search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    தி.மு.க.வில் மன்னராட்சி நடக்கிறது- அன்புமணி ராமதாஸ் பேச்சு

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்து செயல்படுகிறார்.

    வேலூர்:

    பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வேலூர் மண்டித்தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-

    இந்த தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கும், வியாபாரியான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போர். இதில், விவசாயி வெற்றி பெற வேண்டும்.

    அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்-அமைச்சராக நம்மில் ஒருவரான விவசாயி வந்துள்ளார்.

    அவரின் ஆட்சி தொடர வேண்டும். அ.தி.மு.க. மக்களாட்சி, தி.மு.க. மன்னராட்சி. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் மன்னராட்சியில் அவரின் வாரிசுதான் அடுத்து மன்னராக வர முடியும். தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்து செயல்படுகிறார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களை பாதுகாக்கவும், முன்னேற்றவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களின் கஷ்டங்களை போக்க திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் வெறும் அறிவிப்பாக தான் இருக்கும். வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றதைபோன்று, அனைத்து சமுதாய மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனித்தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும். பா.ம.க. சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

    மு.க.ஸ்டாலின் தி.மு.க.வை பீகாரை சேர்ந்த பிரசாந்த கிஷோரிடம் பலகோடிக்கு அடகு வைத்து விட்டார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி, இடஒதுக்கீடு, வரலாறு, கணக்கு என்று எதுவும் தெரியாது. ஆனால் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற வெறி மட்டும் அவரிடம் உள்ளது.

    சட்டசபையில் அடிக்கடி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்கிறார். எதிர்கட்சி தலைவராக செயல்பட முடியாத மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சராக எப்படி செயல்பட முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×