search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாமிரபரணி ஆற்றங்கரை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
    X

    தாமிரபரணி ஆற்றங்கரை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் காலை முதல் 3 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த 2 வாரங்களுக்கு பிறகு திடீரென பெய்த கனமழையால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கயத்தாறு ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. கடம்பூரில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு 14 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை ஆற்றங்கரையோர மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லாமல் இருக்கவும் கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேர்வலாறு, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிக பட்சமாக மணிமுத்தாறு அணை பகுதியில் 29 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.52 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,273 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,524 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 114.19 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2,962 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,540 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக களக்காடு மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகமாக இருப்பதால் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அம்பை, நாங்குநேரி, களக்காடு, கன்னடியன் மற்றும் நெல்லை, பாளையிலும் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சற்று கனமழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 12 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த 2 அணைகளும் இன்று காலை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டின. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 66.28 அடியை எட்டியுள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்து குளித்து சென்றனர். அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×