என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வைணவ தலங் களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    முன்னதாக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு யாக வேள்விகளும், அதனைத் தொடர்ந்து திக்பந்தனமும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடி மரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை 2 வேளைகளிலும் சுவாமி சிறப்பான அலங்காரத்தில் திருவீதி உலாவும், மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    இன்று கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    • கோடை வெயிலால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் தலையணை நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை முதலே தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • முருகானந்தம் நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
    • நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம் பாட்டை சேர்ந்த வர் முருகானந்தம் (வயது 36). இவர் வள்ளியூரில் உள்ள ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவில் வேலை முடிந்ததும், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். நாங்கு நேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் தென்னிமலை அருகே சென்ற போது, எதிரே வந்த கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகானந்தம் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கலந்தபனையை சேர்ந்த ஸ்டான்லி (30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
    • வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    நெல்லை:

    ஆசியா விலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெயரை பெற்றது நெல்லை சந்திப்பில் இருந்து டவுனை நோக்கி செல்லும் பாலமாகும். நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் இந்தப் பாலத்தை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் ரூ. 2 கோடியே 85 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் பாலத்தின் கீழ் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கொக்கிரகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 63) என்ற முதியவர் தலையில் கல் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரடுக்கு மேம்பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    களக்காடு:

    நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.இதனையொட்டி வானமாமலை பெருமாள், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கருடன் சேஷம், அனுமன், சிம்மம், கிளி, யானை, குதிரை அன்னம், தங்க சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவரமங்கை தயாருடன் எழுந்தருளிய வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    இதனையொட்டி காலையில் பெருமாள் தாயாருடன் தேரில் எழுந்தருளினார். நாங்குநேரி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பெருமாள் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

    • முகாமில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மிலிட்டரி கேண்டீன் முதுநிலை மேலாளர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கேண்டீன் மேலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஷிபா மருத்துவமனையின் சிறப்பு பிரிவு டாக்டர்கள் பயாஸ், பிரியதர்ஷினி, அகம்மது யூசுப், பாலா, சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., எலும்புதாது அடர்த்தி பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முன்னதாக ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி பேசுகையில், முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான முதல் பாலி கிளினிக் நெல்லையில் தொட ங்கப்பட்டு அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு ஷிபா மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த திட்டம் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ சேவை ஷிபா மருத்துவமனை சார்பில் தொடர்ந்து செயல்படு த்தப்படும் என்று கூறினார்.

    முகாமில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் செல்லப்பாண்டி, செயலாளர் செல்லத்துரை, துணைத்தலைவர் வெள்ளத்துரை, பொரு ளாளர் மோகன்ராம், மருத்துவமனை மேலாளர் சுதர்ஷன், மார்க்கெட்டிங் பிரிவு ஆண்ட்ரூ, ஜானகி ராம், சுரேஷ், வீரக்குமார், ராதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நலச்சங்க ஒருங்கி ணை ப்பாளர் தேவ துணை செய் திருந்தார்.

    • இசக்கிமுத்து சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது.

    களக்காடு:

    திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). இவர் பரப்பாடி அருகே உள்ள இலங்குளத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று விநாயகர்புரம் காலனியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பலகையை அறுக்கும் மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருந்துடையார்புரத்தில் 3 மின் கம்பங்கள் முற்றிலும் சேதமானது.
    • கமிஷனர் பங்களா அருகில் மரக்கிளைகள் சரிந்து மின் தடங்கள் ஏற்பட்டுள்ளது

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் கோடைமழை காரணமாக நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை உடனுக்குடன் போர்கால அடிப்படையில் மறு சீரமைப்பு பணிகள் மேற் கொள்ள நெல்லை மின் பகிர் மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவிட்டார்.

    மின் கம்பங்கள் சேதம்

    அதன் அடிப்படையிலே நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் மின்பொறியாளர்கள், அனைத்து பணியாளர்கள், ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள ப்பட்டு நேற்று இரவோடு இரவாக மின் வினியோகம் வழங்கப்பட்டது.

    இன்று காலை ஏற்பட்ட நெல்லை சந்திப்பு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட குருந்துடையார்புரத்தில் மரம் முற்றிலும் சரிந்து 3 மின் கம்பங்களும், மின்பாதைகளும் முற்றிலும் சேதமானது.

    சீரமைப்பு பணிகள்

    மகராஜாநகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கமிஷனர் பங்களா அருகில் மரக்கிளைகள் சரிந்து மின் தடங்கள் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பிரிவு 2 அலுவலகத்துக்கு உட்பட்ட மருதம்நகரில் ஏற்பட்ட மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது ஆகியவை போர்க்கால அடிப்ப டையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    அப்போது உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் உமா மகேஸ்வரி, வெங்க டேஷ், கார்த்திக்குமார் ஆகியோர் அந்த பகுதியில் முகாமிட்டு பணிகளை செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி சுவாமி நெல்லை யப்பர், காந்திமதி அம்பாள் கோவில் நடை இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் தனி தனியாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூல விமா னங்களுக்கு தனித்தனியாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள, பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    • திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • வருகிற 4-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    நெல்லை:

    பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தேரோட்டம்

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

    கடந்த 29-ந்தேதி மாலை சுவாமி, அம்பாள் அன்ன வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் 63 நாயன்மார்கள் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற்றது. இதை பெண்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட திரளானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நாளை தீர்த்தவாரி

    தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு பஜார் வழியாக மேலரதவீதி சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) வண்ணார்பேட்டை தாமிரபரணி நதிக்கரை தீர்த்த கட்டத்தில் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.

    மேலும் வருகிற 4-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது.
    • எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கழிவுநீரோடை

    நெல்லை மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்டது பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெரு. இந்த தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது. ஆனால் அதனை மூடி போட்டு மூடாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே அந்த பகுதியில் காங்கிரீட் மூடி அமைத்து சுகாதார சீர்கேடு இல்லாமல் பாதுகாத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிராஜா தலைமையில் வட்ட செயலாளர்கள் வீரராகவன், தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, இசக்கியப்பன், சுப்புராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

    பூங்கா

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 54- வது வார்டு தியாகராஜ நகர் எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்து இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறுவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், விளையாடவும் பயன்படுத்திக் கொள்ள விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இந்த கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மணிகண்டன் சென்றதாக கூறப்படுகிறது.
    • மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர். இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சுரேஷ் (27) என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு சேரன்மகாதேவியை கடந்து மேல கூனியூர் மீன் பண்ணை பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றார். அப்போது அங்கு பாலம் அமைக்கும் பணிக்காக ஒருவழியில் பாதை அடைக்கப்பட்டு மற்றொரு பாதை வழியாக இருபுறமும் செல்லும் வாகனங்கள் செல்கிற வகையில் சாலை திறக்கப்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை.

    இதனால் அந்த இடத்தில் அவர் திடீரென பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×