என் மலர்
திருநெல்வேலி
- தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வர் கே.பழனி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். எஸ்.மகேஸ்வரன், கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து 2-ம் அமர்வில் அன்புசெல்வன் வரவேற்று பேசினார். நமது நம்பியாறு அமைப்பு தலைவர் விஜயராஜன் வாழ்த்தி பேசினார். டாக்டர் விதுபாலன் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நமது நம்பியாறு அமைப்பின் செயலர் எம்.ஜான் வின்சன்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறை மற்றும் நமது நம்பியாறு அமைப்பு இணைந்து செய்து இருந்தது.
- இன்று நள்ளிரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளுகிறார்.
- இரவு 8 மணிக்கு அய்யா வழி ஆன்மீக வழிபாடு சிவசந்திரனின் கச்சேரி நடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட தலைமைபதி என்றழைக்கப்படும் அம்பை அய்யனார் குளம் துலங்கும்பதி துவரயம் பதியில் பங்குனி பெருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் முன்பு நடப்பட்டுள்ள 75 அடி உயர ராஜ கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
விழாவை தொடர்ந்து இன்று நள்ளிரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளுகிறார். தொடர்ந்து நாளை முதல் வருகிற 3-ந்தேதி வரை தினமும் காலை பணிவிடையும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் நடக்கிறது. மேலும் தினமும் ஒரு வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி வருதலும் நடக்கிறது.
வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பாபநாசத்தில் இருந்து செண்டைமேளம், நையாண்டி மேளம் முழங்க அய்யா ஆஞ்சநேயர் வாகனத்தில் முன்னே வர யானை மீது சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வருதலும், அதன்பின்னர் அன்னதானமும், இரவு 8 மணிக்கு அய்யா வழி ஆன்மீக வழிபாடு சிவசந்திரனின் கச்சேரி நடக்கிறது.
வருகிற 3-ந்தேதி (திங்கட் கிழமை) அய்யா சின்ன தேரில் சிங்கார மாய் உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம், இரவு அன்னதர்மமும், அதிகாலை 2 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் வந்தபின், கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம் பதி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- நகையை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
- ரஞ்சித், வினோத் மற்றும் தம்பதியான உதயபிரகாஷ்-சுபா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள் மிக்கேல். இவரது மனைவி உஷா(வயது 68). அருள் மிக்கேல் இறந்து விட்டதால் உஷா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது வீட்டில் அருகே உள்ள பல்லவிளை பகுதியை சேர்ந்த சேவியர் மனைவி ஜெயா என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் உஷா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரது உடலை பிரீசர் பாக்ஸில் வைத்தனர். அப்போது அவரது கழுத்தில் காயமும், அவரது 11 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), உஷாவை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.
அந்த நேரத்தில் அங்கு வந்த ரஞ்சித்தை பிடித்து சோதனை செய்தபோது அவரது பையில் நகை அடகு வைத்த ரசீது இருந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
உஷா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ரஞ்சித் தனது நண்பரான அதே பகுதியை வினோத்துடன் (18) சென்றுள்ளார். அங்கு இருந்த உஷாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.
அப்போது உஷா சுதாரித்துக்கொண்டு தடுக்க முயன்றுள்ளார். இதில் அவரது கழுத்தில் சங்கிலி குத்திக்கிழித்ததில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
உடனே நகையை எடுத்துக்கொண்டு ரஞ்சித் வெளியேறி உள்ளார். அந்த நகையை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த நகையை கடைக்கு சென்று அடகு வைக்க கொடுத்தால் சந்தேகம் வந்துவிடும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான உதயபிரகாஷ் என்பவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். மேலும் நகையை அடகு வைத்து கொடுத்தால் பணம் தருவதாக கூறி உள்ளார்.
அதற்கு ஆசைப்பட்டு உதயபிரகாஷ் தனது மனைவி சுபாவுடன் சேர்ந்து நகையை வள்ளியூரில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் அடகு வைத்து கொடுத்தது தெரியவந்தது.அதேநேரத்தில் உஷா மயக்க நிலையில் இருப்பதாக ரஞ்சித் நினைத்து கொண்டு இருந்த நிலையில், அவரது வீட்டுக்கு போலீஸ் வந்திருப்பதாக தகவல் வந்ததால் எதுவும் தெரியாதது போல் சென்று பார்த்துள்ளார்.
அப்போது தான் போலீசார் சந்தேகம் அடைந்து ரஞ்சித்திடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து ரஞ்சித், வினோத் மற்றும் தம்பதியான உதயபிரகாஷ்-சுபா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
- இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.
நெல்லை:
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்தி கேயன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழி ஊக்குவிக்கப் படுகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி தமிழ் மொழி வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் தங்களை கட்டமைத்து கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் இது 2-வது நிகழ்ச்சி. இங்கு மிக சிறந்த பேச்சாளர்கள் உள்ளார்கள். அவர்களது பேச்சை உள்வாங்கி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் வேலூர் புரட்சி 1806 குறித்தும், ஆறுமுக தமிழன் தமிழ் பண்பாடும், தொன்மையும் என்பது குறித்தும் பேசினார். கல்லூரி முதல்வர் உஷா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியையொட்டி அங்கு கருத்தரங்கம், கைவினை கண்காட்சி அமைக்கப் பட்டிருந்தது. மாவட்ட நூலகம் சார்பில் புத்தக கண்காட்சியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியும், வங்கிகளில் கடனுதவி பெறுவது எப்படி என்பது குறித்தும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த கைவினை பொருட்கள் இடம் பெற்றிருந்தது.
