search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தனி அருகே 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்- பெண்கள் மறியல்
    X

    திருத்தனி அருகே 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்- பெண்கள் மறியல்

    • குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது.
    • குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ளது அகூர் கிராமம். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மேல் நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குடிநீர் மோட்டார் பழுதானதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. கடந்த 20-நாட்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். குடிநீரை கடைகளில் கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

    தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி.சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×