என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை முதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்நாளை 24-ந்தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், ஆமந்தகடவு, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா் மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     உடுமலை:

    உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகள் ஊடுமலை-பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.மாணவ- மாணவிகள் போக்குவரத்து வசதிக்கேற்ப இந்த மையங்களில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம்.

    இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா கூறி இருப்பதாவது:-

    ஓவியப்போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடக்கிறது. எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையில் நமது தேசிய விலங்கு புலி என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வனநிலப்பரப்பில் புலிகள் என்ற தலைப்பிலும், 6 - ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புலி மற்றும் அதன் இரைவிலங்குகள் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்பிலும் நடக்கிறது.

    இதற்கான சாட் மற்றும் வண்ண உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். கட்டுரைப்போட்டி மதியம் 12:15 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். இந்த போட்டியானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புலிகள் ஏன் தேசிய விலங்கு என குறிப்பிடப்படுகிறது என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு வன நிலப்பரப்பில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்தப் போட்டிக்கு உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார்-9487987173 உயிரியலாளர் மகேஷ்குமார்- 6369269722,9486192183, திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன்-9688414468 திருப்பூர் வனவர் முருகானந்தம்-9585563002 காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன்-7094639223.காங்கயம் வனக்காப்பாளர் செல்வராஜ் -8903428422) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர் மேலே உள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   

    • கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். பெற்றோர்கள், குழந்தைகள், முக்கிய பிரமுகர்கள் விளக்கேற்ற ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    லக்கி லிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன் ஆகியோர் பரிசுகள் வழங்க கவுரவித்தனர்.

    முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, ஜோத்தியம்பட்டி ஊராட்சி, கொக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் நந்த வனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார். காங்கேயம் வட்டம் ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி வெங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டடத்தினையும், வெங்கிபாளையத்தில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீ ழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் ஜோத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், என மொத்தம் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    சூரிய நல்லூர் ஊராட்சி, வெங்கிபாளையம் நால்ரோடு பகுதியில் கலைஞர்மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியும், காங்கேயம் வட்டம், ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ்குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர்,ஜூலை.23-

    தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வணிக வரித்துறை இணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க பிரிவு இணை கமிஷனர் (பொறுப்பு) ரமாதேவி, வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.

    3 வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலூர், திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.

    வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் - 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் - 1, பல்லடம் - 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் வணிக வரி கோட்டத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர விரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி கோட்டம் உதயமாகியுள்ளதால் திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர், ஆடிட்டர்கள், ஈரோடு, கோவை என வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இனி ஏற்படாது.

    • வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

     உடுமலை:

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மாவடப்பு செட்டில்மென்ட் கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம், வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தன் சுத்தம் பேனல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், வன பாதுகாப்பு அலுவலர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மலைவாழ் மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது.
    • கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஜவுளித்தொழில் வளர்ச்சியில் ஜவுளி உற்பத்தி மட்டுமல்ல, அதனை சார்ந்த பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதன்படி, அட்டை பெட்டி தயாரிப்பும் முக்கிய தொழிலாக இருக்கிறது. ஜவுளி மட்டுமல்ல அனைத்து வகையான, உற்பத்தி பிரிவுக்கும் பாதுகாப்பாக பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அவசியமாகிறது. குறிப்பாக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் பேக்கிங் செய்ய அட்டைப்பெட்டிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.கோவை மண்டல அளவில் 400க்கும் அதிகமான அட்டை பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    முக்கிய மூலப்பொருளாக காகித ஆலைகளிடம் இருந்து கிராப்ட் காகிதம் கொள்முதல் செய்யப்படுகிறது. காகிதத்தை பக்குவப்படுத்தி, அட்டையாக மாற்றுவதற்கு, ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருளுக்கு அடுத்தபடியாக எந்திரங்களுக்கான மின்கட்டண செலவும் மிகவும் அதிகமாகியுள்ளது. தற்போதைய மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு யூனிட் மின்சார கட்டணம் 7.20 ரூபாயாக இருந்தது தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து என பல்வேறு செலவுகள் உயர்ந்து உற்பத்தி செலவு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஆர்டர் இல்லாத நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நஷ்டத்தை சமாளிக்க வேண்டிய அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணை தலைவர்கள் தண்டபாணி, சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், கிராப்ட் காகிதம் முன்னறிவிப்பு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்து ள்ளோம்.

    கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    • மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
    • விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.

    தாராபுரம்:

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில் இதுவரை, மாநில அரசு நலத்திட்டங்களுக்கும், சான்றிதழ்கள் பெறவும் மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய அரசின் பொது சேவை மையத்தின் லாகின் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இ-சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.இது மட்டுமின்றி, தொடக்க கூட்டுறவு வங்கிகள், சமையல் கியாஸ் வினியோக உரிமை, பெட்ரோல், டீசல் வினியோக உரிமை உட்பட, 25 விதமான வணிக செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

    வரும் நாட்களில் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சேவை தொடங்கும் என்று பொது சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது.
    • சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

    திருப்பூர்:

    மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) 5 ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் இருவரும், 3 பேர் பணியாற்ற கூடிய இடங்களில் ஒருவரும் பணிபுரிகின்றனர்.பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது. இதனால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நிலுவையில் உள்ள ஓட்டுனர் உரிம விண்ணப்பங்களுக்காக டெஸ்டிங் பணி மட்டும் சனிக்கிழமைகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பணி நாளாக மாற்றினால், முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
    • சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

     தாராபுரம்:

    தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

    இது குறித்து தாராபுரம் பகுதியில் இருந்து மதுபிரியர்கள் கோவை மண்டல மேலாளருக்கு புகார் மனுக்கள் அனுப்பினார்கள்.

    இந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் ெஜகதீசன் தாராபுரம் வந்தார்.பின்னர் அவர் தாராபுரம் ஐந்து முக்கு, என்.என்.பேட்டை வீதி, பஸ் நிறுத்தம், பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாஸ்மாக் கடைகளில் இருப்பு பதிவேட்டின்படி மது பாட்டில்கள் இருப்பு உள்ளதா? பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.

    இந்த கருவியில் இன்டர்நெட் ரேடியோ, யு.எஸ்.பி. பென் டிரைவ் மற்றும் எஸ்.டி.கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, வைபை தவிர செல்போன் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள், ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.

    மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
    • 5 நல உதவி திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspxஎனற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீது பெற்றுக்கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    ×