என் மலர்
திருப்பூர்
- ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
- புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்(வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவரும், அவரது மனைவி விஜி(26), மகள் வின்சிலின்(6) ஆகியோர் அவர்கள் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் கடன் செயலி மூலமாக சிறிய தொகை கட்டினால் பெரும் தொகை கடனாக வழங்கப்படும் என்பதை நம்பி ராஜீவ் அவரது நண்பர்களிடம் ரூ.40ஆயிரம் வரை கடன் வாங்கி, ஆன்லைன் செயலியின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார். இந்தநிலையில் திடீரென ஆன்லைன் செயலி முடங்கியது. இதனால் ராஜீவ் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நண்பர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதன் காரணமாக ராஜீவ் தனது மனைவி, குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலர் கடன் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் பல்லடத்தில் ஆன்லைன் கடன் செயலி மோசடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தடபுடலாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
- பொள்ளாச்சிக்கு சென்றதும் அந்த கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது மனைவி ராதாகிருஷ்ணனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இதனை தெரிந்து கொண்ட கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அப்போது அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காண்பித்தார்.
அந்த படத்தில் இருந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து தடபுடலாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி புரோக்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்று ராதாகிருஷ்ணன் வீட்டார் அந்தப் பெண்ணுக்கு 1½ பவுனில் நகை வாங்கி போட்டுள்ளனர். மேலும் புரோக்கருக்கு ரூ.80 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர்.
தேதியும், நேரமும் நெருங்கி வந்ததால் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முதலிரவின்போது புதுப்பெண், ராதாகிருஷ்ணனிடம் "தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்" என்றும் கூறி நைசாக முதலிரவை தவிர்த்துவிட்டார். மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
பொள்ளாச்சிக்கு சென்றதும் அந்த கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை-பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் திருமண புரோக்கரையும், அவரது மனைவியையும் தேடி வருகின்றனர்.
- 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கார்கள் விபத்துக்குள்ளானது. கார்களை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கார்களில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்த போது 2 காருக்குள்ளும் 158 மூட்டைகளில் 1,024 கிலோ குட்கா இருந்தது. பெங்களுருவில் இருந்து கோவைக்கு 2 காரில் அந்த கும்பல் குட்காவை கடத்தி வந்ததும், விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.
குட்கா மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை கார் எண்கள் மூலம் விசாரணை நடத்தி தேடி வந்தனர். மேலும் அந்த கும்பலை பிடிக்க பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, போலீஸ்காரர்கள் கார்த்திக்கேயன், சதீஷ், மயில்சாமி, பாலகுமாரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெருமாநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குஜராத் பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது காரில் 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஓபராம் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார்(21), மற்றொரு தினேஷ்குமார் (21), கேவல்ராம் (26) ஆகிய 3பேர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவை, அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன் குட்கா பொருட்களை ஏற்றி வந்து விபத்துக்குள்ளான கார்கள் அவர்களுடையதும் தெரிய வந்தது.
பெங்களூரில் புகையிலை பொருட்களுக்கு தடை இல்லாததால் அவர்கள் அங்கிருந்து திருப்பூர், கோவைக்கு புகையிலை பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். போலீசில் பிடிபடாமல் இருக்க சொகுசு கார்களில் அனுப்பி வந்துள்ளனர். திருப்பூர், கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் புகையிலை பொருட்களை மதாராம்(26), துதாராம்(24), கோபரம்(35) ஆகிய 3பேரும் திருப்பூரில் தங்கியிருந்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பெங்களூருக்கு விரைந்த தனிப்படையினர் தினேஷ்குமார், மற்றொரு தினேஷ்குமார் , கேவல்ராம் ஆகிய 3பேரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.
ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.

இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
- சாலையானது தினமும் 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயணிக்கும் சாலை ஆகும்.
- புதர் மண்டிய காடு பராமரிப்பு இல்லாமல் பல சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் கருப்ப கவுண்டன்பாளையம் கே.எம்.ஜி. நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தி.மு.க. கவுன்சிலர் கவிதா நேதாஜி கண்ணன், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் அருணாச்சலம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கிரிஷ் சரவணன் ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் .அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் பல்லடம் சாலையில் இருந்து கருப்ப கவுண்டன்பாளையம் செல்லும் பிரதான சாலையில் பாருடன் கூடிய மதுபானக்கடை வருவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேற்படி சாலையானது தினமும் 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயணிக்கும் சாலை ஆகும். குறிப்பாக வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்கள் பயணிக்ககூடிய சாலையில் பாருடன் கூடிய மதுபானக்கடை வருவதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்.
