஒரு லட்சம் முறை படித்து பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப்படுகிறது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று நாட்டு மக்களின் நலத்திற்காகவும், வளத்திற்காகவும் பிரார்த்தனை செய்து வழிபட உள்ளார்.
ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, ஜனாதிபதி வருகையையொட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்கலைக்கழகம் மற்றும் தங்ககோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதே போன்று பாதுகாப்பு பணிகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.
ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.சங்கர் தலைமையில் 6 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
பட்டமளிப்பு விழா நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்யும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில், வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறவும், 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்வதை கண்காணிக்கவும் 18 பறக்கும்படை, 18 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்டமன்ற தொகுதியின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேபோன்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது மற்றும் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது, பீர்வகைகள் விற்பனை செய்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடையும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வழங்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் கோட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, 21 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் வழங்க கூடாது என்று கடையின் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை ஒருவருக்கு 2 புல் அல்லது 4 ஆப் அல்லது 8 குவாட்டர் அல்லது 3 பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையும்மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அந்த கடையின் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கடையின் விற்பனை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமானால் அந்த கடை தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.






