என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது.
    • ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.முன்னதாக புதிதாக பதவி ஏற்ற நகராட்சி ஆணையாளருக்கு மன்றத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 28-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ராமதாஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் மத்தீன் உரையாற்றினார். இதையடுத்து சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது. அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    குப்பை அள்ளும் வாகனங்கள் அதிக செலவில் வழங்கப்பட்டு உள்ளது.நமது ஊருக்கு உகந்த வாகனமாக இல்லை.அதற்கு பதிலாக 33 வார்டுகளில் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த பணத்தை பிரித்துக் கொடுத்து இருக்கலாம்.இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி அடைந்திருக்கும்.அதே போன்று அண்ணா கலையரங்கம் கலைஞர் பூங்கா அமைக்க வேண்டும்.இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் அடைவார்கள் என்று நகரச்செயலாளரும் 33 வது வார்டு உறுப்பினருமான சி.வேலுச்சாமி பேசினார்.

    இனி வருகின்ற காலங்களில் சந்தை ஏலம் புதிதாக விட வேண்டும்.அதிக அளவில் ஏலம் எடுப்பதற்கு ஆட்கள் உள்ளனர். அதை தவிர்த்து ஏலத்தை குறைவான அளவில் விடுவதால் இழப்பு ஏற்படுகிறது. ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும். மேலும் 15 வருடங்களுக்கு மேற்பட்ட வணிக ரீதியான நகராட்சி வாகனங்களை உடைப்பதற்கு முன்னதாக அதன் ஆர்.சி., ரத்து செய்யப்பட வேண்டும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது நகராட்சி சார்பில் இழப்பீடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.மக்கள் வரி பணமும் மிச்சப்படுத்தப்படும். இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பேசினர்.அதற்கு தீர்வு காணப்படும் என்று மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ்லியோன், நகர் மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் ஜோசப், ஷாஜா தீ பர்வீன், ஆறுச்சாமி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

     உடுமலை:

    ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மஞ்சள், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால் தயிர், பன்னீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் வாசுகி, குளிகன், தட்சகன், பத்மன், கார்கோடகன், மகாபத்மன், அனந்தன், சங்கபாலன், நாகர்களுக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    முன்னதாக பக்தர்கள் திரிசூலத்திற்கு எலுமிச்சைகனியையும் பலிபீடத்திற்கு கல்உப்பு சாற்றியும் விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். 

    • 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும்

     மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் முஸ்லிம் முன்னணி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பள்ளியில் சுகாதார சீர்கேடு மற்றும் பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு இடையே ஏற்படும் கோஷ்டி மோதலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும். நிரந்தரமான தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த கோரிக்கை மனுவை முஸ்லிம் முன்னணி கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மஜீத் வழங்கினார். மாவட்ட பொருளாளர் மெகபூப் பாட்ஷா, மாவட்ட துணைத்தலைவர் ஹக்கீம், மாவட்ட மருத்துவ அணியைச் சேர்ந்த பாபு, தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ரபீக், மங்கலம் ஒன்றிய தலைவர் இஸ்மாயில் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் ,

    பள்ளி கழிப்பறையில் பயன்படுத்திய புகையிலை பாக்கெட்டுகளை காண முடிகிறது. பள்ளியின் வகுப்பறை சுவற்றிற்கு வெளியே ஆபாச வார்த்தைகளை எழுதியிருப்பதையும் காண முடிகிறது.

    ஆகவே பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்த வேண்டும்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் -கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் வடக்குப்பகுதியில் புதியதாக கட்டித் திறக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவாக ஏற்கனவே பல மாமன்றக்கூட்டங்களில் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அதன் மீது பரிசீலனை செய்து சுதந்திரப் பேராட்டத் தியாகி தீரன் சின்னமலைக்கவுண்டர் பெயர் அல்லது தியாகி திருப்பூர் குமரன் பெயர் வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்த வேண்டும். மேலும் திருப்பூரின் பெருவாரியான மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அன்பகம் திருப்பதி கூறுகையில்:- திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு தியாகிகள் பெயரை சூட்டுவதன் மூலம் இளம் தலைமுறையினர் தியாகிகளின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வார்கள். எனவே அரசு கட்டிடங்கள், மாநகராட்சி கட்டிடங்கள் பஸ் நிலையங்கள் போன்றவற்றிற்கு தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும் என அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

    • விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது.
    • கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.

