என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் நிற்கும் குடிநீர் தொட்டி- புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    தூண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் நிற்கும் குடிநீர் தொட்டி- புதிதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பாச்சூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் புதிய திருப்பாச்சூர், பழைய திருப்பாச்சூர், கொசவன்பாளையம், பள்ளிஅறை குப்பம், கோட்டை காலனி, பெரிய காலனி, தாட்கோ நகர், அம்பேத்கர் நகர், வசந்தம் நகர் என 9 குக்கிராமங்களில் 12 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொசவன்பாளையம் பஸ் நிலையம் அருகே கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது.

    இந்த குடிநீர் தொட்டியில் உள்ள தூண்கள் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால் அதன் அருகில் செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    மேலும் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் பைப்புகள் முழுவதும் பாசிபடர்ந்து குடிநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதன் தூண்களில் இருந்த சிமெண்டுகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×