என் மலர்tooltip icon

    வேலூர்

    கடந்த இரண்டு முறையும் அதிமுக வெற்றி பெற்றுள்ள ஜோலார்பேட்டை தொகுதி கண்ணோட்டம்.
    சொத்து மதிப்பு

    கே.சி. வீரமணி

    1. கையிருப்பு- ரூ. 49,000
    2. அசையும் சொத்து- ரூ. 33,83,37,743
    3. அசையா சொத்து- ரூ. 80,00,000

    தேவராஜி

    1. கையிருப்பு- ரூ. 6,57,478
    2. அசையும் சொத்து- ரூ. 39,45,416  
    3. அசையா சொத்து- ரூ. 2,10,61,000

    இதுவரை வெற்றி.....

    2011- கே.சி.வீரமணி- அ.தி.மு.க.
    2016- கே.சி.வீரமணி- அ.தி.மு.க.

    2016 தேர்தல் முடிவுகள்

    கே.சி.வீரமணி- அ.தி.மு.க.- 82,525
    கவிதா- தி.மு.க.- 71,534 
    பொன்னுசாமி- பா.ம.க.- 17,516
    ஃபையஸ் பாஷா- தே.மு.தி.க- 3,509
    திருமலை- விபிஎம்பி- 1,224
    ஓவியம் ரஞ்சன்- பா.ஜ.க.- 1,021
    தேன்மொழி- நாம் தமிழர்- 868
    லதா- பிஎஸ்பி- 700
    பி.வீரமணி- சுயே- 236
    சதீஷ்- சுயே- 198
    எம்.எஸ்.வீரமணி- சுயே- 158
    சிவக்குமார்- சுயே- 112
    நோட்டா- 1,483

    ஜோலார்பேட்டை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம்தான்.

    ஏலகிரிமலை ஜோலார்பேட்டை தொகுதியில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலமாக உள்ளது. 1.015 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு படகு சவாரி, சிறுவர் பூங்கா, மான் பூங்கா, செயற்கை நீருற்று ஆகியவையும், ஏலகிரி மலையின் எழில்மிகு முழுத் தோற்றத்தையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வசதி கொண்ட பரணும் உள்ளன.

    ஏலகிரி மலைக்கு சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஜோலார்பேட்டையில் பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இது முக்கிய ரெயில் சந்திப்பாக விளங்குகிறது.

    ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழில் பீடி தொழில் மற்றும் ஊதுபத்தி தொழிலாகும். இங்கு விவசாயம் அதிகளவில் உள்ளது. மேலும் பல்வேறு வடமாநிலத்தினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    தற்போது ரெயில்வே காலனியில் மட்டுமின்றி ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தினர் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். ஜோலார்பேட்டை தொகுதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.

    தொகுதி சீரமைப்பின் போது நாட்டறம்பள்ளி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளும், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியிலும், மீதமுள்ள 7 ஊராட்சிகள் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும் உள்ளன.

    ஜோலார்பேட்டை தொகுதி
     கே.சி. வீரமணி, தேவராஜி

    ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஜோலார்பேட்டை நகராட்சி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இடங்கியுள்ளன.

    இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர பிரிவினர் உள்ளனர்.

    மொத்தம் 1,38,466, ஆண்கள் 1,18,449, பெண்கள் 1,20,010, மூன்றாம் பாலித்தவர் 7 பேர் உள்ளனர்.

    தொகுதி சீரமைப்புக்கு பின்னர் நடந்த 2 தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த முறை மொத்தம் 267 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டது. இதனால் தற்போது 93 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம் 360 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    ஜோலார்பேட்டை அருகில் உள்ள சந்தைக்கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போதிய டாக்டர்கள் இல்லாததால் மருத்துவமனை செயல்படாமல் உள்ளது. எனவே டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

    ஜோலார்பேட்டையில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே ஜோலார்பேட்டை தொகுதியில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும். ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்களுக்கு ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி அமைத்து தரவேண்டும்.

    ஏலகிரிமலையில் ஏறுவதற்கு ஒரு சாலையும் அமைக்க வேண்டும். ஏலகிரிமலையில் சுமார் ரூ.100 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே உடனடியாக அதற்கான பணிகள் தொடங்க வேண்டும்.

    மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அதிமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் கே.சி. வீரமணி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தேவராஜி நிறுத்தப்பட்டுள்ளார். சரத்குமார் கட்சி சார்பில் ஆர். கருணாநிதி களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆ. சிவாவும், அமமுக சார்பில் தென்னரசு சாம்ராஜும் போட்டியிடுகின்றனர்.
    தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே மேட்டு இடையம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). இவர் தொரப்பாடியில் கடப்பா கல் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரது மனைவி வெளியூருக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து செல்வம் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
    வேலூரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் ரூ. 1,000 கோடியில் வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று அமைச்சர் கேசி வீரமணி பேசியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்புவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    வேலூர் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடையாளம் காட்டப்பட்டவர். பட்டப்படிப்பு படித்தவர். பண்பாளர். ஒரு இளைஞரை அ.தி.மு.க. இங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    வேலூரில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் ரூ. 1,000 கோடியில் வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கூட்டணி பலமாக உள்ளது. வேட்பாளர் அப்புவை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜெ.மூர்த்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தசரதன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மொய்தீன் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் இணைச்செயலாளர் முனியம்மாள், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, நாகு, சொக்கலிங்கம், ஜெய்சங்கர், சுந்தரம், பாண்டியன், அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், எம்.ஏ.ராஜா, ஆர். சுந்தரராஜி, பிரகாஷ் பாலச்சந்தர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ், வேலூர் ஒன்றிய செயலாளர் என்.கர்ணல், பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், வட்ட செயலாளர் சி.கே.ஜி.விஜயகுமார், பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், மகளிரணி மாநில தலைவி வரலட்சுமி, மாநகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஜெயப்பிரகாசம் நன்றி கூறினார்.
    இந்தியாவில் ஜநாயகம் ஒவ்வொரு மாநிலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க்கொண்டுள்ளது என்று துரைமுருகன் பேசியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க.வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    இந்தியாவில் ஜநாயகம் ஒவ்வொரு மாநிலத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவை கூட ஸ்டெக்சரில் படுக்க வைத்துவிட்டது.

    ஆனால் ஆண்மை சிங்கமாக எழுந்து நிற்கிற மு.க.ஸ்டாலின் மட்டும் தான் சுதந்திர வீரனாக இந்தியாவில் இருக்கிறார்.

    இந்தியாவில் சுதந்திரத்தை விரும்புகிறவர்கள் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரவேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால் தான் கருணாநிதி இருந்த போதே மாறுபட்டிருந்த கம்யூனிட்ஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் என யார்? யார்? ஜனநாயத்தை விரும்புகிறார்களோ அவர்கள் நம்மோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள்.

    ஜனநாயத்தை காக்கும் வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு தான் உண்டு என்று இந்திய நாடு மகத்தான நம்பிக்கையோடு உள்ளது. அந்த நம்பிக்கைக்கு உயிரூட்ட வேண்டும் என்றால் அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும்.

    கரத்தை வலம்படுத்த நாம் வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட ஆட்சி நடந்துள்ளது. ஒரு இம்மி அளவு முன்னேற்றத்தை அது தந்திருந்தால் கூட சற்று பாராட்டலாம்.

    தி.மு.க.வுக்குள் சண்டை இருந்தால் இப்போது நிறுத்துங்கள், தேர்தலுக்கு பின் தொடருங்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு இடம் கொடுக்காது தி.மு.க. 24 மணி நேரம் அல்ல 12 மணி நேரத்திற்குள் தூக்கி எறியப்படுவார்கள்.

    தி.மு.க.வில் இருக்கும் வரை தான் மரியாதை. இதில் இல்லாவிட்டால் அனாதை பிணம் போல தான். கட்சியை நினைத்து பகைமையை மறக்க வேண்டும். தற்போது நாம் வெற்றி பெற்றால் வீரர்கள். தோற்று விட்டால் அடிமையை விட கேவலமானவர்கள்.

    இவர் அவர் பேசினார்.

    வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 28). விஜய் மக்கள் இயக்க மாணவரணி நிர்வாகியாகவும் 32-வது வார்டு கடை துணை செயலாளராகவும் இருந்தார். இவர் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெருமுகை அருகே வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொற்று பாதிப்பு காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் நேற்று மேலும் 15 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவினால் 21 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 709 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 351 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தமிழக மாணவ-மாணவிகளின் கல்வி உரிமை, லட்சியத்தை மத்திய, மாநில அரசுகள் பறித்து விட்டன என்று வேலூரில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    வேலூர்:

    தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள தி.மு.க. மாநகர அலுவலகம் அருகே நேற்று திறந்தவேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை பொதுமக்கள் தோற்கடித்தது போன்று, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் விரட்டி அடித்து தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும்.

    தமிழக மாணவ-மாணவிகளின் கல்வி உரிமை, லட்சியத்தை மத்திய, மாநில அரசுகள் பறித்து விட்டன. முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ‘நீட்’ தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்களுடைய மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் கடந்த 3 ஆண்டில் 15 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். 

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ கல்விக்கு மட்டும் அல்லாமல் நர்சு படிப்புக்கும் நுழைவு தேர்வு கொண்டு வரப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கையில் 3, 5-ம் வகுப்புக்கும் நுழைவுத்தேர்வு அறிவித்திருக்கிறார்கள்.

    தமிழக அரசின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிட்டது. மோடியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தைரியமான தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. கடந்த ஆட்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். கருணாநிதி பேரனாகவும், மு.க.ஸ்டாலின் மகனாகவும் கேட்கிறேன். இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு அமோக ஆதரவு தாருங்கள். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    அதிமுக-வும், திமுக-வும் நேருக்குநேர் மோதம் அணைக்கட்டு தொகுதி கண்ணோட்டம்.
    அணைக்கட்டு வேலூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.1962-ல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும் 1967 மற்றும் 1971-ல் கணியம்பாடி தொகுதியாகவும் 1977 முதல் அணைக்கட்டு தொகுதியாக உள்ளது.

    அணையில் பெயரில் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் அணைகள் இல்லை. இந்த இடம் வேளாண்மைக்கு பிரபலமானது. ஆரம்ப காலத்தில் அறுவடையான நெற்பயிரில் இருந்து நெல்ல்லை பிரித்தெடுக்க யானைகளைப் பயன்படுத்தினர்.

    அணைக்கட்டு தொகுதி

    தமிழில் ஆனையை கட்டி என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபுரம் தங்க கோவில் இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளது. வெளிநாட்டினர் வடமாநிலத்தவர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்க கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான மலை கிராமங்கள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

    வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.

    அணைக்கட்டு தொகுதி

    கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமம், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், கெங்கநல்லூர், புலிமேடு, புதூர், செக்கனூர்,

    குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதுபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல்அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜார்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.

    அணைக்கட்டு தொகுதி

    பள்ளிகொண்டா பேரூராட்சி, கருகம்பத்தூர் வேலூர் மாநகராட்சியில் உள்ள பலவன்சாத்து அரியூர், விருப்பாச்சிபுரம் பாகாயம் மற்றும் பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி) பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

    மொத்தம் 2 லட்சத்து 53,376 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,22,955,பெண்கள் 1,30,344, மூன்றாம் பாலினம் 37 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியில் 40 சதவீதம் வன்னியர் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். இதுதவிர யாதவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முதலியார் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.

    இதுவரை நடந்த 10 தேர்தலில் அ.தி.மு.க. 6 தடவையும், தி.மு.க. 3, பா.ம.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    அணைக்கட்டு தொகுதி

    விவசாயம் மட்டுமே இந்த தொகுதியில் பிரதான தொழிலாக அமைந்துள்ளது ஒடுகத்தூர் கொய்யா, மருத்துவ குணம் வாய்ந்த இலவம்பாடி கத்தரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் பின் தங்கிய இப்பகுதி மக்களுக்கு சாலை மற்றும் பஸ் வசதி செய்து தர வேண்டும். அணைக்கட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

    அணைக்கட்டு தொகுதி

    ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மினிபஸ் வசதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் வளர்க்க சிறப்பு திட்டங்கள், மாதனூரில் புதிய போலீஸ் நிலையம், பள்ளிகொண்டாவில் விரிவுபடுத்திய வாரச்சந்தை மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

    அதிமுக சார்பில் வேலழகன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஏற்கனவே எம்எல்.ஏ.-வாக உள்ள  ஏ.பி. நந்தகுமார் களம் இறங்குகிறார்.

