என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    ஜனாதிபதி 10-ந்தேதி வேலூர் வருகை : மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.
    வேலூர்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுக்கிறார். 10-ந்தேதி (புதன்கிழமை) காலை சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் வருகிறார்.

    முதல் நிகழ்ச்சியாக சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.

    பின்னர் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் உலக மக்கள் அமைதி, நலம், வளத்திற்காக சக்தி அம்மா தலைமையில் மகாலட்சுமியின் மகா மந்திரத்தை ஒரு லட்சம் முறை படித்து பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப்படுகிறது. அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று நாட்டு மக்களின் நலத்திற்காகவும், வளத்திற்காகவும் பிரார்த்தனை செய்து வழிபட உள்ளார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, ஜனாதிபதி வருகையையொட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்கலைக்கழகம் மற்றும் தங்ககோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதே போன்று பாதுகாப்பு பணிகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.சங்கர் தலைமையில் 6 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்யும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில், வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×