என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பழனி சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 52). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனி ஊருக்கு அருகே உள்ள இலந்தோப்பு பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது 2 மாடுகள் மற்றும் 1 கன்று குட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலையில் அங்கு சென்று பார்த்தபோது அவரது பசுமாடுகள் மற்றும் கன்று குட்டியை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார்.
    • பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடப்பட்டது.

    நெல்லை:

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கீழநத்தம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் பலவேசம் இசக்கி பாண்டி, சுசீலா, பரமசிவன், உலகநாதன், சுரேஷ், ராமலட்சுமி, பூர்ணிமா, ராஜம்மாள், பாரதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர் முருகன், ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் புளியமரம், செம்மரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்தின் கீழ் வரும் அனைத்து பகுதிகளிலும் சுமார் 300 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    • யுவராஜாவுக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
    • யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    வள்ளியூர்:

    பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்த யுவராஜா (வயது 31) இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனையாக 30 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர்.

    திருமணத்தின்போது பெண் வீட்டார் 16 பவுன் நகை போட்டதாகவும், மீதி நகையை வாங்கி வர சொல்லி யுவராஜா கொடுமைப்படுத்தியதாக வும், யுவராஜாவின் மனைவி வள்ளியூர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.அதன்படி வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.
    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.

    நெல்லை:

    ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில்அதிகமான மக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.

    உடன்குடி, மெஞ்ஞான புரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல்லைக்கு செல்லும் போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தட பயணத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.

    அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் நண்பகல் நேரத்தில் ஓட்டு னர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது. நெல்லையில் இருந்து புறப் படும் பஸ் ஸ்ரீவைகுண்டத் தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ் நிலை யத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.

    இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படு கின்றனர். இதனால் நண்பகல் நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அவல நிலையை போக்கவும், நண்பகலில் இடைப்பட்ட நேரத்தில் ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இதுபற்றி பயணி ஒருவர் கூறியதாவது:-

    பிற்பகல் நேரத்தில் 3 மணி நேரம் நெல்லை-உடன்குடிக்கு பஸ் போக்கு வரத்து தடை செய்தால் பயணிகள் சார்பில் உடன் குடியில் பஸ்களை சிறை பிடிக்கும் போராட்டம் நடை பெறும் என்று கூறினார்.

    • விஜயாபதி பஞ்சாயத்தில் முடிவடைந்த பணிகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் திறந்து வைத்தார்.
    • ஆவுடையாள்புரத்தில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி பஞ்சாயத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.மேலும் முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார்.விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். மேலும் ஆவுடையாள்புரத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும், தோமையார்புறத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் சாலைக்கும், விஜயாபதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை பாலன், மெளலின், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சகாயராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட பிரதிநிதி கோவிந்தன்,வேலப்பன்,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப் பாளர் கேனிஸ்டன், நவ்வலடி சரவண குமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலன், ராதாபுரம் அரவிந்த்,சிதம்பரபுரம் முருகன், சந்தியாகு, ராஜேஷ், ரீகன், யேசுதாஸ், சிவசுப்ரமணியம், அய்யப்பன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், எழில் ஜோசப், குமார், காமில், சாகுல் ஹமீது, முத்தையா, கோகுல், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அலெக்ஸ் செல்வன் லாவகமாக பிடித்தார்.
    • பிடிபட்ட பாம்பு திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் ஒரு மலைப்பாம்பு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் செல்வன் சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் வனஅதிகாரி யோகேஸ்வரன் தலைமையிலான வனகாவலர்கள் செல்வமணி, அண்ணாதுரை ஆகியோர் பிடிபட்ட பாம்பை திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். அப்போது ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் ஆல்வின் சேவியர், ஷேக், ஆப்தமிரா சேம் சகாப்தின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறினார்.
    • அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பா.ஜனதா, அ.தி.மு.க. இடையே ஏற்பட்டு வரும் கருத்து மோதல்களால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறினார்.

