என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக பெண்ணை கொன்ற கல்லூரி மாணவர் கைது
    X

    புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக பெண்ணை கொன்ற கல்லூரி மாணவர் கைது

    • நகையை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
    • ரஞ்சித், வினோத் மற்றும் தம்பதியான உதயபிரகாஷ்-சுபா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள் மிக்கேல். இவரது மனைவி உஷா(வயது 68). அருள் மிக்கேல் இறந்து விட்டதால் உஷா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இவரது வீட்டில் அருகே உள்ள பல்லவிளை பகுதியை சேர்ந்த சேவியர் மனைவி ஜெயா என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் உஷா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரது உடலை பிரீசர் பாக்ஸில் வைத்தனர். அப்போது அவரது கழுத்தில் காயமும், அவரது 11 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), உஷாவை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

    அந்த நேரத்தில் அங்கு வந்த ரஞ்சித்தை பிடித்து சோதனை செய்தபோது அவரது பையில் நகை அடகு வைத்த ரசீது இருந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    உஷா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ரஞ்சித் தனது நண்பரான அதே பகுதியை வினோத்துடன் (18) சென்றுள்ளார். அங்கு இருந்த உஷாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

    அப்போது உஷா சுதாரித்துக்கொண்டு தடுக்க முயன்றுள்ளார். இதில் அவரது கழுத்தில் சங்கிலி குத்திக்கிழித்ததில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

    உடனே நகையை எடுத்துக்கொண்டு ரஞ்சித் வெளியேறி உள்ளார். அந்த நகையை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த நகையை கடைக்கு சென்று அடகு வைக்க கொடுத்தால் சந்தேகம் வந்துவிடும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார்.

    அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான உதயபிரகாஷ் என்பவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். மேலும் நகையை அடகு வைத்து கொடுத்தால் பணம் தருவதாக கூறி உள்ளார்.

    அதற்கு ஆசைப்பட்டு உதயபிரகாஷ் தனது மனைவி சுபாவுடன் சேர்ந்து நகையை வள்ளியூரில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் அடகு வைத்து கொடுத்தது தெரியவந்தது.அதேநேரத்தில் உஷா மயக்க நிலையில் இருப்பதாக ரஞ்சித் நினைத்து கொண்டு இருந்த நிலையில், அவரது வீட்டுக்கு போலீஸ் வந்திருப்பதாக தகவல் வந்ததால் எதுவும் தெரியாதது போல் சென்று பார்த்துள்ளார்.

    அப்போது தான் போலீசார் சந்தேகம் அடைந்து ரஞ்சித்திடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

    இதையடுத்து ரஞ்சித், வினோத் மற்றும் தம்பதியான உதயபிரகாஷ்-சுபா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×