என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது.
இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் இங்கு வசிக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ தமிழின துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூக நீதி, சுயமரியாதையுடன் வாழவும், ஊழலற்ற, உண்மையான மக்கள் விரும்பும் ஆட்சி அமைய அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தல் தமிழகத்துக்கு திருப்புமுனையாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
‘‘சமூக நீதி அடிப்படையில் நமது கூட்டணி இருக்கிறது. நமது 40 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் மறக்கக் கூடாது.
வன்னியர்களை போன்று இன்னும் பல சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். பா.ம.க., புரட்சி பாரதம் கட்சியின் கொள்கையும் சமூக நீதிதான்.
நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம். அதற்கு ஒரு படி தான் இந்த கூட்டணி. இது பலமான கூட்டணி.
இந்த ஆட்சி பெண்களுக்கு அமைதி தரும் ஆட்சி. கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நான் உங்களை பார்க்க முடியவில்லை. இப்போது வந்திருக்கிறேன். நானும் உங்களோடு துள்ளிக்குதிக்க ஆசையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வேலூர் மண்டித்தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
இந்த தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கும், வியாபாரியான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போர். இதில், விவசாயி வெற்றி பெற வேண்டும்.
அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்-அமைச்சராக நம்மில் ஒருவரான விவசாயி வந்துள்ளார்.
அவரின் ஆட்சி தொடர வேண்டும். அ.தி.மு.க. மக்களாட்சி, தி.மு.க. மன்னராட்சி. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் மன்னராட்சியில் அவரின் வாரிசுதான் அடுத்து மன்னராக வர முடியும். தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்து செயல்படுகிறார்.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களை பாதுகாக்கவும், முன்னேற்றவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களின் கஷ்டங்களை போக்க திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் வெறும் அறிவிப்பாக தான் இருக்கும். வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றதைபோன்று, அனைத்து சமுதாய மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனித்தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும். பா.ம.க. சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.
மு.க.ஸ்டாலின் தி.மு.க.வை பீகாரை சேர்ந்த பிரசாந்த கிஷோரிடம் பலகோடிக்கு அடகு வைத்து விட்டார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி, இடஒதுக்கீடு, வரலாறு, கணக்கு என்று எதுவும் தெரியாது. ஆனால் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற வெறி மட்டும் அவரிடம் உள்ளது.
சட்டசபையில் அடிக்கடி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்கிறார். எதிர்கட்சி தலைவராக செயல்பட முடியாத மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சராக எப்படி செயல்பட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.













வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 10-க்கும் குறைவான நபர்களே தினமும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 25 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 222 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர். 352 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 21 பெண் வேட்பாளர்கள், 95 ஆண் வேட்பாளர்கள் என்று மொத்தம் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அதிகபட்சமாக குடியாத்தம் (தனி) தொகுதியில் 28 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பரிசீலனை செய்தனர்.
வேலூர் தொகுதியில் 24 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
காட்பாடி தொகுதியில் பெறப்பட்ட 22 மனுக்களில், 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மனுக்கள் தள்ளுபடியானது.
அணைக்கட்டு தொகுதியில் 23 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 19 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். அவற்றில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடியானது.
குடியாத்தம் (தனி) தொகுதியில் பெறப்பட்ட 28 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடியானது. 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆக மொத்தம் 116 வேட்புமனுக்களில், 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்றைய தினமே (திங்கட்கிழமை) கடைசிநாளாகும்.
அதைத்தொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






