என் மலர்
திருப்பூர்
- கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் காலி இடத்தை வாடகைக்கு விட வேண்டாம்.
- நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது.
குன்னத்தூர்:
குன்னத்தூர் பேரூராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தலைவர் கொமாரசாமி முன்னிலை வகித்தார். குன்னத்தூர் அங்காளம்மன் கோவில் காலி இடத்தை ஏலம் விடுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வெங்கடாசலம் (திமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விடுவதால் அரசிற்கு வருமானம் இழப்பு ஏற்படும் .ஆகவே இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.
சரண் பிரபு (அதிமுக) பேசுகையில், அங்காளம்மன் கோவில் இடத்தை வாடகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. தற்போது கோவில் வேலை நடைபெற்று வருகிறது. வேலை முடிந்த பின் கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகம் வரும் என்பதால் இப்போதே காலி இடத்தை வாடகைக்கு விட்டால் கூட்டத்தை சமாளிக்க முடியாது. கும்பாபிஷேகம் முடிந்தபின் கோவிலுக்கு எவ்வளவு இடம் உள்ளது ,பேரூராட்சிக்கு எவ்வளவு இடம் உள்ளது என அளவீடு செய்த பின்னர் ஏலம் விடலாம். மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நால்ரோடு பகுதியில் கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் ரவுண்டானா வரும் சூழ்நிலை உள்ளது. எனவே அப்பணிகள் முடிந்த பின் ஏலம் விடலாம் என்றார். இதே கருத்தை அதிமுக., கவுன்சிலர் சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டார். பேரூராட்சித்தலைவர் பேசுகையில், அங்காளம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமான இடமா? அல்லது பேரூராட்சி இடமா? என்பது தெரியவில்லை. ஆகவே கோவில் வேலை முடிந்தபின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அதிகாரிகளை கொண்டு அளவீடு செய்த பின் கோவிலுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்று அறிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
- வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் தயாரித்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தேர்வு முடிந்ததும் தவறான கேள்விகளுக்கான விடை உடனே திரையில் தோன்றும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கான எமிஸ் பக்கத்தில் பதிவாகும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டார, மாவட்ட அளவிலான தேர்வுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இக்கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தேர்வை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் இத்தேர்வு நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு தலைமை யாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.
- தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்ற ப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு கோடை கால மழை பெய்யவில்லை.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.இதனால் குளங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைய துவங்கியது. தற்போது பொன்னேரி, கோட்டமங்கலம், குடிமங்கலம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக சாரலாக பெய்த தென்மேற்கு பருவமழையும் இடைவெளி விட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குடிமங்கலம் வட்டாரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் வறட்சி துவங்கியுள்ளது. கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. கோடை கால மழையை எதிர்பார்த்து விதைப்பு செய்யப்பட்ட மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது.
தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமாக பெய்யாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆடிப்பட்ட விதைப்புக்கு முன் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
- புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள
திருப்பூர்:
புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூரில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைக்கிறாா்.
பின்னலாடை நகரமான திருப்பூரில் பிகாா், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூா் ஆத்துப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா். தொடக்க விழாவில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெரு நாய்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
- ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல சுமார் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபிநாத் என்பவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாரின் தீவிர விசாரணையில், லட்சுமி நகரில் உணவகம் நடத்திவரும் பாலு என்பவர் நாய்களுக்கு ஆட்டு இறைச்சி குடலில் விஷம் வைத்து அப்பகுதி முழுவதும் தூவி நாய்களைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் 7 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் குழந்தைகள் வட்டார நல மையத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:- 1993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
5 ஆண்டு பணி முடித்த குறுமைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால், ஒரே ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. எனவே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம் 7 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது. பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அவைத் தலைவர் சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் கேத்தனூர் அரிகோபால் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் நகரம், பல்லடம் வடக்கு, தெற்கு, ஒன்றியங்கள், பொங்கலூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
- திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாடியில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததை பார்த்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஒருவர் சத்தம் போட்டார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து, அந்த நபரை தேட ஆரம்பித்தனர்.
அப்போது அந்த நபர் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டு மாடியிலும் குதித்து தப்பி சென்றார். பொதுமக்கள் சத்தம் போட்டபடி அவரை விரட்டி சென்றனர்.
அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு குதிக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதுரையை சேர்ந்த மதன் (வயது 25) என்பதும், திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நண்பரின் அறையில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இரவு நண்பர்களுடன் மது அருந்த சென்று விட்டு திரும்பிய அவர், போதையில் ஒவ்வொரு வீட்டின் மாடி வழியாக சென்றதும், பொது மக்கள் திருடனாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வாலிபரை விரட்டியுள்ளனர். விரட்டும் போது மதன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது.
- தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்:
தமிழக முழுவதும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு சீராக தக்காளி கிடைக்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர். இதில் கவுன்சிலர் சின்னச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று குறைந்த விலையில் தக்காளியை வாங்கி சென்றனர்.
- கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன.
- விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாநல்லூர்:
ஊத்துக்குளி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையின் செங்கப்பள்ளி புறவழிச்சாலை தொடங்கும் பிரிவில் சாலையோர உணவகங்களில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு வரிசையாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
பல்லடம்:
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 5 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு டிராக்டர் உடன் வந்திருந்த விவசாயிகள் அதில் ஏறி நின்ற படியும், கீழே நின்ற படியும் விவசாய சங்கத்தின் கொடியை கையில் ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் வந்து கலந்து கொண்டு தங்களது 10 அம்ச கோரிக்கையை தெரிவிக்கும் விதமாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தப் போராட்டத்திற்கு குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.
- ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). இவர் மொடக்குபட்டி-தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் விற்பனையாளர் சரவணன் என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
இவர்களது வாகனம் தளி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த கார் ஜெயப்பிரகாஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்தக்காரில் வந்த முககவசம் அணிந்த மர்ம ஆசாமிகள் மது விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன் , மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது28), மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தை சேர்ந்த வீரமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.