அதனை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து வ.உ.சி. மைதா னத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
- தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
- டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
வள்ளியூர்:
தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்குதந்தையுமான ஆர்.ஜேசுதுரை ஜாண்சன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்தபனை அமைதி இல்லம் இயக்குனர் தந்தை ரெக்ஸ், வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலய உதவி பங்குதந்தை, புனித பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டிசலேத் ஜெயந்தி, திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அக்ஸிலியா, ஊராட்சி மன்ற தலைவி முத்தரசி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பிரேமா ஆகியோர் பங்கேற்று பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.லாரன்ஸ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை அமலா வரவேற்றார். ஆசிரியை பிரபா நன்றி கூறினார்.
- இளங்கோ களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.
- அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது70). இவர் களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் அதிகாலை ஆராதனைக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வராததால் சபை மக்கள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
பால் இளங்கோ சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
பால் இளங்கோவின் இறப்பு குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழ்வாதார கோரிக்கை களை தாமதப்படுத்துவதாக கூறி தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
- நெல்லை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
வாழ்வாதார கோரிக்கை களை தாமதப்படுத்துவதாக கூறி தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சான்றிதழ் வழங்குவது, பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் கூறும் போது, வருவாய்த் துறையில் துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கும் பட்டியலை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதால் பலர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பே ஓய்வு பெறும் நிலை உள்ளது.
இதே போல் பல ஆண்டு களாக துணை தாசில்தாராக பணி செய்து வருபவர்கள் பட்டியல் திருத்தங்களின் காரணமாக முதல் நிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்யும் நடைமுறையை மாற்றம் செய்ய வேண்டி வருவாய் துறை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் பல மாதங் களாகியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் உடனடியாக இதில் தலை யிட்டு வருவாய்துறை அலுவ லர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்.
இதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வருவாய் துறை அலுவல கங்களில் பெரும்பாலான அலுவலர்கள் வராததால் அலுவலகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
- மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்தறியும் விதமாக அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மாணவர்களுக்கு வடிவங்கள், நிறங்கள், எண்கள், தமிழ், ஆங்கில எழுத்து அட்டைகள், பழங்கள், காய்கறிகளின் மாதிரிகள் போன்றவற்றை கொண்டு அறிவுத்திறன் சோதித்து அறியப்பட்டது.
யு.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிய வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடப்பட்டது. தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முதல்வரை சந்தித்து மாணவர் சேர்க்கையை உறுதி செய்த பின்னர் மனநிறைவுடன் சென்றனர்.
- நாங்குநேரி ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
- அந்த வழியாக வந்த ெரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
களக்காடு:
நாங்குநேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் டேனியல் சேகர். இவரது மனைவி சகிலா(வயது 55). இவர்களது மகள் மேரி செல்சியா(23).
டேனியல் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சகிலா வடக்கன்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதியில் தனது மகளுடன் சகிலா வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலையில் சகிலாவும், செல்சியாவும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
உடனே சகிலாவும், அவரது மகளும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் ரத்தம் சொட்ட சொட்ட கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி 2 பேரையும் மிரட்டினர்.
பின்னர் அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். உடனே சகிலா பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரிவாளில் இருந்து விழுந்த ரத்தத்தை சோதனை செய்தபோது கோழியின் ரத்தம் என்பதும், வீட்டில் இருப்பவர்களை மிரட்டுவதற்காக அதனை அரிவாளில் தடவி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- அந்தோணி தாஸ் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
- நெல்லைக்கு வந்து கடன் தொகையை திருப்பி கேட்பதற்காக ஆனந்த மெர்லின் வீட்டுக்கு அந்தோணி தாஸ் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அந்த தொடக்கப்பள்ளியில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆனந்த மெர்லின்(வயது 48) என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் மெர்லினுக்கு செல்போன் செயலி மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராணுவ வீரரான அந்தோணி தாஸ்(45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி 2 பேரும் நேரில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் இருந்து கடனாக ரூ.20 லட்சம் வரை ஆனந்த மெர்லின் பெற்றுக்கொண்டதாகவும், அதனை தற்போது திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சமீபத்தில் அந்தோணி தாஸ் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தோணி தாஸ் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் நேற்று நெல்லைக்கு வந்து கடன் தொகையை திருப்பி கேட்பதற்காக ஆனந்த மெர்லின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அவரை தேடி கருங்குளம் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது கடன் தொகையை அந்தோணி தாஸ் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தோணி தாஸ் ஆத்திரம் அடைந்து பள்ளி வளாகத்தில் வைத்து ஆனந்த மெர்லினை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெர்லின் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும், ஆனால் அவர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் இன்று பள்ளியில் வைத்து தாக்கியதாகவும் கூறி புகார் மனு அளித்தார்.
இதையடுத்து அவரது புகாரின்பேரில் இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323, 506(1) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டம் போதிய மழை இல்லாததால் வறட்சியாக உள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் சமூதாய நலக்கூடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இதில் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
வேளாண் பட்ஜெட்டில் பரவலாக அதிக திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தபடாமல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கி றோம்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. தற்போது வரை அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி யில் தான் பா.ஜ.க. உள்ளது.இந்திய அளவில் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி.
உலக அளவில் அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கொண்ட கட்சி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. கீழ் மட்டத்தில் ஒன்றிண்டு பேர் அங்கொன்றும், இங்கொன்று மாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணிகட்சிகள். தேர்தல் அறிவிக்கும்போது பிரச்சனைகள் இருக்கலாம். வேட்பாளர்கள் அறிவிக் கும்போது ஒன்றுபட்டு வேலைபார்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறி னார்.






