என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஆம்பூர் தொகுதி
    X
    ஆம்பூர் தொகுதி

    அதிமுக- திமுக நேருக்குநேர் போட்டியிடும் ஆம்பூர் தொகுதி கண்ணோட்டம்

    இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஆம்பூர் தொகுதி கண்ணோட்டம். இந்தத் தொகுதியில் அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஆம் என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும். ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது.

    ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன.

    ஆம்பூர் தோல் பொருட்கள், ஷூ உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டுவதால் ஆம்பூர் நகரம் டாலர் ஏரியா எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருட்கள் கண்காட்சிக்கு என ஆம்பூரில் வர்த்தக மையம் துவங்கப்பட்டுள்ளது.

    ஆம்பூர் பிரியாணி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. மேலும் மல்லிகை பூவுக்கும், விவசாயத்துக்கும் புகழ்பெற்ற ஆம்பூர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உருவாக்கப்பட்டு அவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஆம்பூர் ஆரம்பத்தில் கடந்த 1957-ம் ஆண்டு இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதியாக இருந்துள்ளது. அதன்பின் 1962 முதல் 1971 வரை ஆம்பூர் (தனி) தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூர் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கடந்த 2011 தேர்தல் முதல் ஆம்பூர் (பொது) தொகுதியாக மீண்டும் உருவானது.

    ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளும், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியம், அணைக்கட்டு ஒன்றியத்தை சேர்ந்த பகுதிகளும் உள்ளன. தொகுதியில் மொத்தம் 236819 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 114905 ஆண் வாக்காளர்களும், 121902 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 12 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர்களில் ஆதிதிராவிடர், முஸ்லிம்கள், நாயுடு, முதலியார், வன்னியர், யாதவர், ரெட்டியார், ராஜூக்கள், நாடார் பல்வேறு இனத்தவரும் இத்தொகுதியில் வசித்து வருகின்றனர்.

    கோரிக்கைகள்

    ஏ.-கஸ்பா பகுதியில் உள்ள ஒரேஒரு அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஏற்படுத்தி தரவேண்டும். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் ஆம்பூர் இஎஸ்ஐ மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

    வெளிநாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அடிக்கடி ஆம்பூர் வருகின்றனர். ஆனால் ஆம்பூரில் ஒருசில ரெயில்களை தவிர எந்த ரெயில்களும் நிற்பது கிடையாது. ஆம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆம்பூர் தொகுததி
    அதிமுக  வேட்பாளர் நஜர் முகமது, திமுக வேட்பாளர் வில்வநாதன்

    சான்றோர்குப்பம் என்ற இடத்திலிருந்து இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வரை மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் அதன் வழியாக கார், லாரி போன்ற இதர வாகனங்கள் எளிதில் செல்ல வசதியாக இருக்கும்.

    ஆம்பூரை தலைமையிடமாக கொண்டு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தனியாக ஏற்படுத்த வேண்டும். ஆம்பூரில் மின்மயானம் அமைக்க வேண்டும். ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு தடுப்பணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

    பெத்லகேம், ரெட்டித்தோப்பு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். மாதனூரை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். நாயக்கனேரி மலை சுற்றுலா தலமாக்க வேண்டும்:

    ஆம்பூரில் இருந்து மின்னூர் பகுதியில் டான்சி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனால் அதனை புதிய தொழில் பேட்டையாக அறிவித்து அங்கு தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மிட்டாளத்தில் உள்ள ஊட்டல் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். கிராம பகுதியில் கூடுதல் கால்நடை ஆஸ்பத்திரி உருவாக்க வேண்டும்.

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரை பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே பாலாற்றில் தண்ணீர் வரத்தை உறுதிபடுத்த தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மாவட்ட தொழில் மைய அலுவலகம் அமைக்க வேண்டும்: ஆம்பூர் தொகுதியில் முக்கியமாக வேலை வாய்ப்பை வழங்கி வருவது தோல் தொழில் ஆகும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா தொற்று காரணமாக தோல் தொ-ழில் முற்றிலும் முடங்கி விட்டது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    மேலும் தற்போது வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதி பெருமளவு குறைந்து விட்டதால் பல தொழிற்சாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். என முடங்க இருக்கும் தோல் தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல புதியாக அமையப்போகும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிமுக சார்பில் நஜர் முகமது போட்டியிடுகிறார். திமுக சார்பில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆ.செ. வில்வநாதன் போட்டியிடுகிறார்.

    2019 இடைத்தேர்தல்

    வில்வநாதன்- தி.மு.க.- 96,455
    ஜோதிராமலிங்கராஜா- அ.தி.மு.க.- 58,688
    பாலசுப்பிரமணியன்- அ.ம.மு.க.- 8,856
    செல்வமணி- நாம்தமிழர்- 3,122
    கரீம்பாஷா- ம.நீ.ம.- 1,853
    ஷோபாபாரத்- சுயேட்சை- 938
    ராஜ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி-158
    சலாவுதீன்- சுயேட்சை- 275
    நோட்டா- 1,852

    இதுவரை வெற்றி பெற்றவர்கள்

    2011- அஸ்லம்பாஷா- மனிதநேய மக்கள் கட்சி
    2016- பாலசுப்பிரமணி- அ.தி.மு.க.
    2019- வில்வநாதன்- தி.மு.க.
    Next Story
    ×