என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சோளிங்கர் தொகுதி
பாமக- காங்கிரஸ் நேருக்குநேர் மோதும் சோளிங்கர் தொகுதி கண்ணோட்டம்
பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் நேருக்குநேர் சந்திக்கும் சோளிங்கர் தொகுதி கண்ணோட்டம்.
பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் நேருக்குநேர் சந்திக்கும் சோளிங்கர் தொகுதி கண்ணோட்டம்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை தொகுதி களுக்கு நடுவில் சோளிங்கர் தொகுதி உள்ளது.
சோளிங்கர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார். இதனால் இப்பகுதி சிம்மபுரம் என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு சோழர்கள் ஆட்சி புரிந்ததால் சோழபுரம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் சோளிங்கர் என அழைக்கப்பட்டு வருகிறது.
பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.முனிரத்தினம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கார்த்திக் ராஜா, நாம் தமிழர் சார்பில் யு.ரா. பாவேந்தன், அமமுக சார்பில் என.ஜி. பார்த்திபன்.
பாமக வேட்பாளர் அ.ம. கிருஷண்ன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 2,71,12,100
3. அசையா சொத்து- ரூ. 70,00,000
காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 31,57,450
2. அசையும் சொத்து- ரூ. 35,78,61,239
3. அசையா சொத்து- ரூ. 15,08,19,000
சோளிங்கர் பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பெரிய மலை மீது யோக நரசிம்ம லட்சுமி சாமி கோவிலும், சின்ன மலை மீது யோக ஆஞ்சநேயர் சாமி கோவிலும் உள்ளது.
கார்த்திகை மாதத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

மேலும் டி.வி.எஸ். நிறுவனம், அரசு மருத்துவமனை, அதிகமான சத்திரங்கள் உள்ளன. பனப்பாக்கத்தில் புலியும், மயிலும் பூஜை செய்து வழிபட்ட வரலாற்று சிறப்புமிக்க மயூரநாதசாமி கோவில் உள்ளது.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சோளிங்கர் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள், நெமிலி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் மற்றும் சோளிங்கர் பேரூராட்சி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி, பேரூராட்சி, பனப்பாக்கம் பேரூராட்சி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி இங்கு உள்ளது. சோளிங்கர் தொகுதியில் முக்கிய தொழில் நெசவு தொழில், விவசாயம் சிறந்து விளங்குகிறது. தனியார் தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன.
அரக்கோணம் தாலுகா இரண்டாகப் பிரித்து நெமிலியில் புதிய தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சோளிங்கர் தொகுதியில் வன்னியர், முதலியார், ஆதிதிராவிடர், யாதவர், முஸ்லிம், செட்டியார், நாயுடு, கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்: 2,75,532
ஆண்கள்: 1,35,256
பெண்கள்: 1,40,266
மூன்றாம் பாலினத்தவர்: 10 பேர் உள்ளனர்.

1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அ.தி.மு.க.வும், தலா ஒருமுறை தி.மு.க.வும், த.மா.கா.வும், தே.மு.தி.க.வும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 2019-ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
2016ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த என்.ஜி. பார்த்திபன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.முனிரத்தினம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் என்.ஜி. பார்த்திபன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் என்.ஜி. பார்த்திபன் டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றதால் நீதிமன்றம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜி.சம்பத் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோகன் தோல்வியடைந்தார்.
சோளிங்கர் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சோளிங்கரில் புதிதாக தாலுகா அலுவலகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசு சார்பில் கட்டிடம் கட்டித்தர வேண்டும். சோளிங்கரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தேசிய தர சான்றிதழ் தரப்பட்ட மருத்துவமனையாக இருந்தும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அல்லது சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ரோப்கார் திட்டப்பணிகள் 15 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் காலணி தொழிற்சாலை அமைத்து 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சோளிங்கர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க இப்பகுதியில் புறவழிச்சாலையில் உருவாக்கித் தரவேண்டும்.
சோளிங்கர் பகுதியை சுற்றுலா மையமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும். சோளிங்கர் பகுதியில் அமைக்கப்பட்ட அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தி போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். இங்கு நெசவுத் தொழில் அதிக அளவில் உள்ளதால் தொழிலாளர்களுக்கான ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சோளிங்கர் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தல் வெற்றி


1957 பக்தவச்சலம் காங்
1962 பொன்னுரங்க முதலியார் காங்
1967 அரங்கநாதன் தி.மு.க
1971 பொன்னுரங்க முதலியார் நிறுவன காங்
1977 ராமசாமி அ.தி.மு.க.
1980 கோபால் அ.தி.மு.க.
1984 சண்முகம் அ.தி.மு.க.
1989 முனிரத்தினம் காங்
1991 முனிரத்தினம் காங்
1996 முனிரத்தினம் த.மா.கா
2001 வில்வநாதன் அ.தி.மு-.க
2006 அருள்அன்பரசு காங்
2011 மனோகர் தே.மு.தி.க.
2016 என்.ஜி.பார்த்திபன் அ.தி.மு.க.
2019 ஜி.சம்பத் அ.தி.மு.க. (இடைத்தேர்தல்)
Next Story






