என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    சென்னையை சேர்ந்த 'கிளாசிக் ரன்' என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி 17-வது ஆண்டாக ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் பயணமாக, கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 26 வெளிநாட்டினர் 9 குழுக்களாக தனித்தனி ஆட்டோக்களில் புறப்பட்டனர்.

    வெளிநாட்டினரே ஆட்டோக்களை ஓட்டியவாறு புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று காலையில் தூத்துக்குடி வந்தனர். பனிமயமாதா ஆலயம், முத்துநகர் கடற்கரையை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பின்னர் தூத்துக்குடி அருகே சாயர்புரம் பிரம்மஜோதி பண்ணை தோட்டத்துக்கு சென்றனர்.

    தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் 9 குழுக்களாக தனித்தனி புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் பொங்கி வழிந்ததும் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாக குலவையிட்டு கொண்டாடினர். அனைவரும் பொங்கலை பரிமாறி உண்டனர்.

    சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. விழாவையொட்டி தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடியதை சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.

    பொங்கலிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி கூறுகையில், ''இந்தியாவில் தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்தாலே தனி மரியாதை கிடைக்கிறது. ஒன்றுகூடி பொங்கலிட்டது வாழ்வில் மறக்க முடியாத விழாவாக அமைந்தது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.
    • 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், வேடப்பட்டி, விருசம்பட்டி, புளியங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.

    அதன்படி, தற்போது பனங்கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பனை மரத்திலிருந்து பனங்கொட்டைகளை வெட்டி மண்ணில் புதைத்து பனங்கிழங்கு அறுவடை செய்து வருகின்றனர்.

    ஆனால் விளாத்திகுளம் பகுதிகளில் பனை மரத்திலிருந்து விழும் பனங்கொட்டைகளை எடுத்து மண்ணில் புதைத்து அதன் மூலம் பனங்கிழங்கு அறுவடை செய்வதால், அதிக ருசித்தன்மையுடனும், மருத்துவகுணத்துடனும் இருப்பதாக இப்பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி - இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதைப் போல இந்தாண்டு பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    அதேபோல் பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    • தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் உடன்குடி அருகே உள்ள சடைய நேரிகுளம் உடைந்து பல ஊர்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 15 அடி உயரத்திற்கு தாழ்வான பகுதியில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.

    பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 15 நாட்களாக தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் இன்று வரை தற்காலிகமாக பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதே போல பரமன்குறிச்சியில் உள்ள கே. கே.ஆர்.நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி தேங்கியுள்ள வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. அந்தப் பள்ளி வேறு ஒரு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு இன்று வரை செயல்படுகிறது.

    மேலும் தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல பனை மர விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாயம் பயிரிட்ட விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

    அதிலும் வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

    • தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    • வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெறக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் கடந்த 30-ந்தேதி மீன்பிடி துறைமுகத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் சார்பில் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    அந்த வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுபோல் வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 450 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் 65 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த பணிமனையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோவில்பட்டி பணிமனை முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் பணி நேரம் வழங்கி கட்டாயப்படுத்துவதாகவும், அவசர காலத்திற்கு ஊழியர்கள் விடுமுறை கேட்டால் கொடுக்க மறுப்பதாகவும், அதிகாலை பணிக்காக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் ஊழியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, வேறு பயணிக்கு இடமாற்றம் செய்யும் நிலை இருப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிளை மேலாளர் சண்முகம் மற்றும் டிவிஷனல் மேனேஜர் (கிழக்கு) கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து பஸ்களை இயக்க தொடங்கினர். அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    • தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்பு அடைந்தது.

    கடந்த 17-ந்தேதி திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்றது. கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் ரெயில் நிலையத்தை சுற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் 3 நாட்களுக்கு பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளது.

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்ட வாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரசை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்காக நெல்லையில் இருந்து டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வழியாக நாசரேத் செல்லும் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


    செந்தூர் எக்ஸ்பிரஸ் வருகிற 5-ந்தேதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ரெயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் 5-ந்தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம்- நாசரேத் பகுதிகளையும் சீரமைக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    அது முடிவடைந்ததும் 6-ந்தேதி முதல் வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரையில் இருந்து வந்த ரெயில்வே என்ஜினீயர் கூறியதாவது:-

    ரெயில்வே தண்டவாள பணிகள் சீரமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு- பகலாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை- செய்துங்க நல்லூர் இடையே ஓரிரு நாட்களில் தண்டவாளத்தை சீரமைத்த நிலையில் மற்ற இடங்களில் தண்டவாளங்கள் மட்டுமின்றி சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டோம். இதனை கொண்டு செல்ல ரெயில்வே அதிகாரிகள் அங்குள்ள சாலைகளை சீரமைத்தனர்.

    எனினும் ஆழ்வார்திரு நகரி மற்றும் நாசரேத் ரெயில் நிலையங்களுக்கு இடையே 120 மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பல நாட்களாக அந்த இடங்களுக்கு செல்வது எங்களுக்கு கடினமாக இருந்தது.

    அந்த பகுதி வழியாக கனரக வாகனங்களில் சீரமைப்பு பொருட்கள் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    எனினும் தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதிக்குள் இந்த பணி கள் முடிவடைந்து விடும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் இருந்தே நீண்ட வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில் வளாகத்தில் சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தனியார் விடுதிகள். சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

     பாதயாத்திரையாக, குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி பாடிவந்தனர். காவடி, பால்குடம், எடுத்து வந்தும் சில பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்ச்சை செய்தனர். சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்தும் நேர்ச்சை செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.
    • தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டம் ரஹ்நாத் மந்திர் பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 17 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகத்திற்கு வந்தார்.

    இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலமாக கடந்த 27-ந்தேதி புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்தனர். அங்கு தங்கியிருந்து சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து 17 பேரும் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டால் சூரிய உதயத்தை பார்த்துவிடலாம் என்று எண்ணிய அவர்கள் நேற்று நள்ளிரவே வேனில் புறப்பட்டு தூத்துக்குடி வழியாக நெல்லையை நோக்கி நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை அடுத்த கீழ வல்லநாடு துணை மின் நிலையம் எதிரே வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.

    அப்போது எதிரே தவறான பாதையில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த பகுதியில் வந்த வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. கண்ணி மைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. தொடர்ந்து 2 வாகனங்களும் மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன.


    இதில் வேனின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அமித் மனைவி சுமன்(வயது 32), உறவினர் பெண் பார்வதி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்து அலறித் துடித்தனர். இதனை அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேனில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்க முயன்றனர்.

    ஆனால் வேனின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வர வழைக்கப்பட்டு வேனை சாலைக்கு மீட்டு கொண்டு வந்தனர். அதன்பின்னர் வேனின் கண்ணாடிகளை உடைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தொடர்ந்து வேன் டிரைவர் உள்பட 15 பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மருத்துவ மனை டீன் ரேவதி நேரில் பார்வையிட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
    • பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை திருநாளை கொண்டாடும் வகையில் அதற்கு முன்பாக கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து வந்தும் அலங்கார செய்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்து ஒய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடிய தாமதமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டு இருந்த இயக்குனர் டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×