என் மலர்
திருநெல்வேலி
- பொதுக்கூட்டத்திற்கு தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நெல்லை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பெரிய பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ராஜேந்திரன், முத்துப்பாண்டி, ஒன்றிய, நகர செய லாளர்கள், நிர்வாகிகள், பேச்சாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் செய்திருந்தார்.
- ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி-பாளை சாரதா மகளிர் கல்லூரி இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர்.
- 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர். முதல் நாள் நிகழ்ச்சி சாரதா மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கியது. ஆங்கிலத்துறை தலைவர் ரேணுகா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.
கல்லூரிமுதல்வர் கமலா, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜாஸ்மின் ஆண்ட்ரூஸ் கவுரவ உரையாற்றினர். பேராசிரியர் பிரபாகர் மாநாட்டின் தலைப்பான "நாடு கடந்த இலக்கியத் தன்மை" பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் அரசியல் அமைப்புகளை நாம் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதில் 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் அழகிய நாயகி நன்றி கூறினார்.
2-வது நாள் நிகழச்சியில் சிறப்பு விருந்தினரான பேராசிரியர் டெரிபுல்லர் "சமகால இலக்கியத்தில் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் பற்றிய பிரதிபலிப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சவுஜீனியா தர்ம சங்கரன் (ஓய்வு) சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.
- கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது நேற்று மாலை திடீர் என கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் சுமார் 30 மீட்டர் அளவிற்கு வெளியேறியது. இதன் காரணமாக கடற்கரையில் நின்ற மின்கம்பம் சரிந்தது. மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மீன்பிடி பைபர் படகுகளை கடல் அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றது. கடற்கரையில் சுமார் 7 அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் வலைபின்னும் கூடம் (பண்டகசாலை) இடிந்துவிழுந்தது. எந்த நேரத்திலும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அங்குள்ள ஆலய ஒலிபெருக்கி மூலம் மீனவர்கள் அழைக்கப்பட்டனர். பின்பு பங்குதந்தை வில்லியம் தலைமையில் நடந்த ஊர் கூட்டத்தில் நாளை (ஞாயிற்றுகிழமை) காலை கூடுதாழை விலக்கில் (திருச்செந்தூர்- உவரி ரோடு) பங்குதந்தை தலைமையில் தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தூண்டில் வளைவு அமைக்க அரசை வலியுறுத்தி கூடுதாழை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- வாகனங்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்தது.
நெல்லை:
நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தினந்தோறும் 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிர்வாகத்தில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்து செல்லப்படும் நிலையில், அந்த வாகனங்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து நேற்று இரவு ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்கு பால் கொண்டு செல்லும் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் கணக்கில் வராத 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சீனிவாசன் ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடுமேன் மன்சூர், கிளார்க் ஆசை தம்பி, பால்முகவர் ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம், எத்தனை நாட்கள் இந்த மாதிரி பால் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், ஆவின் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி பகுதியில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத் தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகம் கொண்ட தெருக்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் முகாம் நடந்தது.
இதனை கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நடமாடும் முகாம்கள் மூலம் அதிகம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு மருத்துவ முகாம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு முகாம்களிலேயே தேவை யான மருந்து, மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் சளி பரிசோதனை செய்ய வும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது தவிர சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் நெல்லை மண்டலம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர்கள் நாராயணன், பரணிதரன், பாப்புராஜ், குமார் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செய்யது தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், காசிராஜ், முருகன் செந்தில் வேல், கிளாட்வின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில பொரு ளாளர் தமிழ் நிறைவு உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களை கடந்த 2002- 2006-ம் ஆண்டு வரை பணிநீக்கம் செய்தனர். எனவே 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், பணி காலத்தில் உயிரிழந்த வர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நெற்றியில் பட்டை நாமம் அடித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
- மாநிலம் முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு) த.ச.சஜின் தலைமையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்க கட்டுமான பணி வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரரான பிரியா என்ஜினீயரிங் புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 100 தொழிலாளர்களும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
- குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
களக்காடு:
களக்காடு அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில காங்கிரஸ் பொருளா ளருமான ரூபி மனோகரன் குளிரூட் டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், காமராஜ், துரைராஜ், வில்சன், துரை, யோசுவா, பீர்முகம்மது, பெருமாள்ராஜ், இளைஞர் காங்கிரஸ் விபின் உள்பட பலர் சென்றனர்.
- பாலசுப்பிரமணியன் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் பாலசுப்பிரமணியன் லிப்ட் கேட்டுள்ளார்.
களக்காடு:
நெல்லை, பாளை குலவணிகர்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
நேற்று முன் தினம் இவருக்கு இரவு பணி என்பதால் நெல்லையில் இருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கிருந்து மில்லுக்கு செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் லிப்ட் கேட்டார். அவர்களும் பாலசுப்பிரமணியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி மில்லுக்கு சென்றனர்.
மில் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து பாலசுப்பிரமணியன் இறங்கியதும், 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 தருமாறு கேட்டனர். அதற்கு பாலசுப்பிரமணியன் மறுத்தார். எனினும் அவர்கள் அவரை மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ரேசன்கார்டு, பான்கார்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிர மணியன் இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியிடம் செல்போன் மற்றும் ஆவணங்களை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு முன்பு இன்று வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் சேர்மன் ஜவகர்லால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குழுமத்தின் துணைத்தலைவர் கார்த்திகேயன், செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மைக்கேல், வக்கீல்கள் ராம்நாத், சிவசுப்பிரமணியன், பரிமளம், ராஜா முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் நன்றி கூறினார்.
- புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் ராதாபுரமானது கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பணை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டபுளி ஆகிய கிராமங்களுக்கு நடுநிலையான இடத்தில் அமைந்துள்ளது.
ரூ. 1.60 கோடி
இதனால் மீன்வள மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் அலுவலகம் மீனவ கிராம மக்களுக்கு பயன்படும் வண்ணம் ராதாபுரம் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்தது.
இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.
அலுவலகம் இங்கு அமைவதால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அரசு அலுவலர்கள் மூலம் தெரிந்து திட்டம் கிடைக்க எளிமையாக இருக்கும். மீனவர்களின் பயிற்சி மற்றும் கூடங்கள் அமைக்க சிறப்பாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, பரிமளம், மவுளின், இசக்கிபாபு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், ராதிகா சரவணகுமார், மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ராமையா, அகஸ்டின், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஷ்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், காமில், எழில் ஜோசப், குமார், டென்னிஸ், முத்தையா, கோகுல், வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மதுபோதையில் இருந்த தலைமை காவலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பாளை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் பைக்கில் வேகமாக வந்தது குறித்து போலீசார் கேட்டறிந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த தலைமை காவலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பிரச்சினைகளை தடுப்பதற்காக போலீசார் தலைமை காவலரை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்ததற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே தலைமை காவலர் மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.






