என் மலர்
திருவள்ளூர்
- கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
- திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயல், சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகத்தாய். இவர், ஈ.எஸ். ஐ. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டிக்கு தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது நர்சு வீட்டில் கைவரிசை காட்டியது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டை பாலா என்கிற பாலமுருகன் என்பது தெரிந்தது. அவனை சவுகார்பேட்டை அருகே நகையை விற்க முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.
கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.
கொள்ளையடித்த நகைகளை விற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அவனிடம் இருந்து 57 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு திருப்பூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதான உகாண்டா நாட்டை சேர்ந்த நசமா சரம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் உறவினர்கள் கைதிகளுக்கு கொடுத்த பொருட்களை வழங்கும் பணியில் சிறை காவலர் அயனிங் ஜனாதா ஈடுபட்டார். அப்போது கைதி நசமா சரம், பெண் போலீஸ் அயனிங் ஜனாதாவை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த மற்ற போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.
இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
- சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
திருவள்ளூர்:
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.
பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
- கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி:
அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபிலன் (வயது38). இவரது மனைவி அமுதா (29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலன் தனது மனைவி அமுதாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது நாகராஜா கண்டிகை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கபிலன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அமுதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த வல்லுரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை சார்பில் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழா தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு,கட்சி கொடியேற்றுதல்,நல திட்ட உதவிகள், தெருமுனை கூட்டம், வல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மா.உமாபதி தலைமை வகித்தார், பொறியாளர் அணி இணை செயலாளர் வல்லூர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவண மைய மாநில துணைச் செயலாளர் சி. நீலமேகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் நாடாளுமன்ற செயலாளர் நெடுஞ்செழியன் பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், வல்லூர் ரவிமணி, நாதன், வடிவேல், மனோ, குமரவேல், மோத்தி, லலிதா, தேசியதிலகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக வல்லூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து வட சென்னை அனல் நிலைய சாலை, வல்லூர்சாலை, உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் கிராமத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.
- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
- பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரி வந்த டைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.
கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்ததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26. 55 அடியாக பதிவானது. 1.071 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் ஏற்படும் தொடர் மின் வெட்டால் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிகத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் நேற்று 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இரவு நேரத்திலும் மின்தடையால் மக்கள் தவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிகத்தூர் கிராம மக்கள் மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கிராமங்களுக்கு அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி அனுப்பப்படுகிறது. இதனால் கிராமப் புறங்களில் மின்சாரம் தடைப்படுகிறது. இதுபற்றி மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. தொடர் மின் வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமப்புற பகுதியில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 13). இவர் நயப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபாமா பவித்ராவின் உடலை கைப்பற்றி அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கூலித்தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன வேம்பாக்கம் ரெயில்வே சாலை அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவர் கோமளா (வயது65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கோமளா தூங்கினார். அதிகாலையில் அவர் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோமளா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்த போது கோமளா ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் தாக்கப்பட்டதால் வீங்கி இருந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சத்தம்கேட்டு கோமளா எழுந்ததும் அவரை மிரட்டி உள்ளனர்.
பின்னர் வீட்டில் நகை-பணம் பெரிய அளவில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கோமளாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த நகை, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
மூதாட்டி கோமளா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொள்ளை கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் குமார் என்பவருடன் பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இருளஞ்சேரி அருகே வந்த போது எதிரே பேரம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சக்கரபாணி, குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் சக்கரபாணி பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வடமாநில வியாபாரிகளை தாக்கி எல்இடி டிவியை பறித்துச் சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
உத்தர பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் (32) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூரில் தங்கி இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஊர் ஊராக தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்திற்கு ஒரு எல்.இ.டி டிவி, 2 ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு உதவியாளர் ஒசாமா (19) என்பவரை அழைத்துக் கொண்டு சென்றார்.
வடதில்லை கிராம எல்லைக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் வழி மறித்து வடமாநில வியாபாரிகளை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த எல்இடி டிவி,ஹோம் தியேட்டர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வடமாநில வியாபாரி சதாம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன், முதல் நிலைக் காவலர் ராஜு, காவலர்கள் முகமது அலி, மந்திரசேகர், பெருமாள் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், குற்றவாளிகள் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்ற ஜெனிராஜ் (31), அரக்கோணத்தைச் சேர்ந்தவரும் தற்போது தாணிப்பூண்டியில் தங்கி இருப்பவருமான அப்துல் ரகுமான் (30) என்பதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ராஜதுரை என்ற ஜெனிராஜ், அப்துல் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான சென்றான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வடமாநில வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் இருவரை 4 மணி நேரத்தில் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீசாரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ்கல்யான், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் பாராட்டினர்.






