என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
    • நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது.

    நெல்லை:

    போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பஸ்கள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதேநேரத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்கூட்டியே தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

    நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் மொத்தம் 1,660 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தென்காசியில் 4 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 18 பணிமனைகளின் மூலமாக இந்த 3 மாவட்டங்களிலும் 898 பஸ்களும் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

    அனைத்து பஸ்களும் பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் அதிகாலை முதலே புறப்பட்டன.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பாதிப்பும் இன்றி பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரப்படி பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தின் வழித்தடங்களில் 157 பஸ்கள் வழக்கமாக இயங்கும். ஆனால் இன்று வழக்கத்தை விட 3 பஸ்கள் கூடுதலாக, அதாவது 160 பஸ்கள் இயங்கின. தென்காசி பணிமனையில் இருந்து 67 பஸ்களும். செங்கோட்டை பணிமனையில் இருந்து 40 பஸ்களும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் 488 பஸ்கள் ஓடின.

    தூத்துக்குடி மாவட்ட வழித்தடத்தில் ஓட வேண்டிய 226 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. அதிகாலையில் மாநகரில் 50 பஸ்களில் 49 பஸ்கள் ஓடின. புறநகர்களில் 34 பஸ்களில் 31 பஸ்கள் ஓடின. தொடர்ந்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கம் அதிகரித்தது. 3 மாவட்டங்களிலும் சராசரியாக 90 சதவீதம் வரை பஸ்கள் ஓடின.

    நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனையில் இருந்து 67 பஸ்களும், தாமிரபரணி பணிமனை மூலமாக 55 பஸ்களும் என மொத்தம் 122 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று வண்ணார்பேட்டை புற வழிச்சாலை பணிமனையில் இருந்து 60 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் எவ்வித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணை பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால் இரவில் மழை குறைந்ததால், இன்று தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகலில் கனமழை நீடித்த நிலையில், இரவில் மழை சற்று தணிந்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 39 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 35 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 19 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சில நாட்களாக பாபநாசம் உள்ளிட்ட அணை பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று சுமார் 7 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் 2 கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

    இந்நிலையில் நேற்று மலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 2,171 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3,624 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 1,592 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து 1,028 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீரின் அளவு குறைந்தது. மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடனா நதி அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையில் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

    சிவகிரியில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    • நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    * தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.

    * பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    * ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரு வெள்ள அபாயம் எதுவுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது.
    • பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரிக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவண குமார் மேற்பார்வையில் பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து பாண்டி, தலைமை காவலர் சேகர், ஆனந்த், அல்டஸ் பிவின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பேட்டை கண்டியப்பேரி குளத்து கரை பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக நிற்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அடிக்கடி சென்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மீண்டும் வந்த அதே காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த கும்பல் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பேச்சிமுத்து (வயது 27), தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் மதன் செல்வம் (22), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த துரை என்பவரது மகன் முருகன் (20), அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரது மகன் இசக்கி ராஜா (23), பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் அஜித்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? எங்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர்? இதுவரை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
    • ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழித் தடத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்கள் அடித்துச்செல்லப்பட்டது. மண் அரிப்பும் ஏற்பட்டதால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.

    இந்த பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் கடந்த 17-ந்தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தண்ட வாளங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பணிகள் முடிவடைந்ததால் டீசல் என்ஜின் மூலம் சோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரையில் இருந்து குழுவினர் வந்து மின்சார என்ஜினை இயக்கி பார்த்தனர். பின்னர் நேற்று இறுதியாக சென்னையில் இருந்து தென்னக ரெயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் வந்து ஏ.சி. மின்சார என்ஜினில் சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முடித்தனர்.

    நெல்லையில் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் திருச்செந்தூர் சென்று திரும்பினர்.

    தண்டவாளங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருப்பதாக அதிகாரிகள் குழு தெரிவித்த நிலையில் 19 நாட்களுக்குப்பிறகு நேற்று இரவு 8.25 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அதில் ஏற்கனவே முன்பதிவு செய்த 300 பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத 150 பயணிகள் பயணம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று காலை முதல் வழக்கம்போல் அனைத்து ரெயில்களும் ஓடத்தொடங்கின. நெல்லை-திருச்செந்தூர் வழித் தடத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 7.25 மணிக்கு திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு வழக்கம்போல் 2-வது முறையாக பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. சுமார் 20 நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்.
    • சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை.

    தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர்.

    இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:-

    வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மர்மநபர் அனுப்பிய மின்னஞ்சல் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அறிவியல் மையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் அனுப்பிய மின்னஞ்சல் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் காலை முதல் 3 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த 2 வாரங்களுக்கு பிறகு திடீரென பெய்த கனமழையால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கயத்தாறு ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. கடம்பூரில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு 14 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை ஆற்றங்கரையோர மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லாமல் இருக்கவும் கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேர்வலாறு, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிக பட்சமாக மணிமுத்தாறு அணை பகுதியில் 29 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.52 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,273 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,524 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 114.19 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2,962 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,540 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக களக்காடு மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகமாக இருப்பதால் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அம்பை, நாங்குநேரி, களக்காடு, கன்னடியன் மற்றும் நெல்லை, பாளையிலும் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சற்று கனமழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 12 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த 2 அணைகளும் இன்று காலை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டின. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 66.28 அடியை எட்டியுள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்து குளித்து சென்றனர். அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
    • குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

    இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

    தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள். அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
    • நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு மனைவி மற்றும் நரேன் (வயது 14), சுஜித்(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    நாகராஜன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நரேன் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், சுஜித் அதே பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. அவரது தம்பி சுஜித் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் நரேன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்துள்ளது. உடனே நாகராஜன் கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நரேன் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது நரேன் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    அவரது உடலை பார்த்து நாகராஜன் அலறி துடித்தார். தகவல் அறிந்து வந்த அவரது மனைவியும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வு ஒன்றில் மிகக்குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், இதனால் அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்த நிர்வாகம், நரேனின் படிப்பு குறித்து கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக நரேன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியே காரணம் என குற்றம்சாட்டி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆர்.டி.ஓ. அயூப்கான், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திடீரென அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்பினர்களும் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • 2 தீயணைப்பு லாரிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
    • கடைகளின் ஷட்டர்களை உடைத்து உள்ளே இருந்த மேஜை, நாற்காலி, பார்சல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வெளியே வீசி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மணிப்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி(வயது 60). இவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஆர்ச் பகுதியில் இருந்து தெற்கு மவுண்ட் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் உள்ளது. அதில் சுமார் 10 கடைகள் உள்ள நிலையில் 3 கடைகளில் பார்சல் சர்வீஸ் சேவை கடைகளை முறையே அந்தோணி சேவியர், வேம்புராஜன், காளி ஆகிய 3 பேர் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர்கள் கடை ஷட்டரை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த கடைகளில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக அவர்கள் சென்று பார்த்தபோது கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் தீ பரவி உள்ளது. இதனால் பேட்டை தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து 2 தீயணைப்பு லாரிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    கடைகளின் ஷட்டர்களை உடைத்து உள்ளே இருந்த மேஜை, நாற்காலி, பார்சல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வெளியே வீசி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

    இந்த விபத்து குறித்து சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அந்த கடைகளுக்கு சோலார் பேனல் மூலமாகவே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதில் இருந்து மின்கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே யாரேனும் பீடி பற்றவைத்தபோது நெருப்பு பொறி பறந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த விபத்தில் லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×