    பல்லடம் : 

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் திருப்பூர் சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்லடம் அருகே உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி சப் - கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மற்றும் நில அளவையர் ஒருவர் மீது லஞ்ச புகார் அளித்தார்.இது குறித்து சப் - கலெக்டரிடம் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:-எனக்கு சொந்தமான விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது. அந்த நிலத்தை சர்வே செய்து அளந்து கொடுக்குமாறு கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து மனு கொடுத்துளேன். லஞ்சம் கேட்டு பல்வேறு காரணங்களை கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இறுதியாக லஞ்சம் கொடுத்து, கடந்த மாதத்தில் நில அளவீடு பணி நடைபெற்றதாகவும்,தற்போது மீண்டும் கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்- கலெக்டர் இது குறித்து விசாரணை செய்வதாகக் கூறினார். இதனால் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது
    • விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார்.

    பல்லடம்: 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கே.ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 67). விவசாயி. இவரது மனைவி கடந்த 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையுடன் இருந்த ராஜாமணி நேற்று தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார். அக்கம்-பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

    பல்லடம் : 

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா தாமதமாகி வந்தது.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்தின் ரூ.3.5 லட்சம் பங்களிப்புடன், ரூ.12 லட்சம் மதிப்பில் 40 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் பொத்தானை அமுக்கி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நகரப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தொழில் துறையினர் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிராமப்புறங்களில் பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டும்போது, வீடுகளுக்கு முன்பு உள்ள தெருக்களை கண்காணிக்கும்படி ஒரு கேமராவை அமைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அதிக வழக்குகள் வருவதால், அருகேயுள்ள சில கிராமங்களை பிரித்து புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உதவ வேண்டும். இதனால் குற்றச்செயல்களை போலீசாரால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, நகராட்சி தலைவர் கவிதாமணி, நகராட்சி பொறியாளர் சுகுமார், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், தமிழ் சங்க தலைவர் ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,குற்றப்பிரிவு சரஸ்வதி, மகளிர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜா, சுந்தரமூர்த்தி, மற்றும் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது.
    • ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகளில் தூய்மைப் பணி அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னா் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.380 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ரூ.572, குடிநீா்ப் பணியாளா்களுக்கு ரூ.648, ஓட்டுநா்களுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும்.இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி திருமுருகன் பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்தைத் தொடா்ந்து 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் திருப்பூா் நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    இது குறித்து சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கூறியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூகத்தீா்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 25 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

    • ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள மனோகரனுக்கு ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஈஸ்வரி ( 2 வது வார்டு ): பல்லடம் முதல் பூமலூர் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிடாத்துறை பகுதியில் சாலையின் வழியே செல்லும் பிஏபி வாய்க்கால் மீது பாலம் அமைக்க உள்ளனர். பாலம் 26 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். அப்படி அமைத்தால் வாய்க்கால்களில் வரும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே அந்த இடத்தில் 26 மீட்டர் முழுமையான அளவுக்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி : இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

    துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் : ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு மனை வரன்முறை படுத்த விண்ணப்பங்கள் அளித்தால் மிகவும் காலதாமதமாக வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக வழங்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன்:விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மங்கையர்க்கரசி கனகராஜ் ( 10 வது வார்டு ):-

    கோடங்கி பாளையம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு கேட் வால் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் : குடிநீர் இணைப்பு கேட் வால் சிலாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பின்னர் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 22.1.23 அன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஓட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப்பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த கபாலி என்பவனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை பிடித்து வந்தனர். போலீசாரது விசாரணையில் அவன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அருண்குமார்(26) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.
    • போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொமரலிங்கத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ஆர்.டி.ஓ.விடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    கொமரலிங்கம் பகுதியில் மகன், மகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இது பற்றி கொமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.

    அதன்பேரில் எனது மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எனது மாமனாரை கைது செய்ய முன்வரவில்லை. இதை சாதகமாக கொண்டு அவர் என்னை அச்சுறுத்தி வருகிறார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

    • ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    திருப்பூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பழங்குடியின பெண்கள் 2பேரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இச்சம்பவத்திற்கு காரணமான மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    ×