என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும்.
    • மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியா வின் மிகப்பெரிய இரண்டா வது உவர்ப்பு நீர் ஏரியாகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    இவர்கள் மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும். பருவ கால மாற்றத்தினாலும் கடல் அலையின் சீற்றத்தினாலும் அந்த இடத்தில் அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி முகத்துவாரம் அடைபட்டு போவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து அடைபட்ட மணல் திட்டு பகுதிகளை படகு மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி சென்று வந்தனர்.

    இதைத்தொடர்ந்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றி உள்ள மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவார பணிக்கு ரூ.26.85 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பழவேற்காடு முகத்துவார பணி இன்று காலை தொடங்கியது. இதனால் மீனவர்களின் 40 வருட கனவு நிறைவேறி உள்ளது. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது.
    • குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ளது அகூர் கிராமம். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மேல் நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. கடந்த 20-நாட்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். குடிநீரை கடைகளில் கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

    தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி.சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது75). இவரது மகன் பாபு, வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமியில் டி.எஸ்.பி.ஆக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சோளிங்கர்-பள்ளிப்பட்டு சாலையில் எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிப்பட்டு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென மாணிக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பிய மேலப்புடி காலனியை சேர்ந்த ஒருவரை தேடிவருகிறார்கள். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.
    • தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.

    ஆனால் இரவு 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அவதி அடைந்த பொது மக்கள் செவ்வாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்ட போது உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீ சார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு பின்பு மின் சப்ளை வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தொழுவூர் கிராமமக்கள் கூறும்போது, காலை 9 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்ததால் அதற்கு ஏற்ப எங்கள் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அதற்குப் பிறகும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் அன்சாரி (48). இவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி யாஸ்மின் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

    • மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர்.
    • ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

    போரூர்:

    சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் தான் டாக்டர் என்று கூறி கடந்த 8-ந்தேதி திருப்பதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து டிரைவர் தினேஷ்குமார் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்து அந்த டிப்-டாப் நபரை காரில் அழைத்து சென்றார். அப்போது கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை உள்ளது.மதுகுடித்துவிட்டு செல்லலாம் என்று கூறி டிரைவர் தினேஷ்குமாரை ஓட்டலில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்றார். அங்கு நூதன முறையில் தினேஷ்குமாரிடம் இருந்து கூகுள்பே மூலம் ரூ.8 ஆயிரம் பணத்தை பெற்று அவரது செல்போனையும் டிப்-டாப் நபர் எடுத்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து டிரைவர் தினேஷ்குமார் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா, கோடம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓட்டல் பாரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலி டாக்டர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சஞ்சய் வர்மா என்பதும் டாக்டர் போல நடித்து டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை முன்பதிவு செய்து டிரைவர்களை குறிவைத்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து வருவதும் தெரியவந்தது.

    அவரிடம் ஏராளமான போலி அடையாள அட்டைகள் இருந்தன. ஒரு ஆதார் கார்டில் கேரளாமாநிலம் கண்ணூர் என்ற முகவரி இருந்தது. இதேபோல் போலி டாக்டர் சஞ்சய் வர்மா கடந்த மாதம் 29-ந் கார் டிரைவர் ஒருவரிடம் நூதன முறையில் ரூ.9ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு கள்ளநோட்டுகளை கொடுத்து தப்பி இருந்தார்.

    மேலும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் ஏராளமனோரிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட யுவராஜ், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    • இ.யுவராஜை ஆவடி மாநகர பகுதித்தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆவடி மாநகர் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத்தலைவராக இ.யுவராஜை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்செயலர் கே.சி.வேணுகோபால் எம்.பி நியமித்துள்ளார்.

    இதற்கு முன்பு, இவர் ஆவடி மாநகர வடக்கு பகுதித்தலைவராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட யுவராஜ், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மாவட்டத்தலைவர் இ.யுவராஜை ஆவடி மாநகர பகுதித்தலைவர்கள், நிர்வாகிகள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    • வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது.

    இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் ஏற்கனவே அணைகள் உள்ளன. அதிக மழை பெய்யும்போது கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில் மேலும் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் 3-வது தடுப்பணை ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    இந்த தடுப்பணை கடந்த பிப்ரவரி மாதம் 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டும் பணி தொடங்கியது. தற்போது இதில் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முழுஅளவில் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். எனவே வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலங்கள், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்சாகுபடி, கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பயன்தரும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கூவம் ஆற்றின் குறுக்கே அதிகத்தூர் அருகே ரூ. 17.70 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும்போது சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கும். தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது தற்போது 35 அடி ஆழத்தில் இருக்கும் நீர்மட்டம், 15 அடியாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவவர் ராகுல் (வயது25). கட்டிட தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு ராகுல் திருவள்ளூர் காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதன்பின்னர் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் தீபாதுகாப்பு ஒத்திகை மற்றும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்

    • குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பாச்சூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் புதிய திருப்பாச்சூர், பழைய திருப்பாச்சூர், கொசவன்பாளையம், பள்ளிஅறை குப்பம், கோட்டை காலனி, பெரிய காலனி, தாட்கோ நகர், அம்பேத்கர் நகர், வசந்தம் நகர் என 9 குக்கிராமங்களில் 12 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொசவன்பாளையம் பஸ் நிலையம் அருகே கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது.

    இந்த குடிநீர் தொட்டியில் உள்ள தூண்கள் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால் அதன் அருகில் செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    மேலும் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதன் தூண்களில் இருந்த சிமெண்டுகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×