ஏற்கனவே இதன் அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதர் மண்டிய காடு பராமரிப்பு இல்லாமல் பல சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மதுபானக்கடையும் வந்து விட்டால் பொதுமக்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஓடை பகுதி இருப்பதால் சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தாங்கள் அந்த இடத்தில் வர உள்ள மதுபானக்கடை அனுமதியை ரத்து செய்து பொது மக்களின் பாதுகாப்பான அன்றாட போக்குவரத்துக்கு ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
- தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு, சிலந்தி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர் வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா பகுதியில் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தி ஆற்றை தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படுவதுடன், அணையை ஆதாரமாக கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அமராவதி அருகே தமிழக-கேரள எல்லை அருகே சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு இன்று விவசாயிகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை தாங்கினார். விவசாயிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் கூறியதாவது:-
அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான். எனது தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.
தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இது போன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவன மாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது. கேரளத்தின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.
- அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
- பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.
இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,
1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
- அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த 19-ந்தேதி மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வரையிலும் வனப்பகுதியில் சாரல் மழையும், பலத்த மழையும் குறிப்பிட்ட இடைவெளியில் பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று பஞ்சலிங்க அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. அதில் குளிப்பதற்கான சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
- வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
- சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை அறிவித்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது. ஆனால் ஏற்றுமதிக்கு பெரிய வெங்காயத்திற்கு மட்டும் வரி விதிக்காமல் சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்து 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் சின்ன வெங்காய விலையும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது.
தற்போது பெரும்பாலும் விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் நேரடியாக இருப்பு வைத்து விலை ஏறுகிற போது விற்பனை செய்கிற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் விலை ஏற்றம் இருக்கும் என பலரும் ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தனர்.
ஆனால் அரசின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுமார் 20 ரூபாய் விலை ஏற்றம் இருந்திருக்கும். வரி விதிப்பால் அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.மேலும் வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்கிறபோது, அதில் 30 சதவீதம் கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 70 சதவீதம் வெங்காயம் மட்டுமே விலைக்கு விற்க முடியும்.
ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் அளவிற்கு கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 50 சதவீதத்தில் மட்டுமே சாகுபடி செலவு மற்றும் இவ்வளவு நாள் இருப்பு வைத்ததற்கான பலனை காண முடியும். ஆனால் அது போன்ற ஒரு நிலை தற்போது இல்லை. 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து சின்ன வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்திற்கும், பல்லாரி வெங்காயத்திற்கும், விலை முதல் விளைச்சல் வரை பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு இரண்டையும் ஒரே நிலைப்பாட்டில் வைத்து வெங்காய ஏற்றுமதிக்கு ஒரே எண் வழங்கி உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார்.
- சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், உப்பு பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கர்நாடக மாநிலம் மைசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை பெறாமல் முனுசாமி இருந்து விட்டார்.
இந்தநிலையில் வெள்ளகோவிலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், உங்களை ஏதேனும் நாய் கடித்து உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருச்சியில் உள்ள நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முனுசாமி நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
- ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவு பேரில் காவல்துறையினர் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தினர். மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்கக் கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி பகுதியில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சற்குணப்பாண்டியன் ( வயது 27 ) என்பவர் ஆன்லைன் மூலமாக மொத்தமாக நிவாரண மாத்திரைகளை வாங்குவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சற்குண பாண்டியனை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தனர்.
அப்போது வீரபாண்டி அருகே கொரியரில் வந்த 200 வலி நிவாரண மாத்திரைகளை சற்குணபாண்டியன் பெற்ற போது வடக்கு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஏற்றுவதற்காக வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது இதனை தொடர்ந்து சற்குண பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து தொழிலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார்.
- வழக்கமாக காண்டூர் கால்வாயில் வினாடிக்கு 1200 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் போது தான் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும்.
- இந்த ஆண்டு கோடை மழையின் காரணமாக நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60அடி உயரம் கொண்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.7 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் உடுமலை நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. பரம்பிக்குளம் அணையில் திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதுவே அணைக்கு வரும் பிரதான நீர்வரத்து பகுதியாகும். இது தவிர திருமூர்த்திமலையில் பெய்யும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவி வழியாக பாலாற்றில் கலந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது.
தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் பாலாற்று வழியே நீர்வரத்து அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் அறவே நீர்வரத்து இருக்காது. காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணிகள் நடப்பதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் 20 அடியாக நீர்மட்டம் குறைந்தது. இந்தநிலையில் கோடை மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்தது. இதையடுத்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. கடந்த 3 நாட்களில் நீர்மட்டம் சுமார் 10 அடி வரை உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையில் தற்போது நீர்மட்டம் 29.75 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் பாலாறு வழியாக வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக 26 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வழக்கமாக காண்டூர் கால்வாயில் வினாடிக்கு 1200 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் போது தான் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும். இந்த ஆண்டு கோடை மழையின் காரணமாக நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