    அதே நேரத்தில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மூத்த தலைவர்கள் அவரது கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் என்ற பெயரில் பா.ஜனதா கட்சி கொடி கலரில் வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அதில், எங்கள் நரேந்தி ரரே தனித்து வா... தமிழகத்தில் தாமரையை 40 இடங்களிலும் மலர செய்வோம் என்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம், பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்போம் என்று மேலிடத்தை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லையை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவர் மாநில தலைவர் பதவி நமக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு எதிரானவர்கள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • ரெயில்வே கேட் மூடப்படும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • காவல் துறை சார்பில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் பாளை குலவணிகர்புரம் பகுதி போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

    அணிவகுக்கும் வாகனங்கள்

    இதன் வழியாக செல்லும் ரெயில்வே பாதை வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் சென்று வருகிறது. தினமும் ஒவ்வொரு முறை ரெயில் செல்லும் போதும் இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்படும். அப்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் முதல் பாளை பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் புதிய பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பாளை மத்திய சிறை யில் இருந்து எதிர்புறம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்திய சிறையில் இருந்து மேலப்பாளையம் செல்ல சாலை உள்ளது. ரெயில்வேகேட் மூடி திறக்கப்படும் போது வலது புறம் வாகனங்கள் செல்வ தால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்க ரெயில்வே கேட்டில் இருந்து வலது புறம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ள னர். இதனால் பாளை பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறை கைதிகள் பல்க் வரை சென்று பின்பு அங்கிருந்து திரும்பி மேலப்பாளையம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    • வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

    இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற் பொறியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது 28-வது வார்டு கவுன்சிலர் சந்திர சேகர் பொதுமக்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    28-வது வார்டுக்குட்பட்ட பாரதியார் தெருவில் உள்ள ரேஷன் கடையின் மேல் பகுதியில் காசிபிள்ளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மேற்கூரை பெயர்ந்து காணப்படு வதுடன், மாடிக்கு செல்லும் படிகள் மோசமாக உள்ளது.எனவே அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும்.

    டவுன் வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே 4 பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது. பூதத்தார் சன்னதி தெருவில் உள்ள கழிவுநீர் ஓடைகள் பழு தடைந்து சாலைகளில் கழிவு நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் சுந்தரா புரம் ஆர்.எஸ்.ஏ. நகர், வடக்கு கரையிருப்பு உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லத் துரை, அந்தோணி, பண்டாரம் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் இருந்து மதுரை மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. எனவே உடனடியாக அங்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொம்பாபிஸ் நிழற்குடை பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதனை உடனடி யாக கட்டி முடிக்க வேண்டும். சிவகுமார் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் அங்கு முட்புதர்கள் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். இதனால் உடனடியாக அதனை அகற்றி தூய்மை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • வேல்குமார் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த இட்டேரி பாலாஜி கோல்டன்சிட்டியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருட்டு

    கடந்த 19-ந்தேதி இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அங்கு இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.

    இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிதாஸ் என்பவரது வீட்டில் இருந்த 10 கிராம் தங்கநகை மற்றும் சில்வர் பொருட்களை மர்மநபர்கள் அதே நாளில் திருடிச்சென்றனர்.

    ரூ.4 லட்சம் பணம்

    பின்னர் அங்குள்ள வெங்கடேஷ் என்பவரது வீட்டுக்கும் அந்த கும்பல் சென்றுள்ளது. அப்போது வெங்கடேஷ் தனது மனைவி முத்துலெட்சுமியுடன் குமரிக்கு சென்றுவிட்டார். இதனால் ஆட்கள் யாரும் அங்கு இல்லை என அறிந்த அந்த கும்பல் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது.

    அங்குள்ள பீரோவில் இருந்த 74 கிராம் தங்கநகைகள் மறறும் ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் அவர்கள் வந்து பார்த்தபோது 3 வீடுகளிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    இதுதொடர்பாக முன்னீர் பள்ளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்வே பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது.

    தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.

    இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

    அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர், கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரெயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனைத்து ரெயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரெயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆன் லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுனர் ரவியை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா மற்றும் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×