என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    தலைமை யாசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.

    மாராச்சேரிஅருண் யாழினி உழவுக்காடு நிறுவனர் வேணு காளிதாசன், பள்ளி மாணவர்களுக்கு கருப்பு கவுனி கொழுக்கட்டைகளை வழங்கி பேசும்போது, தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய அரிசியில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசி வகையிலும் சமைக்கலாம்.

    பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம். சர்க்கரை யளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    தசைகளை வலுவாக்கும்.

    இது போன்ற பல்வேறு பயன்களை கொண்டது பாரம்பரிய அரிசி என்றார்.

    இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, சுந்தர், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

    • 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
    • குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது.

    திருவாரூர்:

    திருவாரூர் நாகை சாலையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    கடந்த வாரம் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய முடிவு எட்டப்பட்டது.

    இந்நிலையில் 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நேற்று செவ்வாய்கிழமை ஏலத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவு கூடுதல் விலை கிடைக்காமல் குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில் ஏலம் முடிந்த பின்னர் மீதமுள்ள பருத்தி மூட்டைகள், அடுத்த ஏலத்திற்காக உள்ள பருத்தி மூட்டைகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மாலையில் திடீரென பெய்த கனமழையால் 2000 பருத்தி மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

    ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் பள்ளி மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் உழவார பணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பிரேமா தேவி அனை வரையும் வரவேற்றார்.

    நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில் யோகா பயிற்றுனர் ஹரி கிருஷ்ணன், சர்வாலய உழவாரப்பணி செயலாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

    பணிக்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    • மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் கிசான் மேளா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை துறை மூலம் இடுபொருள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்று வேளாண்மை துறை திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    அதனைத் தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி ஆத்மா திட்டம், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் தலைவர் ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு நெல், பருத்தி பயிர்களுக்கு வரக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

    இணை பேராசிரியர் அருட்செல்வி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன் தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றி விளக்கத்துடன், ஊட்டமேற்றிய தொழு உரம் தயார் செய்தல் குறித்து பயிற்றுவித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் உழவன் செயலியின் பயன்பாடு பற்றியும், அதன் சிறப்பியல்புகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    முடிவில் வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி கூறினார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், ஏழுமலை, சரவணன், சிரஞ்சீவி, சிவானந்தம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார், பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் சக்திவேல் (வயது 35). கார்த்திக் (வயது 28).

    கார்த்திக் மனைவி புனிதா (வயது 24). இவர்களுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயாரிடம் தகராறில் ஈடுப்பட்ட புனிதாவை கார்த்திக்கின் அண்ணன் சக்திவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இந்த தகராறு சகோதர்களான சக்திவேல், கார்த்திக் இடையே சண்டையாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை உறவினர்கள் அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடல் திருவாரூரில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 24-ந் தேதி திருவிழா நடந்தது. திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

    இந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில், கோர்ட்டு உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில், வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்தன், தலைமை காவலர் ஆத்மநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (வயது 65), வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத் (31), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    • விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை.
    • புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் வேதபுரம் பகுதியில் கோரையாற்றில் இருந்து சாளுவனாறு பிரிகின்றது.

    இந்த சாளுவனாற்று பாசனத்தை நம்பி மன்னார்குடி அருகே வேதபுரம், வெங்கத்தான்குடி, குறிச்சி மூளை, நெய்குன்னம், களப்பால், சோலைக்குளம், பட்டமுடையான் களப்பால், சீலத்தநல்லூர், மருதவனம், நடுவக்களப்பால், நாராயணபுரம் களப்பால், எழிலூர் பாண்டி, குன்னலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன.

    சுமார் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளை அதிக அளவில் உள்ளடக்கிய விவசாயிகள் ஏராளமானோர் இந்த சாளுவனாற்றை நம்பி தான் பாசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சாளுவனாற்றின் பல கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

    இருப்பினும் மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்படுவது உறுதியான உடனேயே ஜூன் முதல் வாரத்தில் தங்களது வயல்களில் நேரடி தெளிப்பு செய்தனர்.

    அதன் பிறகு ஓரிரு நாட்களில் பெய்த மழை காரணமாக தெளித்த நெற்பயிர்கள் முளைத்துவிட்டன.

    தொடர்ந்து சாளுவனாற்று நீரை எதிர்பார்த்து இருந்த நிலையில் மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

    இதனால் முளைத்த குறுவைப் பயிர்கள் கருகும் அபாயத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள் பலரும் அருகில் உள்ள குளங்களில் இருந்து மோட்டார் மூலம் குழாய்கள் போட்டு தண்ணீர் இரைத்து வருகின்றனர்.

    எனவே தஞ்சையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகின்ற வெண்ணாற்றுக்கு கூடுதல் தண்ணீரை கேட்டு பெற்று, கோட்டூர் ஒன்றியம் கோரை ஆற்றில் கூடுதல் தண்ணீரை வழங்கி, சாளுவனாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் வரும்படி செய்திட வேண்டும். மேலும் சாளுவனாறு பாசனத்துக்கு மட்டுமின்றி வடிகாலாகவும் பல கிராமங்களுக்கு உள்ளதால் புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாரூரில் 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
    • மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்

    திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    திருவாரூர் கோட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி,

    குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்புடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டல அளவில் 8 போட்டிகள் மற்றும் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
    • 10 ஆயிரத்து 306 வீரர், வீராங்கள் பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    முதலமைச்சர் கோப்டை போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள், பொதுபிரிவினருக்கு, அரசு ஊழியர்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளாக மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 போட்டிகள் மற்றும் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளில் இணையதளம் மூலமாக 10,306 வீரர், வீராங்களை பதிவு செய்து கலந்து கொண்டனர். பரிசு பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

    விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தேசிய அளவில் விளையாடக்கூடிய வீரர்களை திருவாரூர் மாவட்டம் பெற்றுள்ளது. மிகப்பெரிய கபடி வீரரர்களை பெற்றுள்ளது வடுவூர் பகுதியாகும். நன்றாக படிக்க வேண்டும். அதேபோல் நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டின் மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகதலைவர் மதிவாணன், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜேன் சுசீலா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் , மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.
    • தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளையின் போது சிறுதானிய உணவுகள் மற்றும் பயறு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பாஸ்கரன், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.

    தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. சிறுதானியங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன என்றார்.

    முடிவில் கலை ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

    ×