    அணைக்கட்டு தொகுதி
    அணைக்கட்டு தொகுதி

    1977- மார்கபந்து- அ.தி.மு.க
    1980- ஜி.விசுவநாதன்- அ.தி.மு.க.
    1984- வி.ஆர். கிருஷண்சாமி- அ.தி.மு.க.
    1989- கண்ணன்- தி.மு.க.
    1991- தருமலிங்கம்- அ.தி.மு.க.
    1996- கோபு- தி.மு.க.
    2001- பாண்டுரங்கன்- அ.தி.மு.க.
    2006- பாண்டுரங்கன்- அ.தி.மு.க.
    2011- கலையரசு- பா.ம.க.
    2016- ஏ.பி. நந்தகுமார்- தி.மு.க.
    குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்ட எல்லையில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி அமைந்துள்ளது.
    குடியாத்தம் நகரம் வழியாக பலமனேர், சித்தூருக்கும், குடியாத்தம், பேரணாம்பட்டு வழியாக வி.கோட்டா, குப்பத்துக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகிறது.

    குடியாத்தம் தொகுதியில் குடியாத்தம் நகராட்சி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், பேரணாம்பட்டு நகராட்சி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடங்கியுள்ளது. குடியாத்தத்தில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளதால் குட்டி சிவகாசி என்ற சிறப்பு உள்ளது. குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முக்கிய தொழில்களாக விவசாயம், கைத்தறி, தீப்பெட்டிகள், பீடி, தென்னைநார் உள்ளிட்ட தொழிற்சாலைகள், காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் உள்ளன.

    குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் தொகுதியில் ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், செங்குந்த முதலியார்கள், வன்னியர்கள், நாயுடுகள், யாதவர்கள், செட்டியார்கள் என அனைத்து சமுதாயத்தினரும் பெருமளவு உள்ளனர்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி குடியாத்தத்தில் பட்டுத்துணியால் நெய்து தரப்பட்டது.

    குடியாத்தம் தொகுதி

    காமராஜரை இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்த தொகுதி.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலின்போது 290 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கூடுதலாக 118 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 408 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகா பகுதிகள் இந்த தொகுதியில் இடங்கியுள்ளன.

    குடியாத்தம் தொகுதி

    மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 684 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,39,342 பேர், பெண்கள் 1,48,302 பேர், மூன்றாம் பாலித்தவர்கள் 40 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியில் முதலியார் சமுதாய ஓட்டுகள் 70 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இது தவிர வன்னியர், ஆதிதிராவிடர் வாக்குகள் தலா 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இஸ்லாமியர்கள், நாயுடு சமுதாய வாக்காளர்கள் கனிசமாக உள்ளனர்.

    பொதுமக்களின் எதிர்பார்ப்பு

    வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டதால் குடியாத்தம் தாலுகா தலைமை மருத்துவமனையை வேலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். குடியாத்தம் பகுதியில் ஏராளமான எந்திரம் மற்றும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளதால் சிட்கோ மூலமாக தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தேவையான குளோரைடு, மெழுகு பேப்பர் மற்றும் தீக்குச்சிக்கு தேவையான மரங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    குடியாத்தம் தொகுதி

    குடியாத்தம் பகுதியில் ஜவுளி, பூங்கா அமைக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு தேவையான நூல்களுக்கும், உற்பத்தி செய்யப்படும் லூங்கிகளுக்கும் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் கயிறு வாரியத்தின் கிளை அமைக்க வேண்டும். பெரிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் அரசு ஐ.டி.ஐ. அமைக்க வேண்டும்.

    குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும். அக்ராவரம், மீனூர்நடுகெட்டை பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும். குடியாத்தத்தில் சுற்றுச்சாலை (ரிங்ரோடு) அமைத்து தரவேண்டும்.

    நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க செதுக்கரை பகுதியில் இருந்து ஆற்றங்கரை ஓரமாக நெல்லூர்பேட்டை வரை சாலை அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் போக்குவரத்து நடைபெறும். எனவே கெங்கையம்மன் தரை பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்பட்டி சாலையில் வரும் வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் பேரணாம்பட்டு ரோட்டில் இணைப்பதற்கு மாற்று வழியை அமைக்க வேண்டும்.

    பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி அணை திட்டப்பணியை விரைந்து முடித்தால் பேரணாம்பட்டு பகுதியில் இணைந்து வருவதாலும் பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை தீரும். பேரணாம்பட்டில் சார்நிலை கருவூலம் ஏற்படுத்த வேண்டும்.

    குடியாத்தம் தொகுதி

    விழுப்புரம்- மங்களூரு தேசிய நெடுஞ்சாலையானது பேரணாம்பட்டு பகுதியில் இணைந்து வருவதாலும் பேரணாம்பட்டு, ஆம்பூர் மாநில நெடுஞ்சாலையானது. ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகில் இணைவதால் நெடுஞ்சாலையை ஏற்படுத்தினால் பேரணாம்பட்டு, ஆம்பூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    பேரணாம்பட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தமிழக எல்லையில் அமைந்துள்ள அரவட்லா மலைக்கிராம சாலையை சீரமைக்க வேண்டும்.

    பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். பேரணாம்பட்டு பகுதியில் மத்திய அரசின் தொழிற்நுட்ப கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி ஏற்படுத்தி தரவேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும். பேரணாம்பட்டில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.

    மாவட்ட எல்லையின் கடைசி பகுதியாக பேரணாம்பட்டு பகுதி உள்ளது. வேலூர் மாவட்ட எல்லை மாச்சம்பட்டில் முடிவடைகிறது. ஆனால் மாச்சம்பட்டு பகுதியானது திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்படுகிறது. போலீஸ் நிலையம் எல்லையை வரையறை செய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால் பேரணாம்பட்டில் தாலுகா போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    குடியாத்தம் தொகுதி
    குடியாத்தம் தொகுதி

    1962- மணவாளன்- காங்கிரஸ்
    1967- கோதண்டராமன்- கம்யூனிஸ்டு
    1971- துரைசாமி- தி.மு.க.
    1977- கோதண்டராமன்- கம்யூனிஸ்டு 
    1980- சுந்தரம்- கம்யூனிஸ்டு
    1984- கோவிந்தசாமி- காங்
    1989- சுந்தரம்- மா.கம்யூ
    1991- தண்டாயுதபாணி- காங்
    1996- தனபால்- தி.மு.க.
    2001- சூரியகலா- அ.தி.மு.க.
    2006- லதா- மா.கம்யூ
    2011- லிங்கமுதது- கம்யூ
    2016- ஜெயந்தி பத்மநாபன்- அ.தி.மு.க.
    2019- காத்தவராயன்- தி.மு.க. (இடைத்தேர்தல்)
    திமுக தேர்தலில் வெற்றி சிறகடித்து வெளியே வருவோம் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வில்லன். நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி சிறகடித்து வெளியே வருவோம். தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது இதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடப்பது தான். இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    10 முறை ஒரே தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன் என்றால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றி செய்துள்ளேன். அதனால் தான், மக்கள் என்னை தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் 10 முறை என 15-வது முறையும் வெற்றி பெறச் செய்வார்கள்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
    வேலூர் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தாய்-மகன் பலியாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி மல்லிகா (வயது 50). இவர்களின் மகன் சதீஷ் (27) வேலூர் அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக தந்தையும், தாயும் இருந்துள்ளனர். 3 பேரும் கடையின் மேல்தளத்தில் உள்ள அறையில் தங்கியதாகவும், வாரம் ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் தாய் மல்லிகாவுடன் அடுக்கம்பாறையில் இருந்து சொந்த ஊரை நோக்கி சென்றார். வேலூரை அடுத்த ரெட்டேரி கோடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினர் மற்றும் ரெட்டேரி கோடி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஆம்பூர் தொகுதி கண்ணோட்டம். இந்தத் தொகுதியில் அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஆம் என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும். ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது.

    ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன.

    ஆம்பூர் தோல் பொருட்கள், ஷூ உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டுவதால் ஆம்பூர் நகரம் டாலர் ஏரியா எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருட்கள் கண்காட்சிக்கு என ஆம்பூரில் வர்த்தக மையம் துவங்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர் பிரியாணி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. மேலும் மல்லிகை பூவுக்கும், விவசாயத்துக்கும் புகழ்பெற்ற ஆம்பூர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உருவாக்கப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆம்பூர் ஆரம்பத்தில் கடந்த 1957-ம் ஆண்டு இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதியாக இருந்துள்ளது. அதன்பின் 1962 முதல் 1971 வரை ஆம்பூர் (தனி) தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூர் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கடந்த 2011 தேர்தல் முதல் ஆம்பூர் (பொது) தொகுதியாக மீண்டும் உருவானது.

    ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளும், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியம், அணைக்கட்டு ஒன்றியத்தை சேர்ந்த பகுதிகளும் உள்ளன. தொகுதியில் மொத்தம் 236819 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 114905 ஆண் வாக்காளர்களும், 121902 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 12 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர்களில் ஆதிதிராவிடர், முஸ்லிம்கள், நாயுடு, முதலியார், வன்னியர், யாதவர், ரெட்டியார், ராஜூக்கள், நாடார் பல்வேறு இனத்தவரும் இத்தொகுதியில் வசித்து வருகின்றனர்.

    கோரிக்கைகள்

    ஏ.-கஸ்பா பகுதியில் உள்ள ஒரேஒரு அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஏற்படுத்தி தரவேண்டும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் ஆம்பூர் இஎஸ்ஐ மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

    வெளிநாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அடிக்கடி ஆம்பூர் வருகின்றனர். ஆனால் ஆம்பூரில் ஒருசில ரெயில்களை தவிர எந்த ரெயில்களும் நிற்பது கிடையாது. ஆம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆம்பூர் தொகுததி
    அதிமுக  வேட்பாளர் நஜர் முகமது, திமுக வேட்பாளர் வில்வநாதன்

    சான்றோர்குப்பம் என்ற இடத்திலிருந்து இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வரை மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் அதன் வழியாக கார், லாரி போன்ற இதர வாகனங்கள் எளிதில் செல்ல வசதியாக இருக்கும்.

    ஆம்பூரை தலைமையிடமாக கொண்டு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தனியாக ஏற்படுத்த வேண்டும். ஆம்பூரில் மின்மயானம் அமைக்க வேண்டும். ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு தடுப்பணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

    பெத்லகேம், ரெட்டித்தோப்பு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். மாதனூரை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். நாயக்கனேரி மலை சுற்றுலா தலமாக்க வேண்டும்:

    ஆம்பூரில் இருந்து மின்னூர் பகுதியில் டான்சி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனால் அதனை புதிய தொழில் பேட்டையாக அறிவித்து அங்கு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மிட்டாளத்தில் உள்ள ஊட்டல் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். கிராம பகுதியில் கூடுதல் கால்நடை ஆஸ்பத்திரி உருவாக்க வேண்டும்.

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரை பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே பாலாற்றில் தண்ணீர் வரத்தை உறுதிபடுத்த தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்க வேண்டும்: ஆம்பூர் தொகுதியில் முக்கியமாக வேலை வாய்ப்பை வழங்கி வருவது தோல் தொழில் ஆகும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா தொற்று காரணமாக தோல் தொ-ழில் முற்றிலும் முடங்கி விட்டது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    மேலும் தற்போது வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதி பெருமளவு குறைந்து விட்டதால் பல தொழிற்சாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். என முடங்க இருக்கும் தோல் தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல புதியாக அமையப்போகும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிமுக சார்பில் நஜர் முகமது போட்டியிடுகிறார். திமுக சார்பில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆ.செ. வில்வநாதன் போட்டியிடுகிறார்.

    2019 இடைத்தேர்தல்

    வில்வநாதன்- தி.மு.க.- 96,455
    ஜோதிராமலிங்கராஜா- அ.தி.மு.க.- 58,688
    பாலசுப்பிரமணியன்- அ.ம.மு.க.- 8,856
    செல்வமணி- நாம்தமிழர்- 3,122
    கரீம்பாஷா- ம.நீ.ம.- 1,853
    ஷோபாபாரத்- சுயேட்சை- 938
    ராஜ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி-158
    சலாவுதீன்- சுயேட்சை- 275
    நோட்டா- 1,852

    இதுவரை வெற்றி பெற்றவர்கள்

    2011- அஸ்லம்பாஷா- மனிதநேய மக்கள் கட்சி
    2016- பாலசுப்பிரமணி- அ.தி.மு.க.
    2019- வில்வநாதன்- தி.மு.க.
    ×